இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில், கோவிட்-19 நோய்த் தாக்குதல் மேலாண்மையில் நோய்க் கட்டுப்பாடு மற்றும் எதிர்காலத் தேவைகளை சமாளிப்பதற்கான ஆயத்தநிலை குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு கிரிஷ் சந்திர மர்மு, லடாக் துணை நிலை ஆளுநர் திரு ஆர்.கே. மாத்தூர், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு திரிவேந்திர சிங் ராவத், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெய்ராம் தாக்குர் ஆகியோருடன் உயர்நிலை ஆய்வு நடத்தினார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே உடனிருந்தார். பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிவப்பு மண்டல மாவட்டங்களின் ஆட்சியாளர்களுடன், கோவிட்-19 மேலாண்மைக்கான நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருவதன் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
2020 மே 12ஆம் தேதி நிலவரத்தின்படி மொத்தம் 70,756 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 22,455 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், 2,2,93 பேர் இறந்திருப்பதாகவும் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு நோய்த் தாக்குதல் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும், 1538 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 14 நாட்களில், நோய்த் தாக்குதல் இரட்டிப்பாகும் காலம் 10.9 நாட்களாக இருந்தது என்றும், கடந்த 3 நாட்களில் இது 12.2 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மரண விகிதம் 3.2 சதவீதமாகவும், குணம் அடைபவர்கள் விகிதம் 31.74 சதவீதமாகவும் உள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றைய நிலவரத்தின்படி, சிகிச்சையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளில் 2.37 சதவீதம் பேர் ஐ.சி.யூ. சிகிச்சையிலும், 0.41 சதவீதம் பேர் வென்டிலேட்டர்கள் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும், 1.82 சதவீதம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் கோவிட் நோய் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைத் திறன் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். 347 அரசு ஆய்வகங்கள் மற்றும் 137 தனியார் ஆய்வகங்கள் மூலம் தினமும் 1 இலட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுவரையில் 17, 62,840 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 86,191 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன.