மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து நிதிக்குழு மின்சார அமைச்சகத்துடன் கலந்துரையாடல்.
மாநிலங்களில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து திரு. என். கே. சிங் தலைமையிலான நிதிக்குழுவும் அதன் உறுப்பினர்களும் மூத்த அதிகாரிகளும் மத்திய மின்துறை அமைச்சர் திரு. ஆர். கே. சிங் தலைமையிலான மின்துறை அமைச்சக அதிகாரிகளுடன் விரிவான சந்திப்பை மேற்கொண்டனர். இந்த சந்திப்பு நிதி ஆணையம் 2020 - 2021 நிதியாண்டிற்கான தனது அறிக்கையில் மின் துறை குறித்து வழங்கியிருந்த பரிந்துரைகளின் தொடர்ச்சியாக நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான ஊரடங்கில் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவை எதிர்த்துப் போராட மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ஐந்து தவணைகளாக நிதியுதவி பற்றி அறிவித்ததில் முதல் தவணையில் இடம் பெற்றிருந்த 15 நடவடிக்கைகளில், நிதிநிலைமை மிக மோசமாக மாறியுள்ள மின்பகிர்வு நிறுவனங்களில் ரூ. 90,000 கோடி ரொக்கத் தொகை ஈடுபடுத்தப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டும், 2021 - 2026 நிதியாண்டு காலப்பகுதிக்கான நிதிக்குழுவின் அடுத்த அறிக்கையில் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றது. மின் துறையை தொடர்ந்து நெருக்கடியிலேயே ஆழ்த்தி வரும் பிரச்சினைகளை கணக்கில் கொண்டு மின்துறையில் சீர்திருத்தங்களை மேலும் வேகப்படுத்துவதற்கு பிரதமர் முன்னுரிமை அளித்துள்ளதை பிரதிபலிப்பதாகவே நிதியமைச்சரின் இந்த அறிவிப்புகள் இருந்தன.
