திங்கள், 22 மார்ச், 2021

தமிழ்நாடு மற்றும் புதுவை திருக்கோயில்களில் கருவறை அர்ச்சனை, குடமுழுக்கு, வேள்விகள் அனைத்தும் தமிழ் மந்திரங்களை ஓதி, தமிழ்வழியில் நடக்க வேண்டும்.

 திருக்கோயில்களில் அர்ச்சனை  தமிழ் மந்திரங்களில் நடக்க வேண்டும்! 

கோருவோருக்கு மட்டுமே சமற்கிருதத்தில் நடக்க வேண்டும்!

தெய்வத் தமிழ்ப் பேரவை தீர்மானம்!

தமிழ்நாடு மற்றும் புதுவை திருக்கோயில்களில் கருவறை அர்ச்சனை, குடமுழுக்கு, வேள்விகள் அனைத்தும் தமிழ் மந்திரங்களை ஓதி, தமிழ்வழியில் நடக்க வேண்டும் என்ற நோக்கிலும், தமிழர் ஆன்மிகத்தை சமகாலத்திற்கேற்ப வளர்க்கும் நோக்கிலும் தமிழ் ஆன்மிகச் சிந்தனையாளர்கள், தமிழ் வழிபாடு செய்விக்கும் சான்றோர்கள் ஆகியோர்களைக் கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் தேனி மாவட்டம் – குச்சனூரில் நேற்று (21.03.2021) நடைபெற்றது. இதன் முதல் கூட்டம், கடந்த 14.02.2021 அன்று திருச்சியில் நடைபெற்றது. 

குச்சனூரில் நேற்று (21.03.2021) நடந்த கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். குச்சனூர் வட குருபகவான் – இராசயோக பீடம் மடாதிபதி திரு. குச்சனூர் கிழார் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார், கருவூறார் வழி சித்தர் பீடம் – சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், தமிழ் வழிபாட்டுரிமைச் செயல்பாட்டாளர் இறைநெறி இமயவன், திருவில்லிப்புத்தூர் ஆன்மிகர் ஐயா மோகனசுந்தரம் அடிகளார், செந்தமிழ் ஆகம அந்தணர் சென்னை திரு. சிவ. வடிவேலன், ஆசீவகம் – சமய நிறுவனர் திரு. சுடரொளி, கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், ஆன்மிகர் பழைய வத்தலகுண்டு திரு. பொன்னுச்சாமி, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நல்லையம்பெருமாள், சின்னமனூர் புலவர் து. வெங்கடாசலம், சென்னை திரு. செயராஜ், புதுச்சேரி திரு. விசயகணபதி, சிதம்பரம் முனைவர் சுப்பிரமணிய சிவா, பெங்களூர் சித்தரடியான் திரு. இரமேசு, ஆன்மிகர் உமா மகேசுவரி அம்மையார் (மார்க்கையன்கோட்டை)  உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளிருந்தும், கர்நாடகம் – கேரளம் - புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த தமிழ் ஆன்மிகர்கள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். 

கூட்டத்தில், “தெய்வத் தமிழ்ப் பேரவை” என்று இவ்வமைப்புக்குப் பெயர் சூட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 16 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஐயா பெ. மணியரசன் அவர்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஒருமனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1. தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த திருக்கோயில்களில் வழக்கமான அன்றாட அர்ச்சனைகள் தமிழ் மந்திரங்களைச் சொல்லி நடத்தப்பட வேண்டும். அந்தந்த வகைக் கோயிலுக்குரிய தமிழ் மந்திரங்களை ஏற்கெனவே இந்து அறநிலையத்துறை புத்தகங்களாக அச்சிட்டு வெளியிட்டிருக்கிறது. 

விரும்பி கோரிக்கை வைப்போருக்கு மட்டுமே சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும். 

இதற்கான வழிகாட்டல் சுற்றறிக்கையை இந்து அறநிலையத்துறை திருக்கோயில் நிர்வாகங்களுக்கு உடனடியாக அனுப்பி, அதுபோல் அர்ச்சனை தமிழ்வழியில் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதை சரியாகக் கடைபிடிக்காத அர்ச்சகர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருக்கோயில்களில் தமிழ் மந்திரங்கள் சொல்லி, கருவறை அர்ச்சனை தமிழ்வழியில் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதை சரியாகக் கடைபிடிக்காத அர்ச்சகர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

2. ஏற்கெனவே தமிழ்நாடு அரசால் தமிழ்வழி அர்ச்சனைக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, பட்டயச் சான்று பெற்றுள்ளவர்களை திருக்கோயில்களின் கருவறை அர்ச்சகர்களாக உடனடியாகப் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

திருக்குடமுழுக்கு உள்ளிட்ட சிறப்பு பூசைகள் நடைபெறும் நாட்களில் கூடுதலாக தமிழ் மந்திர அர்ச்சகர்கள் தேவைப்படுகின்றனர். அத்தேவையை நிறைவு செய்வதற்கு இந்து அறநிலையத்துறை தமிழ் மந்திரத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றோர் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து வைத்து, தேவையான கோயில்களுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அதுபோல், தகுதியுள்ள தமிழ் மந்திர அர்ச்சகர்களை எமது தெய்வத் தமிழ்ப் பேரவை இந்து அறநிலையத்துறைக்கு வழங்குவதற்கு அணியமாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

3. தமிழ்நாட்டில் சற்றொப்ப நூறாண்டுகளாகச் செயல்படும் இந்து அறநிலைய ஆட்சித்துறையைக் கலைத்துவிட்டு, அதன்கீழ் உள்ள கோயில்கள் அனைத்தையும் பக்தர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று ஆரியத்துவாவாதிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வருகின்றனர். தங்கு தடையற்ற ஆரிய பிராமண – சமற்கிருத மேலாதிக்கத்தின் கீழ் முழுமையாக நம் கோயில்கள் போய்விட வேண்டும் என்ற சூதின்கீழ் இச்சூழ்ச்சித் திட்டத்தை அவர்கள் அறிவிக்கிறார்கள். 

வர்ணாசிரமவாதிகளின் இச்சூழ்ச்சிக் கோரிக்கையை தமிழர்கள் புரிந்து கொண்டு, அனைவரும் இதனைப் புறந்தள்ள வேண்டும். இவ்வாறு கோரிக்கை வைப்போரைக் கண்டித்துத் தமிழ்நாடு அரசு விளக்க அறிக்கைகள் வெளியிட வேண்டும்.

4. நம்முடைய தமிழர் ஆன்மிகம் மிகவும் தொன்மையானது; பன்மையானது. கோயில் ஆன்மிக நிகழ்வுகளையும், குடும்பச் சடங்குகளையும் பழங்காலத்திலிருந்து தமிழர்கள் தமிழ் மந்திரங்களின் வழியாகத்தான் செய்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் திணிக்கப்பட்ட சமற்கிருதத்தின் ஆதிக்கத்திற்குப் பலியாகி தமிழர்கள் தங்கள் ஆன்மிக மொழியான தமிழை இழந்து, தற்சார்பற்ற நிலையில் இருக்கிறோம். இந்த அவலத்தைப் போக்கி, நம் முன்னோர்களின் தமிழ் ஆன்மிகத்தை எழுச்சி பெறச் செய்ய வேண்டும்.

எனவே, நம்முடைய தமிழ் மக்கள் குடும்பச் சடங்குகள் அனைத்தையும் தமிழ் மந்திரங்கள் வழியாக நடத்தும் சமயச் சான்றோர்களை அழைத்து நடத்த வேண்டும். நம்முடைய அனைத்துத் திருக்கோயில்களிலும் கருவறையிலிருந்து வேள்விச் சாலைகள், கலசக் குடமுழுக்கு வரை தமிழ் மந்திரங்களிலேயே நடைபெற வேண்டும். இதற்கான வேண்டுகோளை ஒவ்வொரு கோயிலிலும் தமிழ் மக்கள், அந்தக் கோயில் நிர்வாகிகளிடமும் அர்ச்சகர்களிடமும் எழுப்ப வேண்டும். அன்றாட வழிபாட்டிற்குக் கோயிலுக்குச் செல்லும் மக்கள், தமிழ்வழியில் அர்ச்சனை செய்யுமாறு வலியுறுத்திக் கேட்க வேண்டும். 

தமிழ் வழிபாட்டு மூலம்தான் நம்முடைய சான்றோர்களும், அரசர்களும் தெய்வத் திருவருள் பெற்றிருக்கிறார்கள். நாமும் அவ்வாறு பெறுவோம் என்று உணர்வு கொள்ளுமாறு தமிழ் மக்களை தெய்வத் தமிழ்ப் பேரவை கேட்டுக் கொள்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக