செவ்வாய், 14 ஜூன், 2016

உலக இரத்ததானம் செய்வோர் தினம்

இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (KarlLandsteiner) பிறந்த தினம் இன்று (ஜூன் 14). உலக சுகாதார ஸ்தாபனம், செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சர்வதேச சம்மேளனம், இரத்ததானமளிப்போர் அமைப்புக்களின் சர்வதேச நிறுவனம், இரத்தப் பரிமாற்றல் சர்வதேச கழகம் எனும் நான்கு பிரதான அமைப்புக்களினால் ஜூன் மாதம் 14ம் திகதி உலக இரத்ததானம் செய்வோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தினமானது இன்று 13 ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கிறது.

 இரத்த வகைகளைக் கண்டுபிடித்தவரும் அதற்காக நோபல் பரிசை பெற்றவருமான கார்ல் லேன்டஸ்டயின் என்பவரின் பிறந்த தினத்தையொட்டி இத்தினம் உலக இரத்ததானம் செய்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இத்தினம் இலவச இரத்ததானம் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு இலவச இரத்ததானம் செய்பவர்களைப் பாராட்டுவதாகவும் அமைவதுடன், எதிர்காலத்தில் இலவச இரத்ததானம் செய்வதை ஊக்குவிப்பதற்கு இது வாழ்க்கையின் பரிசாக இவ்வாய்ப்பு அமைந்துள்ளது.
தூய்மையான பாதுகாப்பான இரத்தத்தை போதியளவு வழங்குவது சிறந்த சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு ஒரு அத்திவாரமாக இருப்பதுடன் நோய்த் தொற்றை தடுப்பதற்கான ஒரு வலுமிக்க காரணியுமாகும். அநேகமான நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும் சுகாதார பராமரிப்பு மத்திய நிலையங்களிலும் இரத்தப் பற்றாக்குறை நிலவுகின்றது.
மலேரியாவினால் பீடிக்கப்பட்டோர் இரத்தச் சோகையுடையோர் மகப்பேற்று மாதர்கள் மத்தியில் இரத்தப்பற்றாக்குறை நிலவுவதால் அதுபல தாக்கங்களை உருவாக்குகின்றது. தூய்மையற்ற இரத்தத்தினால் எச்.ஐ.வி., கல்லீரல் வீக்கம், மலேரியா, கொடிய மேக நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவர்களின் பிணியை நீக்கவும் ஆரோக்கியமளிக்கவும் பாதுகாப்பான இரத்தம் அவசியமாகும் எனவே இரத்ததானம் செய்பவர் நல்லாரோக்கியமும், நோயற்றவராகவும் இருத்தல் அவசியம். உலக சுகாதார அமைப்புக்கள் 25 சதவீதமான இரத்தத்தையே வழங்கக்கூடிய நிலையில் உள்ளன. ஆரோக்கியமான மக்கள் ஒரு சிலரே இரத்ததானம் வழங்குகின்றர்.
சுயவிருப்புடன் எதுவிதபலனும் எதிர்பாராமல் இரத்ததானம் செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் பூகோள ரீதியில் பாதுகாப்பான இரத்தத்தை நிரம்பல் செய்ய உழைத்துவரும் சர்வதேச நிறுவனங்களின் ஆதரவுடன் இரத்ததான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. 18 வயதிற்கு மேற்பட்ட ஆனால் 60 இற்கு உட்பட்ட 50 கிலோகிராம் நிறைக்கு மேலான இருபாலாரும் இரத்ததானம் செய்யலாம். ஒருவர் நான்கு மாதத்திற்கு ஒருமுறை இரத்தம் வழங்கலாம்.
சாதாரண நிறைகொண்ட மனித உடம்பில் 5 முதல் 6 லீட்டர் வரையான இரத்தம் இருந்தபோதும் 350 மில்லி லீட்டர்வரையான இரத்தம் மட்டுமே இரத்ததானத்தின் போது எடுக்கப்படும். தானமாக வழங்கிய இரத்தத்தை இரு நாட்களுக்குள் உடம்பு மீண்டும் உற்பத்தி செய்துவிடுகிறது.
இதயநோய், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் தாக்கப்பட்டோர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்றவற்றில் பாதிக்கப்பட்டோர். இரத்ததானம் அளிக்க முடியாது. இதைவிட மதுபோதையில் உள்ளவர்கள், போதைப் பொருள் உபயோகிப்போரும் இரத்த தானம் செய்ய இயலாது.
இந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்கும் தேவையின் போது அது கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இரத்ததானம் செய்யக்கூடிய இன்னும் பல இலட்சக் கணக்கானோர் தேவைப்படுகிறார்கள். மனிதனுக்கு இன்னுமோர் மனிதனுக்கு வாழ்க்கையைப் பெற்றுக் கொடுக்கும் உயரிய இயலுமையுள்ளது.
அவ்வரிய இயலுமையால் இன்னும்பல மனிதர்களை வாழவைக்கும் உயர்ந்த மனிதர்கள் உலகில் உள்ளனர். தேசிய தேவையாக மற்றும் தேசிய கடமையாக கருதி இரத்த வழங்க தகுதியான சகல பிரஜைகளும் சுயவிருப்புடன் இரத்த வழங்கிடுவோம். ஒருதுளி இரத்தம் கொடுத்து ஓர் அரிய உயிரைக் காப்பாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக