திங்கள், 9 நவம்பர், 2020

ஆசியாவில் இந்தியாவை ஒர் போர்முனைத் தளமாக மாற்றுவதற்குப் பதிலாக, பொருளாதார முன்னேற்றத் தளமாக மாற்ற வேண்டும்.- டாக்டர்.K.கிருஷ்ணசாமி

மாறாத அமெரிக்கா..!
மாற்ற வேண்டும் ஜோ பைடன்..!!
 
 கடந்த நான்கு தினங்களாக இழுபறியாக இருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, பெரும்பாலான உலக நாடுகள் எதிர்பார்த்தது போன்றே இனிதே முடிவுற்று இருக்கிறது. பென்சில்வேனியா வெற்றியின் மூலம் ஜோ பைடன் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. 538 ஆசனங்களுக்கான தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் 306 ஆசனங்களை தாண்டிவிடுவார் என்றே தெரிகிறது. அவர் மட்டுமல்ல தமிழகத்தை தாயிடமாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் மிக்க மகிழ்ச்சியானதாகும். வெற்றி பெற்ற இருவருக்கும் புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு மட்டுமல்ல, ஏகாதிபத்திய வல்லரசும் கூட. அதனுடைய அதிபர்களாக யார் வந்தாலும் உலக பாட்டாளி வர்க்கத்திற்கும், உழைப்பாளிகளுக்கும் பெரிய நன்மைகள் எதுவும் கிட்டி விடப்போவதில்லை. எனினும் என்ன காரணத்தினாலோ டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறக்கூடாது, ஜோ பைடன் வெற்றி பெற வேண்டுமென உலகத்தின் பெரும்பாலான நாடுகள் விரும்பின. ட்ரம்ப் அவர்கள் கடந்த 4 ஆண்டு காலத்தில் பெரும்பாலான உலக நாடுகளின் பகையைத் தேடிக் கொண்டார். கடந்த நூறு ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஆனவர்களில் சர்வதேச அளவில் இவ்வளவு வெறுப்பை யாரும் சம்பாதித்துக் கொண்டதில்லை. அது மட்டுமல்ல, அமெரிக்கா பல இனங்களை கொண்ட ஒரு குடியேற்ற நாடு. அப்படிபட்ட தேசத்தில் கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறை-அடக்குமுறையைப் பகிரங்கமாக ஆதரித்தது; ஹிஸ்பானிக்ஸ் (Hispanics)  என்று அழைக்கப்படக்கூடிய லத்தீன் – அமெரிக்க நாடுகளிலிருந்து குடியேறிய ஏழை, எளிய மக்கள் மீது வெறுப்புகளை உண்டாக்கியது; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து வேலைவாய்ப்புக்காக வரக் கூடியவர்களைக் கட்டுப்படுத்த HB1 விசா போன்ற கடும் கட்டுப்பாடுகளை விதித்தது, சீன நாட்டின் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு, அமெரிக்காவில் கரோனாவை கட்டுப்படுத்தத்  தவறியதன் விளைவாக இலட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரை பலி கொடுத்தது ஆகியன அவருக்கு இந்த மோசமான தோல்வியை தந்திருக்கின்றன.

            230 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகத்தைத் தூக்கிப் பிடித்து ஆட்சி செய்யும் அமெரிக்காவில் அவர் மிக மிக மோசமான சர்வாதிகாரி போலவே நடந்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கறுப்பின இளைஞரை பட்டப்பகலில் வெள்ளையின காவல்துறை அதிகாரி தன் முழங்காலால் அந்த இளைஞரின் கழுத்தில் அமுக்கி கொன்ற செயலுக்கு உலகெங்கும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனால் அதுபோன்ற ஒரு கொடூரமான சம்பவத்தை அதிகாரத்திலிருந்து கண்டிப்பதற்குப் பதிலாக அதை நியாயப்படுத்திப் பேசியது கறுப்பின மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. என்னதான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவர் பாடுபட்டு இருந்தாலும் கூட, அவருடைய ஒரு குறிப்பிட்ட இனச் சார்பு போக்கும், சர்வாதிகார நடவடிக்கைகளும் பெரும்பாலான அமெரிக்க மக்களை  அவருக்கு எதிராக அணி திரள வைத்து விட்டன. ட்ரம்பின் வீழ்ச்சியும், ஜோ பைடன் வெற்றியும் இலட்சோபலட்சம் கறுப்பின மக்களுக்கும், லத்தீன்-அமெரிக்க குடியேற்ற வாசிகளுக்கும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து குடியேறிய மக்களுக்கும் மிக மிக மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். அது மட்டுமல்ல, கரோனாவைக் காட்டிலும் பன்மடங்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடியது பருவநிலை மாற்றங்கள், அந்த பருவநிலை மாற்றங்களை தடுத்திட உருவாக்கப்பட்ட பாரிஸ் தட்பவெப்பநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதும், கரோனா உலக தொற்றாக மாறிய சூழலில் உலக சுகாதார சம்மேளனத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக, அதிலிருந்து அமெரிக்கா (WHO) வெளியேறியதும் அவர் சர்வதேச உலகிற்கு செய்திருக்கக்கூடிய மிகப் பெரிய தீங்குகள். 

 அதுமட்டுமன்றி, முதலில் உலக வர்த்தக சம்மேளனம் (WTO) என்ற அமைப்பை உருவாக்க காரணமாக இருந்ததும்,  அதிலிருந்து அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறியதும் வளரும் மூன்றாம் நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவின் சுயலாபத்திற்காக இந்தியாவை ‘குவாட்’ என்ற அமைப்பில் தள்ளி விட்டு இருக்கிறார்.  அதேபோல கரோனா உச்சக்கட்டமாக இருந்த நேரத்தில் ஹைடிராக்சி குளோரோகுயின் (HQ) மாத்திரைகளை அமெரிக்காவிற்கு தரவில்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்தியாவை மிரட்டியதை இந்திய மக்கள் மறந்து விட முடியாது.

  ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் வெற்றி சர்வதேச அளவில் ஒரு சமநிலையை உருவாக்குவதாகவும், அமெரிக்காவில் அனைத்து இன மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாகவும் அமையும், அதனுடைய பிரதிபலிப்புகள் உலக அரங்கிலும் எதிரொலிக்கும்.  ஆசியாவில் இந்தியாவை ஒர்  போர்முனைத் தளமாக மாற்றுவதற்குப் பதிலாக, பொருளாதார முன்னேற்றத் தளமாக மாற்ற வேண்டும் என்பதே  ஒட்டுமொத்த இந்திய மக்கள் மற்றும் உலக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக