வியாழன், 25 பிப்ரவரி, 2021

NLC தேர்தல்: பாட்டாளிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாட்டாளி தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டதை தொழிலாளர்கள் உணர வேண்டும்.- அன்புமணி ராமதாஸ்

NLC தேர்தல்: பாட்டாளிகளின் உரிமைகளை

வென்றெடுப்பதற்கு பாட்டாளிகளை வெற்றி பெற செய்யுங்கள்!

 - அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்படுத்தற்காக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. பாட்டாளிகளின் உரிமைகளை தாரை வார்த்த, அடகு வைத்த அமைப்புகளை புறக்கணித்து விட்டு, பாட்டாளிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாட்டாளி  தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டதை தொழிலாளர்கள் உணர வேண்டும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக ஒன்று அல்லது இரண்டு தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுப்பதற்கான ரகசியத் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றிருக்க வேண்டிய தொழிற்சங்கத் தேர்தல், கொரோனா பரவல் காரணமாக, நாளை (25.02.2021) நடைபெறுகிறது.   இந்தத் தேர்தலை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சடங்காக தொழிலாளர்கள் பார்க்கக் கூடாது. மாறாக, தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகளை பாதுகாப்பதற்கும், இழந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கும் தகுதியானவர்களை, நேர்மையானவர்களை, பாட்டாளிகளின் நலனில் அக்கறை கொண்ட தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக தொழிலாளர்கள் பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் பாட்டாளி தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., தொ.மு.ச., ஆகிய 4 சங்கங்கள் தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்த சங்கம் கடந்த காலங்களில் பாட்டாளிகளின் உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்துள்ளன; எந்த சங்கங்கள் உரிமைகளை அடகு வைத்துள்ளன என்பது தான் எந்த தொழிற்சங்கத்துக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதற்கு அளவுகோலாக இருக்க வேண்டும். 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பாட்டாளி தொழிற்சங்கம், நான்காண்டுகளில் தொழிலாளர்கள் நலனுக்காக 4 ஒப்பந்தங்களை உருவாக்கியது. அவற்றில் முதல் ஒப்பந்தத்தின்படி இன்கோசர்வ் மூலம் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டனர் என்பது வரலாறு.

இரண்டாவது ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.1700 முதல் ரூ.1900 வரை கன்வேயன்ஸ் கிடைக்க வகை செய்தது, மூன்றாவது ஒப்பந்தத்தின்படி ஐந்தாண்டு கால ஊதிய மாற்று உடன்பாடு,  40% பொதுப்படி, குறைந்தவட்டியில் ரூ. 1 லட்சம் கடன் கிடைக்கச் செய்தது, நான்காவது ஒப்பந்தத்தின்படி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு ஊக்க ஊதியம், ஆண்டுக்கு ஒருமுறை போனஸ்,  வருகைப்பதிவு ஊக்கத்தொகை சேர்த்து 178% ஊதிய உயர்வு கிடைக்கச் செய்தது என்று பாட்டாளி தொழிற்சங்கக் காலத்தில் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தரப்பட்ட உரிமைகள் ஏராளமானவையாகும்.

ஆனால், பிற தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்த போது, புதிதாக எந்த உரிமையும் பெறப்படவில்லை. மாறாக பாட்டாளி தொழிற்சங்கக் காலத்தில் பெறப்பட்ட உரிமைகள் தாரை வார்க்கப் பட்டன. இந்தத் தொழிற்சங்கங்களின் காலத்தில் தான் அதிகாரிகள் நிலையிலும், தொழிலாளர்கள் நிலையிலும் ஏராளமான பிற மாநிலத்தவர்கள் திணிக்கப்பட்டனர். உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வேலை என்ற உரிமையைக் கூட பாதுகாக்க பிற தொழிற்சங்கங்கள் தவறி விட்டன என்பது தான் கொடுமை.

பாட்டாளி தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை பொறுப்பில் இருந்தால் மட்டும் தான் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று நினைத்தது கிடையாது. அண்மையில் 259 பட்டதாரி நிர்வாக பயிற்சியர் நியமனத்தில் தமிழர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதை முதன்முதலில் வெளிக்  கொண்டு வந்தது நான் தான் என்பதையும், அதற்காக முதன்முதலில் போராடியது பாட்டாளி தொழிற்சங்கம் தான் என்பதையும் அனைவரும் அறிவார்கள். என்.எல்.சி. அனல்மின்நிலையங்களில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டை போராடிப் பெற்றுத் தந்தது பாட்டாளி மக்கள் கட்சியும், பாட்டாளி தொழிற்சங்கமும் தான். இனி வரும் காலத்திலும் பாட்டாளி தொழிற்சங்கத்தால் தான் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பது உறுதி.

தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கம் வெற்றி பெற்றால், ஒருங்கிணைந்த  ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றி புதிய திட்டத்திற்கான ஒப்பந்தம், எஸ்.எம்.இ ஆபரேட்டர்களுக்கு இதுவரை மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்போம், தொழிலாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு,  சொசைட்டி மூலம் பணி நிலைப்பு செய்யப்பட்ட அனைவருக்கும் இரு ஊதிய உயர்வு, நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை, பணி நேரம் மாற்றியமைப்பு  உள்ளிட்ட வாக்குறுதிகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்து முடிக்கும் என வாக்குறுதி அளிக்கிறேன்.

என்.எல்.சி. தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அப்பகுதியில் உள்ள மக்களின் நிலங்களைக் காக்கவும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல முறை நெய்வேலிக்கு வந்து போராட்டங்களை நடத்தி உள்ளேன். இனிவரும் காலங்களிலும் நெய்வேலி தொழிலாளர்களுக்காக பாட்டாளி தொழிற்சங்கமும், நானும் இணைந்து, தொடர்ந்து போராடுவோம். அவ்வாறு போராடுவதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்காக  25.02.2021-இல் நடைபெறவுள்ள ரகசிய வாக்கெடுப்புத் தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கத்திற்கு வரிசை எண் 6-இல் வாக்களித்து முதன்மை சங்கமாக வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக