சனி, 28 நவம்பர், 2020

நிவர் புயலின் தாக்கத்தால் தமிழக மக்களின் பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில் தமிழக அரசு தொடர் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும்.- ஜி.கே.வாசன்.

 


நிவர் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழக மக்களின் பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில் தமிழக அரசு தொடர் நிவாரண உதவிகளை செய்திட வேண்டும்.- ஜி.கே.வாசன்.

வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் அதி தீவிர புயலாக உருமாறி நேற்று நள்ளிரவு முதல் விடியற் காலை வரை தமிழகத்தில் சென்னை மற்றும் சுமார் 5 மாவட்டங்களில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

குறிப்பாக கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டப் பகுதிகளில் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் காற்றின் தாக்கத்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆனால் புயலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொது மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் பயன் தந்துள்ளது. அதாவது புயல் சின்னம் உருவான அறிவிப்பு வெளிவந்த உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவிப்புகள் ஆகியவற்றை தமிழக அரசு முறையாக சரியாக மேற்கொண்டது. 

இதன் காரணமாக புயலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொது மக்களை பெரிதளவில் காப்பாற்ற முடிந்தது. 

அதே சமயம் புயல் தாக்கிய மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் புயலால் மரங்கள் சாய்த்ததும், கம்பங்கள் சாய்ந்ததும், வீடுகள் இடிந்ததும் உள்ளிட்ட பாதிப்புகள் தவிர்க்க முடியாத இயற்கையின் சீற்றத்தால் தான்.

இச்சூழலில் தமிழக அரசு புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு முதற்கட்டமாக அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும். குறிப்பாக கரையோர பகுதியில் வாழ்பவர்கள், தாழ்வான பகுதியில் வாழ்பவர்கள், வீடுகளை இழந்தவர்கள் போன்றோரை தமிழக அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் தமிழக அரசு இயல்பு நிலை திரும்பும் வரை நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உணவு உள்ளிட்ட அடிப்படையான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 

இந்த நிவர் புயலால், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த நிவாரணத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன். 

த.மா.கா வினர் தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் அவரவர் சார்ந்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக