வியாழன், 16 ஏப்ரல், 2020

மராட்டியத்தில் உணவு, இடமின்றி தவிக்கும் தமிழகத்தினரை காப்பாற்ற வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்குவதற்கு இடமின்றியும், உண்ண உணவின்றியும் தவித்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களிடையே அச்சமும், பதற்றமும் அதிகரித்து வரும்  நிலையில், அவர்களுக்கு தேவையான அவசரகால உதவிகள் செய்து தரப்படாதது கண்டிக்கத்தக்கது.

இரத்தினகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பல்வேறு பொருட்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சென்று விற்கும் விற்பனை பிரதிநிதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட போது தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு இடங்களில் உணவும் தங்குவதற்கு இடமும் இல்லாத நிலையில் தவித்தனர். இதுதொடர்பாக மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்களை டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தரும்படி வேண்டினேன். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன.

ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை இப்போது மேலும் மோசமடைந்துள்ளது. இரத்தினகிரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களே வாடகை கொடுத்து தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தன. ஆனால், அந்த நிறுவனங்களால் தங்குமிடத்திற்கு வாடகை செலுத்த முடியாத நிலையில், இடத்தை காலி செய்யும்படி அவற்றின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். பல இடங்களில் தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களை உள்ளூர் மக்கள் தாக்க முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. மற்றொரு பக்கம் கையில் காசு இல்லாததால் அடுத்த வேளை உணவுக்கு கூட வழியின்றி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தவிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மராட்டியத்திலும் ஊரடங்கு ஆணை மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள  தமிழர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, அவர்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டியது மராட்டிய மாநில அரசின் கடமை ஆகும். தமிழர்கள் வாழும் பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்கள், தமிழர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வரும் நிலையில், அடுத்து என்ன நிகழும் என்பது தெரியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அச்சம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள், நடந்தே தமிழகம் செல்லலாம் என்று முடிவெடுத்து அங்கிருந்து புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் ஆகும். இத்தகைய சூழலில் உணவு, தங்குமிடமின்றி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளூர் மக்களின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி பொது இடங்களில் கூடினால் அது நோய்ப்பரவலை அதிகரிப்பது உள்ளிட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அங்கிருந்து இளைஞர்கள் தமிழகத்துக்கு நடந்தே செல்லலாம்  என்று நினைப்பதும் மிக ஆபத்தானது. இத்தகைய ஆபத்தான முடிவுகளை இளைஞர்கள் கைவிட வேண்டும்.

இந்த விவகாரத்தில் மராட்டிய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை செய்து தர வேண்டும். அவர்கள் அச்சமின்றியும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் வாழ வகை செய்ய வேண்டும். தமிழக அரசும் மராட்டிய அரசை தொடர்பு கொண்டு, அங்கு வாடும் தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படி வலியுறுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக