வியாழன், 4 மார்ச், 2021

10.5% இட ஒதுக்கீடு பெற்ற வன்னியர் குல சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!! முயன்றால் முடியாதது எதுவுமில்லை.! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


அரவணைப்போருடன் அணிவகுப்போம்! 
அதிகார பகிர்வுடன் ஆட்சியமைப்போம்!!
10.5% இட ஒதுக்கீடு பெற்ற வன்னியர் குல சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.!

20% எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர்களுக்கு 7.5%, இதர பிரிவினருக்கு 2.5% இடப்பகிர்வு அளிக்கும் வகையில் தமிழகச் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் உள்ள வன்னிய மக்களின் நீண்டகால கோரிக்கை மற்றும் போராட்டங்களின் விளைவாகத் தமிழக அரசு எடுத்த முடிவு இது. இம்முடிவு குறித்து மற்ற சமுதாயங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சி கொள்வார்கள் என தெரியாது. 10.5% தனி இடஒதுக்கீடு பெற்றுள்ள வன்னியர் குல சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த இடப்பகிர்வில் எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை அளிக்கப்படாமல், அவரவருக்கான பங்கை அனுபவிக்கும் சமமான நிலை இருப்பதாகவே கருதலாம். மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கின்ற காரணத்தினால் அதில் உள்ள எந்த சமுதாயத்திற்கும் அவர்கள் அடையாளத்துடன் அவர்களுக்கான பங்களிப்பையும் மாநில அரசுகள் விரும்பும் நேரத்தில் நிறைவேற்ற முடிகிறது. இந்த எதார்த்தத்தோடு தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையின் அவசியத்தை இணைத்துப் பார்க்கவும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முன் வரவேண்டும். 

2007 ஆம் ஆண்டு பட்டியல் பிரிவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு 3% உள்இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட போதே குறைந்தபட்சம் தற்போது எம்.பி.சி பிரிவினர் பிரிக்கப்பட்டது போல மூன்றாகவோ, நான்காவோ பிரிக்கப்பட்டிருந்தால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பறிபோயிருக்காது. 200 புள்ளி சுழற்சி முறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டதால் தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் பிற பிரிவினருக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்று நாம் எச்சரித்த போது தமிழக அரசியல் கட்சிகள் எவரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.  எனவே தான் தேவேந்திரகுல வேளாளர்களுக்கான சம உரிமை, சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமெனில் பட்டியல் பிரிவிலிருந்து விலகுவது ஒன்றே தீர்வு என தீர்க்கமாக முடிவு எடுத்து, கடந்த 5 ஆண்டுகாலமாகத் தீவிரமாகப் போராடி வருகிறோம். தொடர்ந்து 100 வருடத்திற்கு மேலாகப் பட்டியல் பிரிவில் இடம் பெற்றக் காரணத்தினால் தாழ்வு சிக்கலுக்கு ஆளான சில ஓய்வு பெற்ற அதிகாரிகள் சமூக மாற்றம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் நமது பூர்வீக வரலாற்றுப் பெயரால் நம்மை அழைப்பதற்காகவே முழு திருப்தி அடைந்து, மதி மயங்கி, மண்ணுக்கும் விண்ணுக்கும் குதிக்கிறார்கள். ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளர் சொந்தங்களும்  அரசியல் உணர்வு பெறுவதும், தங்களுக்கான அரசியல் கட்சியான புதிய தமிழகத்தில் ஐக்கியமாவதும், தங்களை வழி நடத்திச் செல்லும் தலைவர் பின்னாலே ஒன்று திரளுவதும் தான் சமுதாயத்திற்கான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான அச்சாரம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் மக்களை அடையாளப்படுத்தும் தங்களின் இனமான தலைவரின் புகழ்பாடுவதும், தங்களுடைய போராட்டத்தாலும், உழைப்பாலும், கட்டியமைக்கப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் பெருமையை பறைசாற்றுவதை பாடுவதை விட்டு விட்டு,  ஓட்டுக்காகப் பேசிவிட்டுப் போகக் கூடியவர்களுக்கு புகழ் மாலை சூட்டுவது நன்றி கெட்டதனம் என்பதை இலட்சோப இலட்சம் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் நன்கு அறிந்து அமைதியாக இருக்கிறார்கள்.  காய்ந்த சருகுகள் சலசலப்பை உருவாக்குகின்றன; கட்டி கரும்புகள் நிலையாக நிற்கின்றன. 

பெயர் மாற்றத்திற்கு மட்டுமே குதுகலம் அடைவோரே.! பாதிக்கிணறு தாண்டினால் எவ்வளவு ஆபத்து என்பதைத் தாண்டி பார்த்துதான் உணர்ந்து கொள்வீர்களா? பெயரை வேண்டுமென்றால் வைத்துக் கொள், ஆனால் பட்டியல் பிரிவிலிருந்து நீக்க மாட்டோம் எனும் சூத்திரக்காரர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவில்லையெனில், நீங்கள் உங்கள் சந்ததியினருக்கும் பாதகம் செய்கிறீர்கள் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகுவீர்கள். இந்த சமுதாயத்திற்கு இனி விடிவுகாலமே கிடையாது என ஆயிராமாயிரம் பேர் விரக்தி நிலைக்கு ஆளாகிய காலகட்டங்களில் ஓடியும், ஒளிந்தும், சாதியை மறைத்தும் வாழ்ந்தீர்கள். இன்று உங்கள் ஊர், தாலுகா, மாவட்டம், மாநிலம் தாண்டி இன்று உலகெங்கும் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் ஒலிப்பதற்கு தங்களுடைய நலம், குடும்ப நலன்களைத் தியாகம் செய்த புதிய தமிழகம் பொறுப்பாளர்களுக்கும்; அதன் தலைமைக்குமே அப்பெருமை சேரும் என்பதை மறந்து விடுவீர்களேயானால் வரலாறு ஒருபோதும் உங்களை மன்னிக்காது.

இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடுகளைப் போல, கட்டப்பஞ்சாயத்துக் கும்பல்களுக்கும், பிற்போக்குவாதிகளுக்கும், இந்த சமுதாயத்தின் வாக்குகளை விலை பேச எத்தனிக்காதீர்கள். கிராமங்களிலே வாழுகின்ற காரணத்தினால் அந்த மக்கள் தெளிவற்றவர்கள் என்ற தவறான கணக்குப் போட்டு விடாதீர்கள். தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்திற்கும் பட்டியல் மாற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்துதான், பட்டியல் மாற்றமில்லா வெறும் பெயர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம், பட்டியல் மாற்றமே எங்கள் உயிர்மூச்சு என முழக்கமிட்டு பல அடக்கு முறைகளைத் தாண்டி 2020 அக்டோபர் 06-ம் தேதி 10,000 கிராமங்களில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் ஜனவரி  6-ல் திரண்டு மதுரையைத் திணறடித்தார்கள். தகர ராஜாக்களால் சலசலப்பை மட்டுமே உண்டு பண்ண முடியுமே தவிர, தங்கங்களைப் போல என்றும் ஜொலிக்க முடியாது. அவர்களுக்குத் தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்கு மட்டுமே முக்கியம், நமக்குத் தேவேந்திரகுல வேளாளர்களின் வாழ்வியல் முக்கியம். தேவேந்திரகுல வேளாளர் மக்களிடையே எந்த நரித் தந்திரங்களும் எடுபடாது. வேந்தர்கள் வேந்தர்களாகவே எழுந்து நிற்பார்கள். இலட்சோப இலட்சம் தேவேந்திரகுல வேளாளர் தாய்மார்களும், இளைஞர் பட்டாளமும் சிவப்பு பச்சை கொடியேந்தி புதிய தமிழகத்தின் பின்னால் அணிதிரண்டு வாருங்கள். ஓங்கி உயர்ந்திருந்த பாரத தேசம் ஓராயிரம் ஆண்டுகள் அடிமையாயிற்று.  இம்மண்ணை ஆண்டவர்கள் விழிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சுதந்திரம் பெற்ற துவக்கக் காலத்தில், அல்லது சிறிது காலத்திற்கு அடையாளத்திற்கு வேண்டுமென்றால் இட ஒதுக்கீடுகள் அவசியமானதாக இருந்திருக்கலாம். வன்னியர்களோ, சீர்மரபினரோ, தேவேந்திரகுல வேளாளர்களோ, ஆதிதிராவிடர்களோ, அருந்ததியர்களோ, மறவரோ, நாடாரோ, நெசவாளர்களோ அல்லது எந்த சமுதாயத்தினராக இருந்தாலும் இட ஒதுக்கீடுகள் மட்டுமே அம்மக்களை  முழுமையாக மேடேற்ற முடியாது.

“Equality and Equity” என்ற இலட்சியத்தோடு சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளிலும், அனைத்து வளங்களிலும் சரியான பங்கீடு செய்வதும், அனைவரையும் சமநிலைக்கு உயர்த்துவதுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். சமநீதி, சமபங்கு, சம உரிமை என்ற இலட்சியங்களை நிறைவேற்ற புதிய தமிழகம் கட்சி என்றென்றும் குரல் கொடுக்கும்.    
 
எழுந்து வாருங்கள்! துணிந்து செல்வோம்!!
அரவணைப்போருடன் அணிவகுப்போம்!!
2021 சட்டமன்றத் தேர்தலில்
அதிகார பகிர்வுடன்  அனைத்து மக்களுக்கான அரசாங்கத்தை நிறுவுவோம் !!!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக