செவ்வாய், 18 ஏப்ரல், 2023

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத்தில் சௌராஷ்டிரா- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்   இதனைத் தெரிவித்தார்.  நாட்டின் நூற்றாண்டு கால பழமை மிகுந்த பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும்  மக்களை இணைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.  இந்தியாவின் ஆழமாக வேரோடிய பாரம்பரியங்கள் அதன் வலிமையையும், ஒற்றுமையை பிரதிபலிப்பதுடன்,  எந்த சவாலையும் எதிர்நோக்கி உறுதியுடன் நிற்கும் திறனைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கலாச்சாரப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், எல்லைகளை பாதுகாப்பதைப் போலவே, உணவு, மின்சாரம், சுற்றுச்சூழல் இணையதளம், விண்வெளி ஆகியவற்றைப் பாதுகாப்பதும், சமமான, அவசியமானதாகும் என்றும் தெரிவித்தார். கலாச்சாரப் பாதுகாப்பை மேற்கொள்ள அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், கலாச்சார ஒற்றுமையை பராமரிப்பதிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  இந்த நிகழ்ச்சி சௌராஷ்டிராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான சங்கமம் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையின் கொண்டாட்டம் என்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதற்கு ஒளிரும் உதாரணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சௌராஷ்டிராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாச்சார இணைப்புக் குறித்துப் பேசிய திரு ராஜ்நாத் சிங், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உறவு நீடிக்கிறது என்று தெரிவித்தார். “11-ம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்புகளால் பலமுறை சௌராஷ்டிரா தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தான் சௌராஷ்டிராவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தென்னிந்தியாவுக்கு புலம் பெயர்ந்தனர். அந்த நேரத்தில், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை வரவேற்று புதிய வாழ்க்கையை மேற்கொள்ள உதவினார்கள்” என்று அவர் கூறினார்.  சௌராஷ்டிராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான நூற்றாண்டு கால பழமையான இணைப்புக் குறித்தப் பல்வேறு உதாரணங்களைக் குறிப்பிட்ட அவர், அது ஒன்றுபட்ட இந்தியாவின் ஒளிரும் அத்தியாயங்களில் ஒன்று எனக் கூறினார்.

 தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர்  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக