செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கிற புதிய ஆட்சிக்குக் கடன் சுமையாக ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியை வைத்து விட்டுச் செல்வது தான் அ.தி.மு.க. அரசின் சாதனையாக இருக்க முடியும்.- கே.எஸ்.அழகிரி

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு துறைகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கிற தமிழக அரசு, பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே, தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4.85 லட்சம் கோடியிலிருந்து ரூபாய் 5.7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தின் நிதிநிலைமை அதல பாதாளத்தில் சென்றுவிட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், இவை வெறும் அறிவிப்புகளாகவே கருதப்படும்.

தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன் ரூபாய் 12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 5 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதி ரூபாய் 7,110 கோடியை அடுத்து தமிழகத்தில் அமையப் போகிற ஆட்சியின் மீது சுமத்துவதற்கு அ.தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாகக் கூறிய அ.தி.மு.க. அரசு, அதற்குரிய நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாமல் வாக்கு வங்கியை நோக்கமாகக் கொண்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. 

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளாகவே உள்ளன. திவாலான நிலையில் உள்ள எடப்பாடி அரசு அதற்குரிய நிதி ஆதாரங்களை வழங்க முடியாத நிலையில்  அனைத்தும் அறிவிப்புகளாகத் தான் இருக்கும். அவற்றைச் செயல்படுத்த முடியாத அவலநிலையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

எனவே, அ.தி.மு.க. அரசின் கடைசி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, புதிய ஆட்சியின் மீது கடுமையான கடன் சுமையை ஏற்றி விட்டு தங்களது பதவிக் காலத்தை அ.தி.மு.க. முடித்துக் கொள்ளப் போகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கிற புதிய ஆட்சிக்குக் கடன் சுமையாக ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியை வைத்து விட்டுச் செல்வது தான் அ.தி.மு.க. அரசின் சாதனையாக இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக