சனி, 13 மார்ச், 2021

அனைத்துச் சுகாதார நிலையங்களும் 24 மணிநேர மருத்துவம் அளிக்கும் மையங்களாக மேம்படுத்தப்படும் என்று பாமக வாக்குறுதி அளித்திருந்தது.- DR.S.ராமதாஸ்


 பா.ம.க. தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்!

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நலவாழ்வுத் துறையில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் நிர்வாகத் தலைநகரம் புதுதில்லி, பொருளாதாரத் தலைநகரம் மும்பை என்றால், நலவாழ்வுத் தலைநகரம் சென்னை என்று அழைக்கப்படும் அளவுக்குச் சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன. பிற மாநிலங்கள், பிற நாடுகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுக் காப்பாற்ற முடியாது என்று கைவிரிக்கப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் சென்னை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதும், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளின் மூலம் அவர்கள் குணப்படுத்தப்பட்டதும் வரலாறு ஆகும்.

மருத்துவக் கல்வியிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி, புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அறிவித்தது. அத்திட்டத்தின்படி தமிழ்நாட்டுக்குக் குறைந்தது 10 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இத்திட்டத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டிற்குப் புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும் கேட்டுக் கொண்டார். அதன்படி, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாகத் தமிழ்நாட்டிற்கு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. இது வரலாற்றுச் சாதனை ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சியால் நிறைவேறிய திட்டங்கள்

தமிழ்நாட்டில் ஊர்ப்புற மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்காகப் பல்வேறு செயல் திட்டங்களை பா.ம.க. முன்மொழிந்தது. அவற்றில் சில திட்டங்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:

1. அனைத்துச் சுகாதார நிலையங்களும் 24 மணிநேர மருத்துவம் அளிக்கும் மையங்களாக மேம்படுத்தப்படும் என்று பா.ம.க. வாக்குறுதி அளித்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 422 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. 341 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிகளுக்குக் கிடைக்க வெற்றி ஆகும். 

2. சென்னையில் முதியோர் நல மையம் அமைக்கப்படும் என்று பா.ம.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வைக்கப்பட்டிருந்தது. இப்போது சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் தேசிய முதியோர் நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த மையம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வருகிறது.

நலவாழ்வுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குறுதிகள்

தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதன் மூலம், மருத்துவச் செலவுகளுக்காக மக்கள் ஒரு பைசாகூடச் சொந்தப் பணத்தைச் செலவு செய்யத் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்படும். 

தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்குவதற்கு வசதியாக, இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள தேசிய சுகாதாரச் சேவைக்கு  உருவாக்கப்படும்.

வருமான வரம்பின்றி அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். அதற்கான பிரீமியத் தொகையைத் தமிழக அரசே செலுத்தும். 

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்ட மக்களுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து வகையான பாதிப்புகளுக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்ட, வட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். 

தமிழ்நாட்டில் 50 வயதைக் கடந்த அனைவருக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இதை மக்கள் இலவசமாகச் செய்துகொள்ள முடியும்.

7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்

மத்திய அரசு நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம், பெரம்பலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலை உள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இந்தக் கல்லூரிகள் 2023 & 24 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். 

கடலூர், ஈரோடு மாவட்டங்களில் 2ஆவது அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். இந்தக் கல்லூரிகளும் 2023 & 24 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

கூட்டுறவு மருத்துவக் கல்லூரிகள்

மருத்துவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டுறவுச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலமாக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்துவது ஊக்குவிக்கப்படும். கூட்டுறவு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கத் தமிழக அரசின் சார்பில் 25% மானியம் வழங்கப்படும். இந்த மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்படும் என்பதால், ஏழைகளும் மருத்துவக் கல்வி பெற வாய்ப்பாக அமையும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அறுவை சிகிச்சைகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட, வட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்கு நடைமுறையில் உள்ள அதிநவீனச் சிகிச்சை முறைகள் குறித்துப் பயிற்சிபெற நடவடிக்கை எடுக்கப்படும். 

உலகின் தலைசிறந்த மருத்துவப் பல்கலைக் கழகங்களான  Harvard, Johns hopkins, Stanford 

 உள்ளிட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்களுடன் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் இணைக்கப்படும்.

ரூ.1000 கோடியில் புற்று நோய் சிகிச்சை மையம்

சென்னையில் ரூ.1000 கோடி செலவில் மாநிலப் புற்றுநோய் மருத்துவ மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மிகவும் அதிக விலை கொண்டவை என்பதால் அவற்றை வாங்க மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இதற்காகத் தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

மருந்து மாத்திரைகளின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தரப்பெயர் இல்லாத மருந்து மாத்திரைகள்  ஊக்குவிக்கப்படும். 

அனைத்து ஊர்களுக்கும் ஆஷாக்கள் 

தமிழகத்தின் ஊர்ப்புறங்களில் மருத்துவச் சேவை வழங்குவதில் உதவுவதற்காக ஆஷாக்கள்  நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 79,394 ஊர்களிலும் இந்தச் சேவையை வழங்க வசதியாக, ஒரு இலட்சம் ஆஷாக்கள் நியமிக்கப்படுவார்கள். 

பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் அவர்களுடைய ஒரு நாள் தேவைக்கான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பது உறுதி செய்யப்படும். 

கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால நிதிஉதவி இப்போது உள்ள 18,000 ரூபாயிலிருந்து, ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். இந்த நிதி உதவி அரசு மருத்துவமனை மட்டுமின்றித் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும்.

நோய்த்தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடம் பரப்புவதற்காகச் சிற்நூர் தொடங்கி நகரம் வரை அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கும், உடற்பயிற்சிகள் செய்வதற்கும் திடல்கள் உருவாக்கப்படும்.

பள்ளிக்கூட மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் அனைத்துப் பள்ளிச் சிறார்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இதற்காக, அவர்களுக்கு மருத்துவ ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். 

பொதுமக்கள் அனைவருக்கும் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்.

பெருகிவரும் முதியோர் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு உருவாக்கப்படும்.

புகையிலைக்குத் தடை

பொது இடங்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்ட தடை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும். 

அரசு மருத்துவமனைகளில் புகையிலை மீட்பு மையங்கள் அமைக்கப்படும். மருத்துவர்கள் அனைவரும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். கட்டணமில்லாத் தொலைபேசி வழியாகப் புகையிலை மீட்பு வழிகாட்டுதல் அளிக்கப்படும்.

புகையிலைப் பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனையைக் குறைக்கும் நோக்குடன் 100% மதிப்புக்கூட்டல் வரி விதிக்கப்படும். 

பள்ளிகள், கல்லூரிகள் 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற விதியும், 18 வயது முடியாதவர்களுக்கும் புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற விதியும் கட்டாயமாகச் செயலாக்கப்படும்.

108 ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கப்படும், ஊர்திகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். தமிழகத்தின் எந்த மூலையையும் இந்த அவசர ஊர்திகள் 10 நிமிடங்களுக்குள் சென்றடையும்படி செய்யப்படும். அவசர ஊர்திகளில் தகுதி பெற்ற செவிலியர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும். அவசர ஊர்திகளில் அவசரச் சிகிச்சைக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அவசர ஊர்தி ஓட்டுநர்களுக்கும், செவிலியர்களுக்கும் சிறப்பு முதலுதவிப் பயிற்சி அளிக்கப்படும். 

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு முழு அளவில் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

மருத்துவச் சுற்றுலா

தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் மருத்துவச் சுற்றுலா  ஊக்குவிக்கப்படும். வாய்ப்புள்ள இடங்களில் நலவாழ்வுச் சுற்றுலா  ஊக்குவிக்கப்படும்.

குழந்தைகள் நலன்

அனைத்துக் குழந்தைகளுக்கும் 100% தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். 

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை குழந்தையின் தாய்க்கு நாள்தோறும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக