சனி, 13 பிப்ரவரி, 2021

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத சூழலை மனதில் கொண்டு அப்பணிகளை உடனடியாக முடிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.- கே.எஸ். அழகிரி


சென்னை மாநகர மக்கள் நெரிசலை தவிர்ப்பதற்காக, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அன்றைய தமிழக முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்களது கோரிக்கையின் பேரில், ரூபாய் 14 ஆயிரம் கோடி முதலீட்டில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் முதற்கட்டமாக சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீட்சியாக வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். 

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அவசர அவசரமாக பிரதமர் மோடி அழைக்கப்பட்டு விழா நடைபெற உள்ளது. வடசென்னை முகத்தை மாற்றப் போகும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, பயணிகள் பயன் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் தொடக்க விழா நடத்துவதனால் பயனிகள் கடுமையாக பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் குறிப்பாக, தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை அருகில் எந்த வேலையும் நடைபெறவில்லை. தியாகராயா கல்லூரி முதல் தண்டையார்பேட்டை வரை பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதைக்கு மேல்புறத்தில் எந்தவொரு பணிகளும் முழுமை அடையவில்லை. மேலும், ரயில் நிலையங்களில் படிக்கட்டு வசதிகள் செய்வதில் 80 சதவிகித பணிகள் முழுமை பெறவில்லை. மேலும், ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதி மக்கள் மிகவும் பின்தங்கிய தினக் கூலி தொழிலாளர்கள். ஆகவே, ஐம்பது சதவிகித கட்டண சலுகை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே மெட்ரோ ரயிலில் பயணிக்க இயலும். இல்லாவிடில் மெட்ரோ ரயில் இந்தப் பகுதி மக்களின் பயணத்திற்கு உதவாமல் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கும்.

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத சூழலை மனதில் கொண்டு அப்பணிகளை உடனடியாக முடிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மெட்ரோ ரயில்  நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, வடசென்னையில் வாழ்கிற ஏழை,எளிய, நடுத்தர மற்றும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் பயன்படுத்துகிற ரயில் திட்டப் பணிகள் முழுமை பெறாத நிலையில், ஏதாவது விபத்து ஏற்பட்டால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை எச்சரிக்கையாக கூற விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக