புதன், 24 பிப்ரவரி, 2021

அகில இந்திய தொகுப்பு இடங்களில் OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்; அதற்கான திருத்த அறிவிப்பை தேசிய தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்.


 
மருத்துவ மேற்படிப்பு: ஓபிசி இட ஒதுக்கீடு

மீண்டும் மறுக்கப்படுவது மாபெரும் அநீதி! - DR.S.ராமதாஸ்

இந்திய தேசிய தேர்வு வாரியம் (National Board of Examinations) நேற்று வெளியிட்ட மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அறிவிக்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றமும், அதனால் அமைக்கப்பட்ட குழுவும் ஒப்புதல் அளித்து விட்ட நிலையில். மீண்டும் ஓபிசி இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அறிவிக்கையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மற்றும் இட ஒதுக்கீடு என்ற தலைப்பிலான அத்தியாயத்தில்,‘‘ மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படும்’’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டு விதிகளின்படியும், மாநில அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாநில  அரசு இட ஒதுக்கீட்டு விதிகளின்படியும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது தான் இதன் பொருள்.

மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கடந்த ஆண்டு வரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், கடந்த ஆண்டுக்கான சூழலும், நடப்பாண்டில் நிலவும் சூழலும் முற்றிலுமாக வேறுபட்டவை. 

கடந்த ஆண்டு வரை ஓபிசி இட இதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த ஆணையும் பிறப்பிக்கப்பட வில்லை. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி முதலில் உச்சநீதிமன்றத்திலும், பின்னர் உயர்நீதிமன்றத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து மற்ற கட்சிகளும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் 27.07.2000 அன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்,‘‘மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை.  மத்திய அரசே இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கலாம். இது குறித்து முடிவெடுக்க ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரைப்படி அடுத்த கல்வியாண்டு முதல் ஓபிசி இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கலாம்’’ என்று ஆணையிட்டிருந்தது.

அதன்படி அமைக்கப்பட்ட 5 உறுப்பினர்கள் குழு கடந்த 21.10.2020 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளரிடம் தாக்கல் செய்த பரிந்துரை அறிக்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது தான் சாத்தியமானது  ஆகும் என்றும், அதற்கு வசதியாக அகில இந்திய ஒதுக்கீட்டில் 27% கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மருத்துவப் படிப்புக்கான ஓபிசி இட ஒதுக்கீட்டில் 27% கூடுதல் இடங்களை ஏற்படுத்தி நடப்பாண்டு முதல் அனைத்து வகையான மருத்துவப் படிப்புகளிலும் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை; அவ்வாறு செய்யாததற்கான காரணம் என்ன? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. 

மருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சில வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் 2021-ஆம் ஆண்டு முதல் ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அத்தகைய சூழலில் வரும் ஆண்டில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்திருப்பது சமூகநீதி சூறையாடல் ஆகும். இது தொடர்பான விவகாரத்தில் தனியாக விசாரணை நடத்தி வரும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உறுதிபட கூறியுள்ளது. ஆனாலும், மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் அறிவிக்கையில்  ஓபிசி இட ஒதுக்கீட்டை சேர்க்காததன் மூலம் சமூகநீதியில் ஆர்வமில்லாததை மத்திய அரசு காட்டியுள்ளது.

மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்படாததால், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பிற பிற்படுத்தப்பட்ட  வகுப்பு மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய 11 ஆயிரத்திற்கும் கூடுதலான இடங்கள் பறிக்கப்பட்டன.  2020-21 ஆம் ஆண்டில் 3758 ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளனர்.  2021-22 ஆம் ஆண்டிலும் ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் 5 ஆயிரத்திற்கும் கூடுதலான ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை இழப்பர். இது ஈடு செய்ய முடியாத சமூக அநீதி. இந்த அநீதி தொடருவதை அனுமதிக்கக்கூடாது. எனவே, 2021-22 ஆம் ஆண்டில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்; அதற்கான திருத்த அறிவிப்பை தேசிய தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக