வெள்ளி, 24 மே, 2019

எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம். - தொல். திருமாவளவன்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல்:
எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம்.
 
-       தொல். திருமாவளவன் அறிக்கை(MP)
நிறுவனர்- தலைவர்விசிக.)
நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி அவர்கள் மத்தியில் ஆட்சியமைக்கவிருக்கிறார். இப்படியொருநிலை நடந்துவிடக் கூடாதே என்பதுதான் அனைத்து சனநாயக சக்திகளின் பெரும் கவலையாக இருந்தது. எனினும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்துச் செயல்படும் எதிர்க்கட்சிகள் யாவும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கான சூழல் அமையாததால் பாஜகவுக்கு எதிரான வாக்குவங்கி மானாவாரியாகச் சிதறிவிட்டது. இந்த நிலைமைதான், மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக தலைமையிலான சங்பரிவார் கும்பலுக்கு அரும்பெரும் வாய்ப்பாக அமைந்து மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. எனினும், வடஇந்திய மாநிலங்களில் நிகழ்ந்தைப்போல அல்லாமல் கர்நாடகாவைத் தவிர தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவால் ஆதாயம் பெற இயலவில்லை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வலுவாகப் பாடம் புகட்டியுள்ளனர். மக்களை ஏய்ப்பதற்கென இறுதிவேளையில் அவர்களின் கூட்டணி எவ்வகையிலும் பொருந்தாக் கூட்டணி என்பதை வெகுவாக உணர்த்தியுள்ளனர்.

அத்துடன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ளனர். இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண். எனவே,இங்கே சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணைநிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. பணமதிப்பு அழிப்பு, நீட், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றை எதிர்த்து மோடிக்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக இங்கே மோடி எதிர்ப்புஅலை படிப்படியாகக் கட்டமைக்கபட்டது. மேலும், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகிய சிறுபான்மையினரின் மோடி எதிர்ப்பும் இங்கே வலுவாக வேரூன்றியிருந்தது. இத்தகைய சூழல்தான் பாஜக- அதிமுக கூட்டணியைக் குப்புற வீழ்த்தியுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரையில், அனைத்துத் தரப்பு வாக்காளப் பொதுமக்களும் எனக்களித்த வெற்றியின்மூலம், எனக்கெதிராக சாதி-மதவெறி சக்திகள் திட்டமிட்டு பரப்பிய அவதூறுகளையெல்லாம் முறியடித்துள்ளனர். எனவே,இந்த வெற்றியை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் யாவருக்கும் காணிக்கையாக்குகிறேன். அத்துடன், புதுச்சேரி உட்பட தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு வரலாறு காணாத வகையில் பெருவெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்ட திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக் கொண்ட இந்த தேசத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சனநாயகத்தையும் பாதுகாத்திடும் வகையில்  விடுதலைச்சிறுத்தைகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம் என வெற்றிச் சூளுரையாக உறுதியளிக்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக