புதன், 10 பிப்ரவரி, 2021

தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ தொடங்கப்படும்” - மு.க.ஸ்டாலின் உரை.


”கல்வி – வேலைவாய்ப்பு – பொருளாதாரம் ஆகியவற்றில் பெண்கள் முன்னேற்றம் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ தொடங்கப்படும்” மு.க.ஸ்டாலின் உரை.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிற நேரத்தில் நான் எந்த அளவிற்குப் பெருமைப்படுகிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். எத்தனையோ பணிகளுக்கு இடையில் நான் வந்திருப்பதாக சகோதரி ஹெலன் அவர்கள் இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

எத்தனை பணிகள் இருந்தாலும் இந்த பணி தான் எனக்கு முக்கியமான பணி. இந்த தொகுதிக்கு வரும்போதே என்னை அறியாமல் எனக்கு ஒரு மகிழ்ச்சி வந்து விடும். அதிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி நிகழ்ச்சி என்று சொன்னால் அதைவிட அதிகமான அளவிற்கு மகிழ்ச்சி வந்துவிடும்.

பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும், யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது, சுயமரியாதை உணர்வோடு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறவன் நான்.

அந்த நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கத்தான் இந்த அக்காடமியை அனிதா அச்சீவர்ஸ் என்ற பெயரில் நம்முடைய கொளத்தூரில் 2019ஆம் ஆண்டு நான் தொடங்கினேன்.

பெண்களுக்கு அவர்கள் கல்வியைத்தாண்டி ஒரு கூடுதல் தகுதி கொடுப்பதற்காகத்தான் டேலி வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்றிருக்கும் எத்தனையோ பேர் பெரிய பெரிய நிறுவனங்களில் இன்றைக்குப் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்திருக்கிறது. சம்பளமும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

வேலை கிடைத்தது என்பதை விட, சம்பளம் கிடைக்கிறது என்பதை விட அவர்களுக்குத் தன்னம்பிக்கை வந்திருப்பது தான் முக்கியம். டேலி வகுப்போடு, தையல் பயிற்சி வகுப்பு, இளைஞர்களுக்குத் தனிப் பயிற்சி மையம் என்று விரிவடைந்து அனிதா அச்சீவர்ஸ் இன்றைக்கு மினி கல்லூரியைப் போல வளர்ந்து வந்திருப்பது உள்ளபடியே எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இங்கே சகோதரி ஹெலன் சொன்னது போல முதல் பேட்ச்சை பொறுத்தவரையில் 61 பேரும், இரண்டாவது பேட்ச்சை பொறுத்தவரையில் 67 பேரும், மூன்றாவது பேட்ச்சில் 71 பேரும், நான்காவது பேட்ச்சில் 67 பேரும், ஐந்தாவது பேட்ச்சில் 82 பேரும் இதுவரை அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் இதுவரை 348 பேர் பயிற்சி பெற்று வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள்.

இப்போது ஆறாவது பேட்ச்சில் 89 பேர் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏழாவது பேட்ச்சுக்காக 80 மாணவிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வருகிற 15-ம் தேதியிலிருந்து பயிற்சி தொடங்கப்படவிருக்கிறது. மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் 517 மாணவியர்கள் இதுவரை பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பயிற்சி பெற்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் 80 பேர் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். 80 மாணவர்கள் பயிற்சியில் இருக்கிறார்கள். 80 மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் வருகிற 15ஆம் தேதி அந்த பயிற்சி தொடங்கவிருக்கிறது.

அதேபோல தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதில் 196 பேர் இதுவரையில் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். 199 பேர் பயிற்சியில் இருக்கிறார்கள். புதிதாக 360 பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதுவும் வருகிற 15-ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது.

எனவே, ஒரு குடும்பம் போல இன்றைக்கு இது வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இத்தனை குடும்பங்களுக்கும் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.

இன்றைக்குத் தமிழகத்தை பொறுத்தவரையில் வேலையில்லா திண்டாட்டம் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. படித்தவர்களுக்கு வேலை இல்லை.

வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் அலுவலகத்தில் லட்சக்கணக்கில் வேலை கேட்டுப் படித்த பட்டதாரிகள் பதிவு செய்து கொண்டிருக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுபற்றி இப்போது இங்கு இருக்கும் ஆட்சிக்கு எந்த கவலையும் இல்லை. அதனால்தான் இன்றைக்கு இளைஞர்களின் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது.

இங்கு ஆசிரியர்கள் சொன்னதைப் போல், இன்னும் 3 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கப்போகிறோம்.

நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது உண்டு. இதை கொளத்தூரில் மட்டும் தொடங்கினால் போதாது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி போல உருவாக வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன்.

உறுதியாகச் சொல்கிறேன், தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு இந்தக் கட்சியின் தலைவர் என்கிற முறையில் இப்போதே சொல்கிறேன், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தி.மு.கழக ஆட்சியில் உருவாக்கப்படும் என்ற நல்ல செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொண்டு உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக