திங்கள், 15 பிப்ரவரி, 2021

தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் அதிமுக அரசு செலவில் விளம்பரம் செய்வதை நிறுத்தி, கட்சி நிதியில் செய்வதோடு - 'வெற்றுநடை போடும் தமிழகம்' என விளம்பரத்தை மாற்ற வேண்டும்.-கே.என்.நேரு MLA


 "தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் அதிமுக அரசு செலவில் விளம்பரம் செய்வதை நிறுத்தி, கட்சி நிதியில் செய்வதோடு - 'வெற்றுநடை போடும் தமிழகம்' என விளம்பரத்தை மாற்ற வேண்டும்"

- திமுக முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு MLA அவர்கள் அறிக்கை.

டெண்டரே விடாமல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் மக்களை ஏமாற்றியது போதாது என்று ஆட்சியை விட்டுப் போகப் போகின்ற நேரத்திலும் கூட ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆட்சி முழுவதும் வெற்று அறிவிப்புகள்! இப்போது தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவும் வெற்று அறிவிப்புகள் என ஒரு 'வெற்று நடை போடும்' முதலமைச்சராக திரு. பழனிசாமி இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

எங்கள் கழகத் தலைவர் அவர்கள் பாலக்கோடு சென்று திரும்பிய பிறகு நேற்றைய தினம் அவசர அவசரமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று திட்டங்களுக்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியிருக்கிறார். 320.5 கோடி ரூபாய் மதிப்பில் எண்ணேகொல் அணைக்கட்டிலிருந்து வலது மற்றும் இடது புறமாக புதிய கால்வாய் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து வலது புறம் 8.8 கிலோ மீட்டரிலிருந்து புதிய கால்வாய் மற்றும் ஜெர்தலாவ் கால்வாயின் 5.0 கிலோ மீட்டரிலிருந்து புதிய கால்வாய் அமைக்கும் திட்டங்கள் அவை. இவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா? இந்தத் திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் முடிவு செய்யப்பட்டு விட்டார்களா என எந்த விவரங்களும் இல்லை. இத்திட்டங்கள் தொடர்பான டெண்டர் டாக்குமென்டுகளைக் கூட டவுன்லோட் செய்ய முடியவில்லை.

இத்திட்டங்களுக்குத் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டு - வேலை உத்தரவும் வழங்கப்பட்டு விட்டதா? அது பற்றிய தகவல்களும் பொதுவெளியில் இல்லை!

ஆனால் அடிக்கல்லை மட்டும் நாட்டி வைத்து விட்டார் முதலமைச்சர் திரு. பழனிசாமி- அதுவும் காணொலிக் காட்சியில்!

ஆட்சியிலும் நாடகம் - தேர்தல் அறிவிப்பிற்கு முன்பும் நாடகம் என ஏமாற்றி தமிழக மக்களுக்குத் தனது பதவிக் காலத்தின் கடைசி நாள் வரை துரோகமே செய்வது என்று முடிவு செய்து முதலமைச்சர் பதவியில் திரு. பழனிசாமி செயல்படுவது கண்டனத்திற்குரியது.

இதுதான் அரசு செலவில் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பிரச்சாரத்தின் இலட்சணமா? ஆகவே இந்தப் பிரச்சாரத்தின் தலைப்பை “வெற்று நடை போடும் தமிழகம்” என்று மாற்றுங்கள். அப்படியொரு பிரச்சாரத்தைக் கட்சி நிதியை வைத்து நடத்திக் கொள்ளுங்கள். ஆனால் அரசு கஜானாவில் செலவழித்து - கோட்டையில் நின்று அரசு விழா நடத்தி - மக்களை ஏமாற்றாதீர்கள் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக