திங்கள், 15 பிப்ரவரி, 2021

தேவேந்திரகுல வேளாளர் - மத்திய அரசு மசோதா பெயர் மாற்றம் சமூகத்திற்கான அடையாளம்! பட்டியல் மாற்றமே தேவேந்திரகுல வேளாளருக்கான அங்கீகாரம்!! - டாக்டர்.K.கிருஷ்ணசாமி

தேவேந்திரகுல வேளாளர் - மத்திய அரசு மசோதா பெயர் மாற்றம் சமூகத்திற்கான அடையாளம்! பட்டியல் மாற்றமே தேவேந்திரகுல வேளாளருக்கான அங்கீகாரம்!! - டாக்டர்.K.கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய நீண்ட நெடுநாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திடவும், அவர்கள் தற்போது இடம் பெற்றிருக்கக்கூடிய SCHEDULED CASTE  என்ற பட்டியலினத்திலிருந்து விலக்கிடவும் தொடர்ந்து போராடிவருகின்றனர்.  அதில் ஒரு பகுதியாகிய பெயர் மாற்றக் கோரிக்கைக்கான சட்டத் திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருக்கிறது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதில் மாற்றமில்லை. ஆனால், பட்டியல் மாற்றம் என்பதே தேவேந்திரகுல வேளாளர்களின் நிரந்தர இலக்காகும். பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சமூக அடையாளமாக கருதப்பட்டாலும் பட்டியிலினத்திலிருந்து விலக்கு பெறாமல் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் விடுதலை பெற்றதாகவோ முழு அங்கீகாரத்தையும் பெற்றதாகக் கருத இயலாது. 

பெயர் மாற்றத்திற்கான சீரிய முயற்சிகளை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகள் பட்டியல் மாற்றத்திற்கான கருத்துருவையும் இணைத்து மசோதாவை நிறைவேற்றி, தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டதால் நூறாண்டு காலத்திற்கு மேலாக இந்த சமூகம் அனுபவிக்கும் சமூக ஒதுக்கலுக்கும், ஒடுக்கலுக்கும்; உளரீதியான தாழ்வு சிக்கலுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாகும்.

- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD 
நிறுவனர் - தலைவர்
புதிய தமிழகம் கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக