சனி, 20 பிப்ரவரி, 2021

விராலிமலை முருகன் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில் நேரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது!


விராலிமலை முருகன் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில் நேரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது!

புதுக்கோட்டை மாவட்டம் - விராலிமலையிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு வரும் 25.02.2021 அன்று நடைபெறவுள்ளது. இக்குடமுழுக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கிணங்க கருவறை - கலசம் - யாகசாலை ஆகிய மூன்று முகாமையான நிலைகளிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டுமென “தெய்விகத் தமிழ்ப் பேரவை” கோரிக்கை விடுத்து வருகிறது. 

கடந்த 17.02.2020 அன்று, தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில், இதற்கான கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்,  தஞ்சாவூர் அலுவலகத்திலுள்ள உதவி ஆணையர், புதுக்கோட்டை செயல் அலுவலர் ஆகியோரிடம் நாம் நேரில் வழங்கினோம். 

இதனையடுத்து, இன்று (20.02.2021) காலை, தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில், சத்தியபாமா அறக்கட்டளை மற்றும் அரசயோகி கருவூறார் தமிழின குருபீடம் ஆகியவற்றின் நிறுவனர் சத்தியபாமா அம்மையார், தமிழ் வழிபாட்டுரிமைச் செயல்பாட்டாளர் திரு. இறைநெறி இமயவன், சிவனடியார் திரு. மோகனசுந்தரம் அடிகளார், வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்நாதன் சேகுவேரா மற்றும் தெய்விகத் தமிழ்ப் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், விராலிமலை முருகன் திருக்கோயிலுக்குச் சென்று திருக்குடமுழுக்கு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர். அதன்பிறகு, நீதிமன்றத் தீர்ப்புப்படி திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரை நேரில் சந்தித்து வலியுறுத்த அவரது அலுவலகத்திற்குச் சென்றனர். அவர் அங்கு இல்லாததால், திருக்குடமுழுக்கிற்கான செயல்பாட்டுத் திட்ட அறிக்கையின் நகலை தோழர்களிடம் வழங்கினர்.

தெய்விக தமிழ்ப் பேரவை சார்பாக திரு. வே.பூ. இராமராசு, ஆனந்தன், முருகேசன், இளங்கோ, தர்மலிங்கம் ஆகியோர் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், திருச்சி மாநகரக்குழுச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் மூ.த. கவித்துவன், திருச்சி நகரச் செயலாளர் தோழர் இனியன், மகளிர் ஆயப் பொறுப்பாளர் தோழர் வெள்ளம்மாள், தோழர்கள் கிருட்டிணமூர்த்தி, கருப்புசாமி, குபேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில் குடமுழுக்குகளிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதை முழுமையாகப் பின்பற்றி விராலிமலை முருகன் திருக்கோயிலிலும் தமிழில் திருக்குடமுழுக்கு நடத்திட ஆணையிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக