புதன், 8 மே, 2019

நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அ.தி.மு.க அரசு

“நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அ.தி.மு.க அரசு”
- முரசொலி தலையங்கம்

தண்ணீர் தண்ணீர் எப்பக்கம் நோக்கினும் தண்ணீர்; எனினும் தாகம் தணிக்கும் நீர் ஒரு சொட்டு கூட இல்லையே” (Water water everywhere; Not a drop to drink) என்று ஆங்கிலக் கவிஞர் கொலரிட்ஜ், கரைகாணாக் கடலில் திசைமாறி பல நாட்கள் மாட்டிக் கொண்ட பயணியர் கதறலை எழுதி யிருக்கிறார். அதைப்போல, அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை முதல் குமரி வரை கடலில்தான் நீர் அலைமோதுகிறது; உள்நாட்டுத் தமிழகத்தில் குடிநீருக் காகத் தாய்மார்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் அவலம் நிறைந்த காட்சிகளைத்தான் எங்கணும் காணமுடிகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் பருவமழை பற்றாக்குறை. கடந்த 140 ஆண்டுகளில் நேர்ந்திராதபடி வடகிழக்குப் பருவமழை 2018ல் பொய்த்து விட்டது. பெய்யும் மழையையும் சேமித்துப் பாதுகாப்பதற்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. அதனால் பெய்த வேகத்தி லேயே மழை நீர் கடலில் கலந்துவிடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் ஆளும் அரசால் தேவையான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை.

இருக்கும் ஏரி, குளங்களிலும், அவற்றிற்கான நீர் வரும் வழிகளிலும் அ.தி.மு.க. வினரின் ஆதரவோடு ஆக்கிரமிப்புகள். ஏரி, குளங்கள் மேய்ச்சல் நிலங்களாக மாறி வருகின்றன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் சிறிது சிறிதாக அதல பாதாளத்திற்குப் போய் விட்டது. ஆட்சியாளர்களின் அலட்சியம் அளவிட முடியாதது. இயற்கைக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போரின் விளைவு களை, இப்போது எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிட்டு முறையாகத் தூர்வாரப்படவில்லை என்பது, இப்போது உருவாகிவரும் குடிநீர் இல்லாமை, குடிநீர்ப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு ஒரு முக்கியமான காரணம். அரசினரிடம் கேட்டால் ஆயிரம் புள்ளி விபரங்களைக் காட்டுவார் கள். அவை காகிதத்தில் இருக்கும் விபரங்கள் மட்டுமே. ஒதுக்கப்பட்ட நிதியும் செலவு செய்யப்பட்டதாகக் கணக்கு இருக்கும். தூர் வாருதல் நடைபெற் றிருக்காது. இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் தூர்வாரும் கலாச்சாரம்!

ஆளும் அ.தி.மு.க. அரசின் நீர் மேலாண்மைப் படுதோல்வி குறித்து மிகச் சரியான நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஜெயலலிதாவின் பின்னடை வான அணுகுமுறையைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஒரே நாளில் 330 டி.எம்.சி. தண்ணீ ரைத் திறந்து விட்டதால், மிகப் பெரும் சேதத்தையும் பேரிட ரையும் உண்டாக்கிவிட்டு, அவ்வளவும் கடலில் கலந்து விட்டது. ஒரு டி.எம்.சி. தண்ணீர், சென்னையின் ஒரு மாதத் தேவைக்குப் போதுமானது. உப்பரிகை யிலிருந்து உலகத்தைக் குனிந்து பார்ப்போர்க்கு, குடிநீர் தேடி அலைவோரின் குமுறல் எங்கே கேட்கப் போகிறது?

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களின் நிலத்தடி நீர் அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில்தான் நிலத்தடி நீர் வெகு கீழே போய் விட்டது. மழை நீரைச் சேமித்து, பூமிக்குள் செல்ல அனு மதித்தால்தான், நிலத்தடி நீர்மட்டம் புத்தாக்கம் பெறும். அதற்கான விழிப்பை வெகு மக்களிடம் ஏற்படுத்த அரசு பெருமளவுக்குத் தவறிவிட்டது. போதாக் குறைக்கு, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, கடலூர் மாவட்டங் களின் நிலத்தடி நீரில் காட்மியம், குரோமியம், இரும்பு ஆகிய கடின உலோகக் கலவை காணப்படுவதால், அந்த நீர் மனித நுகர்வுக்குச் சிறிதும் ஏற்றதல்ல.

இவ்வாறு நிலத்தடி நீரின் அளவையும் குணத்தையும், அதனால் மக்களுக்கு நேர்ந்திட இருக்கும் மோசமான விளைவுகளைப் பற்றியும் கொஞ்சமும் கவ லைப்படாத கொடுங்கோல் அரசன்றோ கோட்டையில் கொலு வீற்றிருக்கிறது! நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு என்பதற்கு தமிழ்நாடு மிக மோசமானதொரு முன்மாதிரியை ஏற்படுத்தி இருக்கிறது.

குளங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் 2007ல் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்கிறது. எனினும் ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளில் 49 சதவிகிதம் நீர் நிலைகளில்தான் உள்ளன என்று அண்மையில் தலை மைக் கணக்காயரின் அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது. ஆளுங்கட்சியின் அனுசரணை இல்லாமல் இத்தகைய ஆக்கிரமிப்புகள் சாத்தியமே இல்லை.

தமிழ்நாடு குடிநீர் வழங்கு, கழிவு நீர் அகற்று வாரியம். என்றொரு வாரியம் இருக்கிறது. இந்த வாரியத்தின் மூலவர் யார் என்று இன்றைக்குப் பலருக்கும் நினைவில் இருக்காது. சுகாதாரமான வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பவை... குடிநீர் வழங்குதலும், கழிவுநீர் அகற்றுதலும் ஆகும். இதன் அடிப்படையிலேதான், 1971ம் ஆண்டில், தனியே ஒரு வாரியத்தை உருவாக்கினார் முதல்வர் கலைஞர்.

இன்றைக்கும் அந்த வாரியம்தான் மாநிலத்தின் 59 சதவிகித மக்களுக்கு குடிநீர் வழங்கி, கழிவுநீர் அகற்றிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. மீதி உள்ள 41 சதவிகித மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயிரோட்டம் இல்லை.

சிறுவாணி குடிநீர்த் திட்டம், கிருஷ்ணா குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நரிப்பையூர்த் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவற்றில் ஒருசில. இது போன்ற மெகா குடிநீர்த் திட்டம் ஒன்றையாவது நிறைவேற்றிய பெருமை அ.தி.மு.க. ஆட்சிக்குக் கிடையாது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும்.

சுமார் 550 குடிநீர்த் திட்டங்கள், காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளையே சார்ந்திருக்கின்றன. அந்த ஆறுகளின் அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்தே, வேளாண்மைக்கும் குடிநீருக்கும் தண்ணீர் விநியோகம் நடக்கும். பெரிய 15 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 198.27 மில்லியன் கன அடி ஆகும். தற்போது அவற்றில் நீரின் அளவு 36.53 மில்லியன் கன அடி மட்டுமே, அதாவது ஐந்தில் ஒரு பங்குதான்.

குளிர்பான நிறுவனங்கள் ஆறுகளிலிருந்து தண்ணீர் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும். ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு விடாமல் கண் காணிக்க வேண்டும். அவை முறையாகத் தூர்வாரப்பட வேண்டும். மழை நீரைச் சேகரித்துச் சேமிப்பதற்கு ஏற்ற புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும். மழை நீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதற்கான விழிப்பை பொது மக்களி டையே அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்த வேண்டும்; இந்த முயற்சியை ஓர் இயக்கமாகவே தொடர்ந்து நடத்த வேண்டும். நதிகள் இணைப்பை தலையாய பணியாக மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீர் கிடைக்கும்போது அதை வீணாக்கி விட்டால், தென் ஆப்பிரிக்கா வின் கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்திற்கும் ஏற்படும் - என்றும்; நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால், தண்ணீரை 'கேப்சூல் வடிவத்தில் தான் பார்க்க நேரிடும் - என்றும்; அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கையை அனைவரும் சிந்தனையில் தேக்கிச் செயலாக்கத்தில் பின்பற்ற வேண்டும்!

THANKS ====> முரசொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக