கட்டுமானம், உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, பொறியியல், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க துறைகளில் எஃகு, மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் எஃகுத் துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. எஃகு உற்பத்தியில் இந்தியா தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராகவும் வளர்ந்துள்ளது.
உற்பத்தி மற்றும் பயன்பாடு:
நடப்பு நிதியாண்டின் (2022,ஏப்ரல்- நவம்பர்) முதல் எட்டு மாதங்களில் எஃகுத் துறையின் உற்பத்தி செயல்பாடு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது. உள்நாட்டு எஃகு உற்பத்தி 78.090 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 6.09% அதிகமாகும். உள்நாட்டு எஃகின் பயன்பாடு கடந்த ஆண்டின் 67.32 மில்லியன் டன்னைவிட 11.9% அதிகரித்து, இந்த ஆண்டு 75.340 மில்லியன் டன்னாக பதிவானது. உள்நாட்டு கச்சா எஃகு உற்பத்தி, 81.96 மில்லியன் டன்னாக, கடந்தாண்டை விட 5.6% அதிகமாக இருந்தது.



