புதன், 8 மே, 2019

தலைமை தேர்தல் அதிகாரிக்குப் பதிலாக வேறு ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு பதிலாக வேறுஒருவரை நியமிக்க வேண்டும் 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் போக்கு சந்தேகம் அளிப்பதாக உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்துக்கு வேறு ஒரு அதிகாரியை பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ரகசியமாக கோவையிலிருந்து 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது 13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும். அவற்றில் மறுவாக்குப் பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காகத் தான் அந்த இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன எனவும் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. அரசியல் கட்சிகள் எதுவும் கோராமல், வாக்குப் பதிவு குறித்து புகார் ஏதும் அளிக்கப்படாமல் மறுவாக்குப் பதிவு எப்படி நடத்தப்படும் என்பது புதிராக உள்ளது.

தர்மபுரி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் பத்து வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்து சுமார் இரண்டு வாரமான பின்பும் அது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் எந்த ஒரு முடிவுமெடுக்கவில்லை. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கலவரம் நிகழ்த்தப்பட்ட பொன்பரப்பி வாக்குசாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று சுமார் நூறு வாக்காளர்களின் கோரிக்கைகளோடு மனு அளித்தும் அதை தலைமை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். இந்த நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியும் புகாரோ கோரிக்கையோ முன்வைக்காமல் தன்னிச்சையாக 46 வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுவது வியப்பளிக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக முறைகேடுகள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள முக்கியமான 21 அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கும் சூழலில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்குமா என்ற அய்யத்தை நமக்கு எழுப்பியுள்ளது. எனவே, தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டுமென்றால் தற்போது தலைமை தேர்தல் அதிகாரிக்குப் பதிலாக வேறு ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தலைமைத் தேர்தல் அதிகாரி வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? - மு.க.ஸ்டாலின்

"தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையாக பாதுகாத்திட, மாநில சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும்"
மு.க.ஸ்டாலின் அறிக்கை


ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கும், 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அதிகாரிகள் மற்றும் பல மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் இருப்பதை தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாததைப்போல கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

போட்டியிடும் வேட்பாளர் அல்லது அவருடைய முகவருக்குத் தெரிவிக்காமல் ஒரு தொகுதியிலிருந்து இன்னொரு தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றக் கூடாது என்று தெளிவான தேர்தல் ஆணைய விதிமுறைகள் இருந்தும்- அதை அப்பட்டமாக மீறி காலில் போட்டு மிதிக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் ஏதோ சில வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகள் போல, நடந்து கொள்கிறார்கள். அதைத் தட்டிக் கேட்க வேண்டிய தலைமைத் தேர்தல் அதிகாரியோ தேர்தல் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சப்பைக் கட்டுக் கட்டி பேட்டிகளை வெளியிடுவதில் மட்டுமே அக்கறை காட்டுபவராக இருக்கிறார்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது குறித்து செய்தி வெளியானவுடன் “மறு வாக்குப் பதிவிற்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்” என்று கூறும் தலைமைத் தேர்தல் அதிகாரி, “எத்தனை இடங்களில் மறு வாக்குப்பதிவு என்றால் அதைத் தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும்” என்று நழுவுகிறார். தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் மறு வாக்குப் பதிவு கோரி கொடுத்த தி.மு.க.வின் மனுவிற்கு இதுவரை எவ்வித தீர்மானமான உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியது ஏன்?

மறு வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் அதன் பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்குப் பதில் உத்தரவே வராத நிலையில் ரகசியமாக வாக்குப் பதிவு இயந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றது ஏன்?

வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து தி.மு.க. தரப்பில் புகார் கொடுக்கப்பட்டவுடன் இன்று பேட்டியளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி “தவறு செய்த 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று புதிய “விளக்கம்” கொடுக்கிறார். 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிந்தவுடனோ அல்லது இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப்படும் வரையிலோ தலைமைத் தேர்தல் அதிகாரி வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்?

துணை முதலமைச்சரின் மகன் தேனி தொகுதியில் போட்டியிடுவதால், குறிப்பாக வாரணாசியில் பிரதமரைச் சந்தித்த பிறகு அ.தி.மு.க அரசுக்கும் - தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகள் என்ன?

எந்த அடிப்படையில் 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள் என்று அறிக்கை கொடுத்தார்?

“மறு வாக்குப் பதிவுக்கு பரிந்துரைத்த இடங்களை விட அதிக இடங்களில் கூட தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்” என்று தலைமை தேர்தல் அதிகாரி இப்போது கூற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைக்காமல் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இதுவரை மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டுள்ள இடங்கள் எத்தனை?

ஆகவே தலைமைத் தேர்தல் அதிகாரியின் நேற்றைய பேட்டியும், இன்றைய பேட்டியும் “புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம்” தேர்தலில் புதிதாக ஒரு “முறைகேட்டிற்கு” அடித்தளம் அமைத்துக் கொடுப்பது போலவே அமைந்துள்ளது. இதை எந்த ஒரு ஜனநாயகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சென்னை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய அந்த பழைய ஞாபகத்தில், சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு வழி காட்ட வேண்டிய இந்த பொறுப்பிலும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாஹூ செயல்படுகிறாரோ என்ற வலுவான சந்தேகத்தை “அர்த்த ராத்திரியில்” வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றமும், அதைத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக அவர் அளிக்கும் பேட்டிகளும் உறுதிபடுத்துகிறது. இவர் மீது உள்ள நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழக எதிர்க்கட்சிகளும் முற்றிலுமாக இழந்து விட்டன.

ஆகவே, தேர்தல் ஜனநாயகத்தில் விபரீத விளையாட்டுக்களை நடத்திட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாக தலையிட்டு தேனிக்கு மாற்றப்பட்ட 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஈரோட்டுக்கு அனுப்பப்பட்ட 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக உடனடியாக திரும்பப் பெறப்பட உத்தரவிட வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வேட்பாளர் அல்லது அவர்களின் முகவர்களுக்கு தெரிவிக்காமல் எந்த வாக்குப் பதிவு இயந்திரங்களையும் இனி எந்தத் தொகுதிக்கும் மாற்றக் கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.

இதுவரை மறு வாக்குப் பதிவிற்கு தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ள விவரங்கள் குறித்தும், அவர் கூறும் 46 வாக்குச்சாவடிகளில் தவறு என்ன என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும். ஆளுங்கட்சியின் தலையீடுகளின் காரணமாக, தமிழகத்தில் நிகழும் முறைகேடுகளுக்கு இடையே தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு மிகவும் தடுமாறி நிற்கிறார் என்பது நன்கு தெரிகிறது. ஆகவே, எஞ்சியிருக்கும் நாட்களுக்கு உடனடியாக “மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி” ஒருவரை நியமித்து, தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு இயந்திரங்களையும், வாக்குப் பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாத்திட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அ.தி.மு.க அரசு

“நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அ.தி.மு.க அரசு”
- முரசொலி தலையங்கம்

தண்ணீர் தண்ணீர் எப்பக்கம் நோக்கினும் தண்ணீர்; எனினும் தாகம் தணிக்கும் நீர் ஒரு சொட்டு கூட இல்லையே” (Water water everywhere; Not a drop to drink) என்று ஆங்கிலக் கவிஞர் கொலரிட்ஜ், கரைகாணாக் கடலில் திசைமாறி பல நாட்கள் மாட்டிக் கொண்ட பயணியர் கதறலை எழுதி யிருக்கிறார். அதைப்போல, அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை முதல் குமரி வரை கடலில்தான் நீர் அலைமோதுகிறது; உள்நாட்டுத் தமிழகத்தில் குடிநீருக் காகத் தாய்மார்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் அவலம் நிறைந்த காட்சிகளைத்தான் எங்கணும் காணமுடிகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் பருவமழை பற்றாக்குறை. கடந்த 140 ஆண்டுகளில் நேர்ந்திராதபடி வடகிழக்குப் பருவமழை 2018ல் பொய்த்து விட்டது. பெய்யும் மழையையும் சேமித்துப் பாதுகாப்பதற்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. அதனால் பெய்த வேகத்தி லேயே மழை நீர் கடலில் கலந்துவிடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் ஆளும் அரசால் தேவையான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை.

இருக்கும் ஏரி, குளங்களிலும், அவற்றிற்கான நீர் வரும் வழிகளிலும் அ.தி.மு.க. வினரின் ஆதரவோடு ஆக்கிரமிப்புகள். ஏரி, குளங்கள் மேய்ச்சல் நிலங்களாக மாறி வருகின்றன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் சிறிது சிறிதாக அதல பாதாளத்திற்குப் போய் விட்டது. ஆட்சியாளர்களின் அலட்சியம் அளவிட முடியாதது. இயற்கைக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போரின் விளைவு களை, இப்போது எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிட்டு முறையாகத் தூர்வாரப்படவில்லை என்பது, இப்போது உருவாகிவரும் குடிநீர் இல்லாமை, குடிநீர்ப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு ஒரு முக்கியமான காரணம். அரசினரிடம் கேட்டால் ஆயிரம் புள்ளி விபரங்களைக் காட்டுவார் கள். அவை காகிதத்தில் இருக்கும் விபரங்கள் மட்டுமே. ஒதுக்கப்பட்ட நிதியும் செலவு செய்யப்பட்டதாகக் கணக்கு இருக்கும். தூர் வாருதல் நடைபெற் றிருக்காது. இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் தூர்வாரும் கலாச்சாரம்!

ஆளும் அ.தி.மு.க. அரசின் நீர் மேலாண்மைப் படுதோல்வி குறித்து மிகச் சரியான நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஜெயலலிதாவின் பின்னடை வான அணுகுமுறையைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஒரே நாளில் 330 டி.எம்.சி. தண்ணீ ரைத் திறந்து விட்டதால், மிகப் பெரும் சேதத்தையும் பேரிட ரையும் உண்டாக்கிவிட்டு, அவ்வளவும் கடலில் கலந்து விட்டது. ஒரு டி.எம்.சி. தண்ணீர், சென்னையின் ஒரு மாதத் தேவைக்குப் போதுமானது. உப்பரிகை யிலிருந்து உலகத்தைக் குனிந்து பார்ப்போர்க்கு, குடிநீர் தேடி அலைவோரின் குமுறல் எங்கே கேட்கப் போகிறது?

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களின் நிலத்தடி நீர் அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில்தான் நிலத்தடி நீர் வெகு கீழே போய் விட்டது. மழை நீரைச் சேமித்து, பூமிக்குள் செல்ல அனு மதித்தால்தான், நிலத்தடி நீர்மட்டம் புத்தாக்கம் பெறும். அதற்கான விழிப்பை வெகு மக்களிடம் ஏற்படுத்த அரசு பெருமளவுக்குத் தவறிவிட்டது. போதாக் குறைக்கு, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, கடலூர் மாவட்டங் களின் நிலத்தடி நீரில் காட்மியம், குரோமியம், இரும்பு ஆகிய கடின உலோகக் கலவை காணப்படுவதால், அந்த நீர் மனித நுகர்வுக்குச் சிறிதும் ஏற்றதல்ல.

இவ்வாறு நிலத்தடி நீரின் அளவையும் குணத்தையும், அதனால் மக்களுக்கு நேர்ந்திட இருக்கும் மோசமான விளைவுகளைப் பற்றியும் கொஞ்சமும் கவ லைப்படாத கொடுங்கோல் அரசன்றோ கோட்டையில் கொலு வீற்றிருக்கிறது! நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு என்பதற்கு தமிழ்நாடு மிக மோசமானதொரு முன்மாதிரியை ஏற்படுத்தி இருக்கிறது.

குளங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் 2007ல் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்கிறது. எனினும் ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளில் 49 சதவிகிதம் நீர் நிலைகளில்தான் உள்ளன என்று அண்மையில் தலை மைக் கணக்காயரின் அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது. ஆளுங்கட்சியின் அனுசரணை இல்லாமல் இத்தகைய ஆக்கிரமிப்புகள் சாத்தியமே இல்லை.

தமிழ்நாடு குடிநீர் வழங்கு, கழிவு நீர் அகற்று வாரியம். என்றொரு வாரியம் இருக்கிறது. இந்த வாரியத்தின் மூலவர் யார் என்று இன்றைக்குப் பலருக்கும் நினைவில் இருக்காது. சுகாதாரமான வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பவை... குடிநீர் வழங்குதலும், கழிவுநீர் அகற்றுதலும் ஆகும். இதன் அடிப்படையிலேதான், 1971ம் ஆண்டில், தனியே ஒரு வாரியத்தை உருவாக்கினார் முதல்வர் கலைஞர்.

இன்றைக்கும் அந்த வாரியம்தான் மாநிலத்தின் 59 சதவிகித மக்களுக்கு குடிநீர் வழங்கி, கழிவுநீர் அகற்றிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. மீதி உள்ள 41 சதவிகித மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயிரோட்டம் இல்லை.

சிறுவாணி குடிநீர்த் திட்டம், கிருஷ்ணா குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நரிப்பையூர்த் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவற்றில் ஒருசில. இது போன்ற மெகா குடிநீர்த் திட்டம் ஒன்றையாவது நிறைவேற்றிய பெருமை அ.தி.மு.க. ஆட்சிக்குக் கிடையாது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும்.

சுமார் 550 குடிநீர்த் திட்டங்கள், காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளையே சார்ந்திருக்கின்றன. அந்த ஆறுகளின் அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்தே, வேளாண்மைக்கும் குடிநீருக்கும் தண்ணீர் விநியோகம் நடக்கும். பெரிய 15 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 198.27 மில்லியன் கன அடி ஆகும். தற்போது அவற்றில் நீரின் அளவு 36.53 மில்லியன் கன அடி மட்டுமே, அதாவது ஐந்தில் ஒரு பங்குதான்.

குளிர்பான நிறுவனங்கள் ஆறுகளிலிருந்து தண்ணீர் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும். ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு விடாமல் கண் காணிக்க வேண்டும். அவை முறையாகத் தூர்வாரப்பட வேண்டும். மழை நீரைச் சேகரித்துச் சேமிப்பதற்கு ஏற்ற புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும். மழை நீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதற்கான விழிப்பை பொது மக்களி டையே அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்த வேண்டும்; இந்த முயற்சியை ஓர் இயக்கமாகவே தொடர்ந்து நடத்த வேண்டும். நதிகள் இணைப்பை தலையாய பணியாக மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீர் கிடைக்கும்போது அதை வீணாக்கி விட்டால், தென் ஆப்பிரிக்கா வின் கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்திற்கும் ஏற்படும் - என்றும்; நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால், தண்ணீரை 'கேப்சூல் வடிவத்தில் தான் பார்க்க நேரிடும் - என்றும்; அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கையை அனைவரும் சிந்தனையில் தேக்கிச் செயலாக்கத்தில் பின்பற்ற வேண்டும்!

THANKS ====> முரசொலி 

செவ்வாய், 7 மே, 2019

ஜனநாயகத்தின் வெற்றி! - வைகோ

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திற்கு
உச்சநீதிமன்றத்தின் தடை ஜனநாயகத்தின் வெற்றி! - வைகோ 


தமிழக அரசியலில் ஆட்சியைப் பறிகொடுத்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதற்காக பேரவைத் தலைவர் அவர்கள் எடுத்த நடவடிக்கை தவறானது. அதற்குத் தடை வேண்டும் என்று உச்சநீதின்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ரஞ்சன்கோகாய் அவர்கள் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்து இருக்கிறது.

இதை ஜனநாயகத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன். ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான தாக்கீது கொடுக்கப்பட்டுவிட்டால், அதற்கு பிறகு பேரவைத் தலைவர் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி Þடாலின் அவர்கள் எடுத்த முயற்சியால், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தாக்கீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்காக எடுக்கின்ற முயற்சி தோற்றுப்போகும் என்பதைத்தான் சட்ட வல்லுநர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், தீர்ப்பு வந்திருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவர் தான் எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, பேரவையில் எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அவர் சந்திப்பதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும்.

அதிமுக அரசுகளின் பச்சை துரோகத்துக்கு கடும் கண்டனம் - மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு அலுவலகங்கள் & பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் பாஜக - அதிமுக அரசுகளின் பச்சை துரோகத்துக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்- மு.க.ஸ்டாலின்



வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலையே கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவருக்கு அத்தனை வேலை வாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகச் செயலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப் பறிக்கும் கொடும் செயல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு - குறிப்பாக கடந்த ஐந்து வருட காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல மடங்கு பெருகி விட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.