வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.- தி.வேல்முருகன்


 தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன், கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள  ஊபா (UAPA) பொய் வழக்கைத் திரும்பப் பெறுமாறு  தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன்.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சேலத்தில் தோழர்கள் பாலன், கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஊபா(UAPA) கருப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

சனவரி 20 அன்று சென்னையில் தேர்தலில் பங்குபெறாத முற்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ‘பாசிச பா.ச.கவை தோற்கடிப்போம்’ என்று முடிவெடுத்தனர். இதை ஒருங்கிணைத்தவர்களில் தோழர் பாலனும் ஒருவர் என அறிகிறேன்.

இந்த பாசிச எதிர்ப்பு கூட்டியக்கத்தின் மண்டல அளவிலான கூட்டம் சேலத்தில் பிப்ரவரி 6 அன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னரே பிப்ரவரி 7 அன்று அதிகாலையில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த தோழர்கள் பாலன், கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் ஆகிய மூவரும் சேலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் என்ற ஊபா(UAPA) சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு அவர்கள் ஓராண்டுக்கு முன்பு ஓர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதைக் காரணமாக காட்டியுள்ளது காவல்துறை.

கடந்த 2019 ஆண்டு அக்டோபரில் கேரள காவல்துறையால் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மணிவாசகம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதி நிகழ்வில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டு, கொல்லப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  இறந்த போன நபர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது கொடும் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்வது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

ஒராண்டுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை காரணம் காட்டி தற்போது கைது செய்தது ஏன்?  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ‘பாசிச பா.ச.க வை தோற்கடிப்போம்’ என்ற ஒற்றை முழக்கத்தை முன் வைத்து தேர்தலில் பங்குபெறாத முற்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைப்பதுதான் காரணமா?

இந்தியா முழுவதும் பாசிச பா.ச.கவின் மக்கள் விரோத/சிறுபான்மை விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் கட்சிகள்,இயக்கங்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர்கள் என அனைவரின் குரலையும் நசுக்க கொடும் சட்டங்களின் கீழ் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்து வருகிறது மத்தியில் ஆளும் பா.ச.க அரசு. அதன் ஒரு அங்கமாகவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்குள் சென்று விட வேண்டும் என்று விரும்பும் பா.ச.க,  தமக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற காரணத்திற்காகவே இந்த தோழர்களை ஊபா சட்டத்தில் சிறைப்படுத்தியுள்ளது போலும். இது உள் நோக்கம் கொண்ட கைது நடவடிக்கையாகும்.

எனவே, ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட  தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக