"உள்ளாட்சித்துறையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரைவில்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவார்"
- திரு. கே.என்.நேரு MLA அறிக்கை.
“கோவையில் சசிகலா உறவினர் இராவணனுக்கு” கால் கழுவி, சென்னையில் “திருமதி. சசிகலாவிற்கு சலாம்” போட்டு - அமைச்சர் பதவியை “காக்காய் பிடித்து” வாங்கிக் கொண்டு, இன்றைக்கு உள்ளாட்சித் துறையை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி “குறை குடம் கூத்தாடும்” என்பது போல் ஒரு வெற்று அறிக்கை வெளியிட்டு, எங்கள் கழகத் தலைவரை விமர்சனம் செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“சிறைக்குச் செல்லும் நாள் நெருங்கி விட்டது” என்ற பீதியில் “சில்லறைப் புத்தியுடன்” “சிறுமதியுடன்” அறிக்கை என்ற பெயரில் ஒரு “உளறலை” “ போக்கிரித்தனமான எண்ணவோட்டங்களை” வெளியிட்டிருப்பது அவரது அறியாமையைக்காட்டுகிறது. அடிக்கின்ற கொள்ளையில் - கொரோனாவின் தாக்கத்தையே மறந்து விட்டு - பூனை கண்ணை மூடிக் கொண்டது போன்ற மனநிலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் திரு வேலுமணி!
“விபத்தில்” கைப்பற்றிய அ.தி.மு.க.,வை தனது குடும்பக் கம்பெனியாக்கி - அ.தி.மு.க. அலுவலகத்தையும், அதன் பத்திரிகையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் திரு. வேலுமணிக்கு தி.மு.க. பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?
அமைச்சர் பதவியை தனது சகோதரரின் கம்பெனிகளுக்கும், தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கும் “அள்ளிக் கொடுக்கும்” பதவியாக மாற்றி - இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் உள்ள மூத்த “கொள்ளையராக” - முதல் “கொள்ளையராக” வலம் வரும் திரு. வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவரின் கொரோனா பேரிடர் காலத்து மக்கள் பணி குறித்துப் பேசிட என்ன அருகதை இருக்கிறது?