சனி, 27 பிப்ரவரி, 2021

இந்தியா ஒதுக்கும் நிதி கொஞ்சமும் போதுமானதல்ல. அடுத்த 10 ஆண்டுகளிலாவது இந்தியா கல்விக்காக 6% நிதியை ஒதுக்கீடு செய்தால் தான் கல்வியில் தன்னிறைவு பெற முடியும்.- DR.S.ராமதாஸ்


 கல்விக்கான நிதி ஒதுக்கீடு 6%: எப்போது 

எட்டுவோம் இந்த இமயத்தின் சிகரத்தை? - DR.S.ராமதாஸ்

இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட  கோத்தாரி ஆணையம் என்று அழைக்கப்படும் முதலாவது கல்வி ஆணையத்தின் மூன்று முக்கிய பரிந்துரைகள் குறித்து நான் விளக்கி வருகிறேன்.

அருகமைப் பள்ளி (Neighbourhood School ), பொதுப்பள்ளி முறை (Common School System) ஆகியவை குறித்து கடந்த இரு நாட்களாக விளக்கியிருந்தேன். கல்விக்கான அரசின் முதலீட்டை, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% ஆக உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் குறித்து இன்று விரிவாக விளக்குகிறேன். 

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு என்பது, இந்தியாவில் ஓர் ஆண்டில் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி செய்யப்படுகிறது என்பது ஆகும். இதை இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறார்கள் என்பதன் மொத்த மதிப்பு என்றும் கூறலாம். 2019 - 20 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 145.66 லட்சம் கோடி ஆகும். இந்த மதிப்பில் 6% கல்விக்காக செலவிடப்பட வேண்டும் என்பது தான் கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரை ஆகும். ஆனால், கோத்தாரி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 54 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை கல்விக்கு 6% நிதி ஒதுக்கீடு என்ற இலக்கு இன்று வரை எட்டப்படவில்லை.

கடைசியாக உள்ள புள்ளிவிவரங்களின்படி கடந்த 2019-20 ஆம் ஆண்டில் கல்விக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3.1% ஆகும். கோத்தாரி ஆணையத்தின் இலக்கில் பாதியை எட்ட 52 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்றால், முழு இலக்கை எட்ட இன்னும் 50 ஆண்டுகள் ஆகக்கூடும். புள்ளிவிவரங்கள் அதைத் தான் கூறுகின்றன. 2015&16 ஆம் ஆண்டில் இது 2.8% ஆக இருந்தது. 2019&20 ஆம் ஆண்டில் இது 3.1% ஆக உயர்ந்துள்ளது. அதாவது 0.3%  உயருவதற்கு 4 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதையே அளவீடாக வைத்துப் பார்த்தால் 6% என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் 2.9% நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். அதற்கு இன்னும் குறைந்தது 40 ஆண்டுகள் ஆகக்கூடும். அப்படியானால், அது வரை கல்வியில் இந்தியா தன்னிறைவு அடைய முடியாது என்பது தான் உண்மை.

சரி... கல்விக்கு செலவிடுவதில் இந்தியா எங்கு இருக்கிறது தெரியுமா?

கல்விக்கு அதிகமாக செலவிடும் நாடுகளில் முதலிடம் வகிப்பது கியூபா. அந்த நாடு அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 12.9% கல்விக்காக செலவிடுகிறது. கல்வியில் முதலிடம் வகிக்கும் ஃபின்லாந்து  6.9% ஒதுக்கீடு செய்துள்ளது. இங்கிலாந்து 5.6 விழுக்காடும், அமெரிக்கா 5.0 விழுக்காடும் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. ஆனால், இந்தியா செய்யும் முதலீடு 3.1% மட்டும் தான். கல்விக்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 144 ஆவது இடத்தில் தான் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் கூட 6.6% நிதி ஒதுக்கும் நிலையில் இந்தியா ஒதுக்கும் நிதி கொஞ்சமும் போதுமானதல்ல. அடுத்த 10 ஆண்டுகளிலாவது இந்தியா கல்விக்காக 6% நிதியை ஒதுக்கீடு செய்தால் தான் கல்வியில் தன்னிறைவு பெற முடியும். இது சாத்தியமாகும் என்று நம்புவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக