வெள்ளி, 17 ஏப்ரல், 2020

அரசியல் நோக்குடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் ஆளும் அ.தி.மு.க. அரசு இந்தத் தடையை விதித்திருக்கிறது.- மு.க.ஸ்டாலின்

"ஈகையின் நியாயமும், தர்ம சிந்தனையின் நேர்மையும், பேரிடரின்போது உதவும் கரங்களின் முக்கியத்துவமும், மனிதாபிமானமும் போற்றப்பட்டுள்ள உயர் நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடித்து திமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவிடுக" - மு.க.ஸ்டாலின் 

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஊரடங்கை மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன. நோய்த் தொற்று காலத்தில், இந்த வழிமுறை தவிர்க்க முடியாதது என்பதை அனைவரும் அறிவர். ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படும் மக்களான ஏழை - எளிய, அடித்தட்டு விளிம்பு நிலை மக்கள், செய்வதறியாது திகைத்திருக்கின்றனர். அவர்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான  அன்றாடத் தேவைகளை, முழுமையாக இல்லாவிட்டாலும்  பெருமளவுக்கேனும்  நிவர்த்தி செய்ய மத்திய - மாநில அரசுகள் தனித்திட்டங்கள் எதனையும்  இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள், ஓரளவு வசதி படைத்த தனிமனிதர்கள் பலரும், பல்வேறு இடங்களில் பசியால் வாடுவோர்க்கு அவ்வப்போது தங்களால் முடிந்த உதவிகளை நேரடியாகச் செய்து வந்தார்கள். இந்த உதவிகள் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இதனை ஆளும்கட்சியினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பொதுமக்களுக்கு யாரும் நேரடியாக உதவிகள் செய்யக்கூடாது; அப்படித் தருவதாக இருந்தால் அரசிடம்தான் தர வேண்டும் என்று சர்வாதிகார எண்ணத்துடன் அ.தி.மு.க. அரசு, பசித்திருக்கும் மக்களுக்கு எதிரான தடை ஒன்றை விதித்தது. 'தாங்களும் தரமாட்டோம்; அடுத்தவரையும் தர விடமாட்டோம்' என்பது, 'வறண்ட பாலைவனத்திற்கு ஒப்பான மனதின்  செயல்பாடு' என்பதால், இதனை தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

தி.மு.க. தொடுத்த வழக்கில் விசாரணையை மேற்கொண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்; ஈகையின் நியாயமும், தர்ம சிந்தனையின் நேர்மையும், பேரிடரின் போது உதவும் கரங்களின் முக்கியத்துவமும், மனிதாபிமானமும் போற்றப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “அரசியல் நோக்குடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் ஆளும் அ.தி.மு.க. அரசு இந்தத் தடையை விதித்திருக்கிறது” என்றும்; “சமூக விலகலையும், விதிமுறைகளையும் கடைப்பிடித்துத்தான் ஏழைகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன; அரசின் தடை உத்தரவு காரணமாக அவர்கள் பட்டினியால் மடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; எனவே, அரசின் இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்றும் விரிவாக வாதாடினார்.

நீதியரசர்கள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், “அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஏழை - எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கலாம் எனவும், ஆனால், அவ்வாறு வழங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு, அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்திட வேண்டுமெனவும், வாகன ஓட்டுநர் தவிர மூன்று பேருக்கு மிகாமல் செல்ல வேண்டுமென்றும், அரசு அறிவித்துள்ள சமூக விலகலையும், விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இந்தத் தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

தி.மு.க.,வின் வெகுமக்கள் நலன் சார்ந்த எண்ணத்துக்கும், ஈடுபாட்டுக்கும், பணிகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது!

இனிமேலாவது அ.தி.மு.க. அரசு, ஏழை எளியோர் பரிதவிக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அரசியல் கலந்த முக்கியத்துவம் தேடும் கவனத்தைக் கைவிட்டு, பரந்த உள்ளத்துடன், பரிவு எண்ணத்துடன், நடந்து கொள்ளும் என்றும்; பசித்தோர்க்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிடும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், விழிப்புணர்வு நெறிமுறைகளின் படியும் எமது நிவாரணப் பணிகள் தொய்வின்றித் தொடரும்!

எனவே, தமிழகத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை - எளியோர்க்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களைத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் தவறாது வழங்கிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா நோயை விடக் கொடுமையானது பசிப்பிணி; பசித்திருக்கும் மக்களின் பசி போக்குவதே இன்று தலையாய பணி!

என்றும் போல், நம் மக்களைக் காப்போம்! இப்போது கொரோனாவை தடுப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக