வெள்ளி, 12 மார்ச், 2021

பா.ஜ.க.வின் கொத்தடிமை ஆட்சியை வீட்டுக்கனுப்பும் கவுண்ட்டவுன் (Countdown) ‘‘அமைதிப் புரட்சி’’ தொடங்கி விட்டது! - கி.வீரமணி


நாளை முதலமைச்சராக மக்களால் அமர்த்தப்படவிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஏழு தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்கள்!

ஆட்சியில் இருந்தபோது சாதிக்க முடியாத அ.தி.மு.க. ஆட்சி முடியப் போகும்போது அவசர அவசரமாக திட்டங்களை அறிவிப்பதா?

தளபதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம்!

புதிய தமிழ்நாடு புலரப் போவதும் நிச்சயம்! நிச்சயம்!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், நாளைய முதலமைச்சருமான அருமை சகோதரர் மானமிகு மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்திறன் - எதிர்க்கட்சியினர் உள்பட அனைவரையும் மிகப்பெரிய வியப்புக்குள்ளாக்குகிறது!

கடந்த சில மாதங்களாக அவரது அயராத உழைப்பு, ‘‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றம்‘’ என்ற பாடத்தைக் கற்பித்து, புதியதோர் திருப்பத்தை தமிழ்நாட்டில் இன்னும் இரண்டே மாதங்களில் ஏற்படுத்தும் திசையைக் காட்டும்  நம்பிக்கை ஒளியாகி நிற்கிறது!

கோட்டைக்குப் போகும்முன்பே முதல் பரிசு!

வெற்றிடம் என்று கூறியவர்கள் வெட்கப்படும் அளவுக்கு அவரது அரசியல் அணுகுமுறை புதுமையதாய், அமைதிப் புரட்சியின் பூபாளமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது!

மக்களாட்சி நிறுவ முதல் தேவை - மக்களின் மனமறிதல் - குறைகேட்டல் - நிவர்த்திக்க திட்டமிடல்.

இவற்றில் முதல் பரிசு பெற்றுவிட்டது - கோட்டைக்குப் புகுமுன்னரே - இந்தக் கொள்கைச் சிங்கம்!

கிராமத்து விவசாயிகள், ஊராட்சியில் உள்ள கிராமத்து பல தரப்பட்ட மக்கள் - தாய்மார்கள் இவர்களது உளமறிந்த உளவியல் வித்தகராகி, அதற்குச் செயல்வடிவம் தரவே தனக்கு ஆட்சி - அது காட்சிக்கு அல்ல; மக்களின் மீட்சிக்கு, இருட்டு நீங்கிய விடியலுக்கு என்று திட்டமிட்டு செயலாற்றுகிறார்; முத்தாய்ப்பாக, கூட்டணி கட்சிகளை வெற்றிப் பாதைக்கு 2019 -ஆண்டையும் மீறும் வகையில் திட்டமிட்டு, அரவணைத்து, அரசியல் கூட்டணியைக் கட்டிக் காத்து, மேலும் வலுவுள்ளதாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றியின் நுழைவு வாயிலுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாகிறார்!

அதிசயிக்கத்தக்க திட்டம் இவர் மார்ச் 7 ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் மக்கள் கடலின்முன் எடுத்துரைத்த 10 ஆண்டு செயல் திட்டம் - மக்களாட்சி என்றால், உண்மையில் அது அனைவருக்கும் அனைத்தும் தருவதுதான்!

‘குடிஅரசு’ இதழைத் தொடங்கும்போது

தந்தை பெரியார் கூறிய அதே இலட்சியம்!

‘குடிஅரசு’ என்று தனது வார ஏட்டினைத் தொடங்கிய தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமாக ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்ற இந்த இரண்டே சொற்களில் சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி எல்லாவற்றையும் அடக்கி விட்டார்.

அதை அப்படியே கொள்கைத் திட்டமாக, தொலைநோக்குத் திட்டமாகக் கொண்டு, தாழ்ந்த தமிழகமாக, தேய்ந்த தமிழ்நாடாக ஆக்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க.வின் ‘‘கொள்ளை ஆட்சிக்கு’’ விடை கொடுத்து, வரும் பத்தாண்டுகளுக்கு ஒரு புதிய ‘‘கொள்கை ஆட்சியை’’ நிறுவ அருமையான ஏழு திட்டங்களை அறிவித்திருப்பது காலத்தே செய்யும் கடமையாகும்.

இங்கிலாந்து நம் ஜனநாயகத்தின் மாடல் (அரசியல் சட்ட வகுப்பே) - அந்த அடிப்படை நாடாளுமன்ற விதிகளையே பெரிதும் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. அங்கே எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு அதன் ஆக்கப்பூர்வ பணியைச் செய்ய இத்தகைய திட்டங்களைத் தருவது, நிழல் அமைச்சரவை (Shadow Cabinet) அமைத்து அதற்குரிய திட்டங்களை வெளியிட்டு, அடுத்த பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்.

சிறந்த ஜனநாயக இலக்கணம் அது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது இந்த ஏழு திட்டங்களும் வளமான தமிழ்நாட்டை உருவாக்கும் திட்டங்கள்.

ஏற்றந்தரும் ஏழு திட்டங்கள்!

ஏழிசை போல் எளிய மக்களின் காதுகளில் இசையாக ஒலித்து ரீங்காரம் செய்து, அவர்தம் வாழ்க்கையை வளப்படுத்தப் போகும் திட்டங்கள்.

1. பொருளாதாரம் 2. வேளாண்மை 3. நீர்வளம் 4. கல்வி, சுகாதாரம் 5. நகர்ப்புற வளர்ச்சி 6. ஊரகக் கட்டமைப்பு 7. சமூகநீதி இப்படி எழுச்சிமிகு ஏழு திட்டங்களும் ஏற்றந்தரும் வளரச்சிப் படிகளாகும்.

எளிய மக்களின் வறுமையை விரட்டி, வளமையை கொழிக்கச் செய்ய, நோய்த் தடுப்புடன் வருமுன்னர் காக்க, பறிக்கப்படும் சமூக கல்வியை குலதர்மச் சிறையிலிருந்து மீட்டு, சமதர்மப் பூங்காவிற்கு அழைத்து வர, வளர்ச்சிக்குத் தேவை அடிக்கட்டுமானம்; ஆனால், அது விவசாயிகளின் விழிகளைப் பிடுங்கி அமைப்பதாக இருக்காமல், அவர்களின் வழியும் கண்ணீரைத் துடைப்பது என, ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திடும் அருமையான திட்டங்கள்.

இதைக் கண்டவுடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்று முதல் நாள் அவர் அறிவித்த பின்னர் (வழமை போல் பின்னால் கூறுகிறார்) ‘‘நாங்கள் மாதம் ரூ.1500 தருவோம்; 6 சிலிண்டர் விலையில்லாது தருவோம்‘’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

ஆட்சியில் இருக்கும்போது செய்தது என்ன?

ஆட்சியில் இருக்கும்போது, குறைந்தபட்சம் மாநில வரியைக் குறைத்து, மக்களது வாட்டத்தைப் போக்க முயற்சிக்காமல், வீட்டிற்குப் போகும் வேளையில், விதண்டாவாத மனப்பான்மையோடு இப்படி ‘‘ஏல அரசியல் பேரம்‘’ செய்வதைப் புரியாதவர்களா நம் தாய்மார்கள்?

‘‘ஆசை வெட்கமறியாது; பதவிப் பசி எதையுமே அறியாது’’ என்பதை அறியாதவர்களா பொதுமக்கள்? என்றாலும், மக்கள் ஆயத்தமாகி விட்டார்கள் - மாநிலத்தையேகூட அடகு வைத்து, மகளிர் நலனை அச்சப் படுகுழியில் தள்ளி, பதவியில் உள்ள பெண் அதிகாரிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி, குற்றமிழைத்தோருக்குப் பாதுகாப்பு அரண் அமைத்துவிட்டு, தாய்மார்களை ஏமாற்ற இப்படி ஒரு மாய்மாலமோ!

புதிய தமிழ்நாடு காண - பொழுது புலர்வது நிச்சயம்!

234 தொகுதிகளிலும் வெற்றி முரசின் ஒலி கேட்டாகவேண்டும்!

தமிழ்நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூகநீதி, பாலியல் நீதிகளில் உரிமைகளைப் பறித்த பாதக பா.ஜ.க.வின் கொத்தடிமை ஆட்சியை வீட்டுக்கனுப்பும் கவுண்ட்டவுன் (Countdown) ‘‘அமைதிப் புரட்சி’’ தொடங்கி விட்டது!

உதயசூரியன் உதிப்பது நிச்சயம்!

விடியலைத் தரவிருக்கும் தளபதி ஸ்டாலின் வெற்றியும் நிச்சயம்!

புதிய தமிழ்நாடு காண பொழுது

புலர்வதும் நிச்சயம்! நிச்சயம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக