வியாழன், 2 ஏப்ரல், 2020

மத்திய அரசின் நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் மக்களை துன்புறுத்துகிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. -K.S.அழகிரி

வரலாறு காணாத வகையில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்து மக்கள் உயிரை காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளே முடங்கி வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தை பறிகொடுத்து வாழ்வாதாரத்திற்காக கடும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் மக்களை துன்புறுத்துகிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. 

சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவற்றுக்கு வட்டிவிகிதத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தற்போது சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்பட்டுவரும் 7.9 சதவீத வட்டியை 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அதேபோல தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பெறுகிற வருமானம் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. தங்களது மாத அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கு செலுத்துகிறார்கள். தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வைப்புநிதிக்கான வட்டிவிகிதத்தை மத்திய பா.ஜ.க. அரசு குறைத்ததை விட தொழிலாளர் விரோத நடவடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.

அதேபோல பொது வருங்கால வைப்புநிதி என்பது பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களில் செலுத்தப்பட்ட மொத்த தொகுப்பாகும். இதில் முதலீடு செய்தால் அதிக வட்டியும் பாதுகாப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இத்தகைய திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கிறார்கள். அந்த நம்பிக்கைகளை சீர்குலைத்து சிறுசேமிப்பு செய்கிற பழக்கத்தில் பின்னடைவு ஏற்படுகிற வகையில் செயல்பட்ட மத்திய பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்து வாங்கும் சக்தி இல்லாமல் இருக்கிற நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும்.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக பிரதமர் பெயரில் ஒரு அறக்கட்டளையை மோடி உருவாக்கியிருக்கிறார். ஆனால் 1948 முதல் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த நிதியில் டிசம்பர் 2019 நிலவரப்படி ரூபாய் 3800 கோடி செலவழிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 2018 - 19 ஆம் ஆண்டில் கூட ரூபாய் 212 கோடி தான் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை இயற்கை பேரழிவுகளான வெள்ளம், புயல், பூகம்பம் மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரண தொகையை பிரதமர் வழங்குவது வழக்கமாகும். இந்த நிதிக்கு வழங்கப்படுகிற நன்கொடைக்கு 100 சதவீத வரிச்சலுகை உண்டு.

கடந்த 72 ஆண்டுகளாக நடைமுறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் நிலுவையில் இருக்கிற ரூபாய் 3800 கோடியை பயன்படுத்தாமல் புதிதாக தமது பெயரில் புதிய நிதியத்தை உருவாக்குவது ஏன்? சமீப காலமாக மத்திய அரசில் ஏற்பட்டுள்ள அதிகாரக் குவியலின் காரணமாக எல்லாவற்றுக்கும் பிரதமரை முன்னிலை படுத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழி வகுக்குமா? 136 கோடி மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்தி திட்டங்களை அறிவிப்பது ஏற்ப்புடையது தானா? கொரோனா போன்ற கொடிய நோயை எதிர்க்க தனிப்பட்ட முறையில் பிரதமரை முன்னிலைப்படுத்தாமல் ஏற்கனவே மிகச்சிறப்பாக  நடைமுறையில் இருக்கிற பிரதம மந்திரி நிவாரண நிதியை புறக்கணித்து புதிய நிதியத்தை உருவாக்கியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக