திங்கள், 30 நவம்பர், 2020

நரியாக, புலியாக, சிறுத்தையாக, சிங்கமாக வாழாமல், மனிதர்களாக, தமிழர்களாக வாழ்வோம்! - சுப.உதயகுமாரன்.



நரியாக, புலியாக, சிறுத்தையாக, சிங்கமாக வாழாமல், மனிதர்களாக, தமிழர்களாக வாழ்வோம்! - சுப.உதயகுமாரன்.

நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், செட்டிகுளம் ஊர் இந்திரா நகர் பகுதியில் இரு தரப்பாரிடையே நேற்று (நவம்பர் 27, 2020) ஒரு மோதல் நடந்ததாகவும், பல வீடுகள் தாக்கப்பட்டதாகவும், ஏராளமான இருசக்கர வாகனங்கள் நொறுக்கப்பட்டதாகவும், குடிநீர்த் தொட்டி ஒன்று உடைக்கப்பட்டதாகவும், இன்று காலை எட்டு மணியளவில் தில்லி பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவர் எனக்கு தகவல் தெரிவித்து, வேறு ஏதாவது செய்திகள் தெரியுமா என்று கேட்டார்.  விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் என்றேன்.

செட்டிக்குளம் மற்றும் கூட்டப்புளி போன்ற ஊர்களிலிருந்து என்னோடு நெருங்கியத் தொடர்பிலிருக்கும் சில தோழர்களை அழைத்து விசாரித்தபோது, அவர்களுக்கே எந்தத் தகவலும் தெரியவில்லை. அப்படியானால் நான் கேள்விப்பட்டது ஒரு சிறு தனிமனிதத் தகராறாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் நான் கடந்து சென்றேன்.

ஆனால் இன்று மாலை என்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவர் சம்பவ இடத்திற்கு தான் சென்றுவந்ததையும், அங்கே விசாரித்து அறிந்துகொண்ட தகவல்களையும் என்னோடுப் பகிர்ந்துகொண்டார்.

இந்திரா நகர் பகுதியில் ஐந்து இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும், நான்கு பேர் கைது செய்யப்பட்டு,  மேலும் பலரை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 2, புதன்கிழமை அன்று கோட்டாட்சியர் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையானாலும், உரிய நடவடிக்கைகள் எடுக்க பல்வேறு அதிகார மையங்களும் அவற்றை அணுகும் வழிமுறைகளும் உள்ளன. அவர்களை முறைப்படி அணுகியும் உரிய நீதியைப் பெற முடியாமற்போனால், போராட்டங்களில் ஈடுபடலாம். அதைவிடுத்து, பொறுப்பைத் தத்தம் கைகளில் எடுத்துக்கொண்டு, அனைத்துத் தரப்பாரும் வன்முறையில் ஈடுபடுவது பண்பாடற்ற காட்டுமிராண்டித்தனமாகும்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், கட்டாயமாக சட்டப்படித் தண்டிக்கப்பட்டாக வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 

தலைமுறை தலைமுறையாக சாதி, மத பேதமின்றி அடுத்தடுத்தும், அன்னியோன்னியமாகவும் வாழ்ந்துவரும் செட்டிக்குளம்-புதுமனை மக்கள் தொடர்ந்து அப்படியே வாழ்வதுதான் ஒரே தீர்வாக அமையும்.

நரியாக, புலியாக, சிறுத்தையாக, சிங்கமாக வாழாமல், மனிதர்களாக, தமிழர்களாக வாழ்வோம், தோழர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக