வெள்ளி, 6 நவம்பர், 2020

நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.- E.R.ஈஸ்வரன்


 நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.

நீண்ட காலமாக தொழிற்சாலைகள் தரப்பிலும், தொழில் சார்ந்த பல அமைப்புகள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த ஒரு முக்கியமான தேவையை தமிழக அரசு நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிற்சாலைகள் 120  ஏக்கர் வரை வைத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன் 60 ஏக்கர் வைத்து  கொள்ளலாம் என்று இருந்ததை இரண்டு மடங்கு ஏற்றி 120 ஏக்கராக மாற்றியிருப்பது தொழிற்சாலைகளின் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் உட்பட பல தொழிற்சாலைகள் அதிக நிலத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பல தொழிற்சாலைகள் தங்களுடைய விரிவாக்கத்திற்கும், புது தொழில்களை ஆரம்பிப்பதற்கும் நிலம் கையகப்படுத்தி வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இது எடுத்து சொல்லப்பட்டாலும் 2018 -ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் சட்டமன்றத்தில் நில சீர்திருத்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 28, 2020 முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. 

தொழிற்சாலைகளுடைய தேவைக்கு நிலம் தேவைப்பட்டாலும் அதை நேரடியாக தங்கள் பெயரில் வைத்து கொள்ள முடியாமல் பினாமிகள் பெயரில் வைக்க வேண்டிய தேவை இருந்து வந்தது. அதை பயன்படுத்தி கொண்டு அரசு அதிகாரிகள் தொழிற்சாலைகளை துன்புறுத்தி வந்த நிகழ்வுகளும் உண்டு. இப்போது அரசாங்கம் இதை புரிந்து கொண்டு தீர்வை கண்டதன் மூலம் தொழிற்சாலைகள் நிம்மதியாக தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும். 

நில சீர்திருத்த ஆணையர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான கோப்புகள் இந்த பிரச்சினைகளால் கிடப்பில் கிடந்தன. ஒற்றை உத்தரவின் மூலமாக தமிழக அரசு அத்தனை பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உண்டு. அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். புதுப்பிக்கத்தக்க இயற்கை மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்தில் அரசு கவனம் செலுத்தினாலும் இதைப்போன்ற நில சீர்திருத்த பிரச்சினைகள் தடையாக இருந்து வந்தது. இப்போது செயல்படுத்தப்பட்டு இருக்கின்ற மாற்றம் மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பயன்படும். அதன் மூலம் அந்த துறை வளர்ச்சி பெறும். தொழில் வளர்ச்சிக்காக சொல்லப்பட்ட சீர்திருத்தங்களை புரிந்து கொண்டு இந்த முடிவுகளை எடுத்து புதிய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக