நாடு தழுவிய ஊரடங்கு ஆணை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வியாழன், 30 ஏப்ரல், 2020
ஞாயிறு, 26 ஏப்ரல், 2020
137 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்து 34 நாட்கள் உருண்டோடிவிட்டன.
நான்கு மணி நேர வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டு, 137 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்து 34 நாட்கள் உருண்டோடிவிட்டன. இதுவரை கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்திற்கு ஆளாகியிருக்கிற மக்களுக்கும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூபாய் 225 லட்சம் கோடியில் ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. மக்கள் ஊரடங்கு காரணமாக ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். தற்போது மக்கள் ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடக்கம், வேலைவாய்ப்பின்மை, பெருமளவில் மக்கள் குடிபெயருதல், உற்பத்தி மற்றும் வர்த்தக முடக்கம் ஆகியவற்றினால் ஏற்படுகிற பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஏறத்தாழ ஆறு மாத காலத்துக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.
லேபிள்கள்:
காங்கிரஸ்,
கே.எஸ்.அழகிரி,
தமிழ்நாடு
சனி, 18 ஏப்ரல், 2020
இருள் சுரங்கத்திற்கு வெளியே ஒளி தெரிகிறது: இன்னும் கவனம் தேவை! - Dr.S.ராமதாஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸ் வளர்ச்சி விகிதம் 40% குறைந்திருப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த வேகம் மேலும் குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருப்பது நிம்மதியளிக்கிறது. அதேநேரத்தில் இது ஆறுதல் அடைவதற்கான தகவல் தானே தவிர, அசட்டையாக இருப்பதற்கான நேரமல்ல என்பதை உணர்ந்து கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பரவல் 3 நாட்களில் இரட்டிப்பாகி வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்தில் இவ்விகிதம் 6.2 நாட்களாக அதிகரித்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயின் வளர்ச்சி விகிதம் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முந்தைய இரு வாரங்களில் 2.1% என்ற அளவில் இருந்ததாகவும், ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில் இவ்விகிதம் 1.2% ஆக குறைந்து விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டதால் கிடைத்த நன்மை ஆகும்.
வெள்ளி, 17 ஏப்ரல், 2020
அரசியல் நோக்குடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் ஆளும் அ.தி.மு.க. அரசு இந்தத் தடையை விதித்திருக்கிறது.- மு.க.ஸ்டாலின்
லேபிள்கள்:
தமிழ்நாடு,
திமுக,
மு.க.ஸ்டாலின்
வியாழன், 16 ஏப்ரல், 2020
மராட்டியத்தில் உணவு, இடமின்றி தவிக்கும் தமிழகத்தினரை காப்பாற்ற வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்
மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்குவதற்கு இடமின்றியும், உண்ண உணவின்றியும் தவித்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களிடையே அச்சமும், பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அவசரகால உதவிகள் செய்து தரப்படாதது கண்டிக்கத்தக்கது.
இரத்தினகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பல்வேறு பொருட்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சென்று விற்கும் விற்பனை பிரதிநிதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட போது தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு இடங்களில் உணவும் தங்குவதற்கு இடமும் இல்லாத நிலையில் தவித்தனர். இதுதொடர்பாக மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்களை டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தரும்படி வேண்டினேன். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன.
ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை இப்போது மேலும் மோசமடைந்துள்ளது. இரத்தினகிரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களே வாடகை கொடுத்து தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தன. ஆனால், அந்த நிறுவனங்களால் தங்குமிடத்திற்கு வாடகை செலுத்த முடியாத நிலையில், இடத்தை காலி செய்யும்படி அவற்றின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். பல இடங்களில் தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களை உள்ளூர் மக்கள் தாக்க முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. மற்றொரு பக்கம் கையில் காசு இல்லாததால் அடுத்த வேளை உணவுக்கு கூட வழியின்றி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தவிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
மராட்டியத்திலும் ஊரடங்கு ஆணை மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, அவர்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டியது மராட்டிய மாநில அரசின் கடமை ஆகும். தமிழர்கள் வாழும் பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்கள், தமிழர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வரும் நிலையில், அடுத்து என்ன நிகழும் என்பது தெரியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அச்சம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள், நடந்தே தமிழகம் செல்லலாம் என்று முடிவெடுத்து அங்கிருந்து புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் ஆகும். இத்தகைய சூழலில் உணவு, தங்குமிடமின்றி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளூர் மக்களின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி பொது இடங்களில் கூடினால் அது நோய்ப்பரவலை அதிகரிப்பது உள்ளிட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அங்கிருந்து இளைஞர்கள் தமிழகத்துக்கு நடந்தே செல்லலாம் என்று நினைப்பதும் மிக ஆபத்தானது. இத்தகைய ஆபத்தான முடிவுகளை இளைஞர்கள் கைவிட வேண்டும்.
இந்த விவகாரத்தில் மராட்டிய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை செய்து தர வேண்டும். அவர்கள் அச்சமின்றியும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் வாழ வகை செய்ய வேண்டும். தமிழக அரசும் மராட்டிய அரசை தொடர்பு கொண்டு, அங்கு வாடும் தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படி வலியுறுத்த வேண்டும்.
புதன், 15 ஏப்ரல், 2020
ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதை தடுப்பது அரசு, மக்கள் கைகளில் உள்ளது! - DR.S.ராமதாஸ்
ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதை
தடுப்பது அரசு, மக்கள் கைகளில் உள்ளது! - DR.S.ராமதாஸ்
கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுத்து விட முடியாது; மாறாக, அந்த ஆணை கடைபிடிக்கப்படுவதை பொறுத்தே வெற்றி அமையும்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவதன் நோக்கமே மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி விடக் கூடாது என்பதற்காகத் தான். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இருக்கும் போது, அவர்களில் எவருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. அதைத் தடுப்பதற்காகத் தான் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு பெரும்பான்மையான மக்களால் கடைபிடிக்கப்பட்டது; அதனால் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை; அதேபோல், கணிசமான எண்ணிக்கையிலானோர் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றியதும் உண்மை.
தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றியதாக சுமார் 2 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; ஒன்றரை லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரம் இதை உறுதி செய்யும். அதுமட்டுமின்றி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 42 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இதற்கு அவர்கள் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் நடமாடியது தான் காரணம் என்று கூறப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மறுக்க முடியாது. ஊரடங்கு ஆணை இன்னும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டிருந்தால், கொரோனா வைரஸ் பரவலை இன்னும் கூடுதலாக கட்டுப்படுத்தியிருக்கலாம் என்ற கருத்து நம்பத் தகுந்ததாகவே உள்ளது.
கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பலர் அதற்கான அறிகுறி கூட இல்லாமல் நடமாடக்கூடும் என்று கூறப்படும் நிலையில் ஊரடங்கை 99 விழுக்காட்டினர் பின்பற்றி ஒரே ஒரு விழுக்காட்டினர் கடைபிடிக்காமல் இருந்தால் கூட அவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.
அதுமட்டுமின்றி, வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணிகளைத் தொடங்கலாம், ஏற்றுமதி வாய்ப்புள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களைத் தொடங்கலாம், ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்கலாம் என்பன உள்ளிட்ட ஏராளமான தளர்வுகளை மத்திய அரசு இன்று அறிவித்திருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டு மக்கள் வழக்கத்தை விட தீவிரமாக ஊரடங்கு ஆணையை கடைபிடிப்பது கட்டாயமாகும்.
அதேநேரத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டிய விஷயங்களும் உள்ளன. ஊரடங்கின் மூலம் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்த முடியாது. நோய் பாதித்த பகுதிகளில் வாழும் மக்களை சோதித்து அவர்களுக்கு பாதிப்பு இருந்தால், மருத்துவம் அளித்து குணப்படுத்த வேண்டும். அதன்பிறகு தான் ஊரடங்கு ஆணையை தளர்த்த முடியும். அதற்கு கொரோனா நோய் பாதித்த பகுதிகளில் அதிவேக ரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான கருவிகளை உடனடியாக இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் முதற்கட்டமாக 21 நாட்கள், இரண்டாம் கட்டமாக 19 நாட்கள் என ஒட்டுமொத்தமாக 40 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், அது மீண்டும் நீட்டிக்கப்படாமல் இருப்பது அரசு மற்றும் பொதுமக்கள் கைகளில் தான் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை முழுமையாக மதித்து நடக்க வேண்டும்; தவிர்க்க முடியாமல் வெளியில் வந்தால் கூட முகக்கவசம் அணிய வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் அவற்றின் பங்குக்கு அதிவேக ரத்தப் பரிசோதனைகளை விரைந்து நடத்த வேண்டும். அதன் மூலம் கொரோனா இல்லாத தமிழகத்தை விரைந்து உருவாக்க வேண்டும்.
திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தடை! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!
திமுக தலைமையில் அன்று (15.04.2020) கொரோனா தொடர்பாக நடைபெறவிருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துவதற்கு தமிழகக் காவல்துறை தடை விதித்திருப்பது தமிழக அரசின் எதேச்சாதிகார போக்கையே காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தங்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என்ற விதத்திலேயே அண்மைக் காலமாக நடந்து வருகிறது. தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் நிவாரண உதவிகளை தமிழக அமைச்சர்கள் மக்களுக்கு விநியோகித்து அதை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு உதவக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் தனது நிலையை மாற்றிக்கொண்டு விளக்கமளித்தது.
கடந்த 11 ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்படியிருக்கும்போது திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் மட்டும் நடைபெறக் கூடாது என்று தடை விதிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செய்வதற்கு ஏதுவாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பலமுறை தமிழக அரசை வலியுறுத்தி விட்டோம். 'வீடியோ கான்ஃப்ரன்சிங்' மூலமாகக்கூட அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தமிழக முதல்வர் கூட்டியிருக்கலாம். பிரதமர் கூட மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நடத்துகிற நிலையில் தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிகளின் கருத்தை கேட்க வேண்டும்; கொரோனா எதிர்ப்பில் அனைவரையும் ஈடுபடுத்தவேண்டும் என்ற ஜனநாயக அணுகுமுறை இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவது வேதனையளிக்கிறது.
தமிழக நலன்களுக்கு எதிரான பல முடிவுகளைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள் முதலானவற்றைக் கூட தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடுத்திருக்கிறது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொழிற்சாலைகள் நிதி வழங்க கூடாது என்று தடை போட்டிருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எதையுமே தட்டிக் கேட்காமல் வாய்மூடி மவுனம் காக்கிறது தமிழக அரசு. தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை கூட கேட்டுப் பெற முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது. இதனால் தமிழக மக்களுடைய வாழ்நிலை பேராபத்தில் சிக்கியிருக்கிறது.
நேற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த நிவாரணங்கள் எந்தவிதத்திலும் மக்களுடைய துயர்துடைக்கப் போதுமானவையாக இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தால் இதையெல்லாம் சுட்டிக் காட்டுவார்கள், தீர்மானம் போடுவார்கள், அதனால் மக்கள் மத்தியில் தமிழக அரசினுடைய மெத்தனப்போக்குகள் அம்பலப்பட்டுப் போகும் என்ற அச்சத்தில் தான் இத்தகைய தடை விதிக்கப்படுகிறது என்று கருதுகிறோம்.
பேரிடர் காலத்தில் ஜனநாயகத்தை பரவலாக்குவதுதான் அதை வலிமையாக எதிர்கொள்வதற்கான வழிமுறையாக இருக்கும். அதை விடுத்து எதேச்சாதிகார அணுகுமுறையை கையாண்டால் மக்களுடைய உயிருக்குத்தான் அது உலைவைக்கும். தமிழக அரசு தனது போக்கை மாற்றிக் கொண்டு கொரோனா எதிர்ப்புப் போரில் அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தங்கள் தவறுகள் மற்றும் தங்கள் மீதான விமர்சனங்களை மறைக்கவும் திசைதிருப்பவும் கூட கொரோனாவை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்களா? - தி.வேல்முருகன்
தங்கள் தவறுகள் மற்றும் தங்கள் மீதான விமர்சனங்களை மறைக்கவும் திசைதிருப்பவும் கூட கொரோனாவை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்களா? - தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
இந்தக் கொரோனா சமயத்தில் ஆளும் தரப்பினர் மக்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி, ‘உயிரா, வயிரா, எது முக்கியம்?’ என்பதாகும். ஊரடங்கால் உணவின்றிச் சாகும் மக்களிடம் இதைவிடவும் நயவஞ்சகமான ஒரு கேள்வியை கேட்டுவிட முடியாது. வயிரின்றி உயிர் எப்படி என்ற எளிய உண்மை யாருக்குமே தெரியாததல்ல.
ஏன் இந்த வஞ்சகக் கேள்வி வருகிறதென்றால், உலகிலேயே ஆகப்பெரும் ஜனநாயக நாடான நம் இந்தியாவில், உலகத்துக்கே - மனித குலத்துக்கே எதிரான, பிறப்பிலேயே மனிதரில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம இழிவின், அவலத்தின் சித்தாந்தமான சனாதனம் ஆட்சிக்கு வந்ததுதான். சனாதனத்தின் பரம வைரியே ஜனநாயகம் என்பதால் அதனை அழிப்பதே தன் முதன்மைப் பணி எனச் செயல்படுகிறது சனாதனம். இதனால் கொரோனாவை ஒழிப்பது அதற்கு இரண்டாம் பட்ச, மூன்றாம் பட்ச பணியாகியிருக்கிறது.
இன்று கைபேசி, எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், இணையம், முகநூல், ட்விட்டர் என நவீன தொலைத்தொடர்பு வசதிகள் அநேகம். குறைந்தபட்சம் கைபேசியாவது இல்லாது இன்றைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுவும் இந்தக் கொரோனா சமயத்தில் அதன் அருமையைச் சொல்ல வார்த்தைகள்தான் ஏது? ஆனால் காஷ்மீர் மக்களுக்கோ இது நடு இரவின் கோரக்கனவுதான் (nightmare).
கடந்த ஆகஸ்டில் காஷ்மீரின் தன்னாட்சிச் சட்டப்பிரிவு 370 முடக்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தின நாளே தொலைத்தொடர்பு சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசினும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் நபி ஆசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
160 நாட்கள் கழித்து, ஜனவரி 10 அன்று தீர்ப்பு வந்தது. ஆனால் தீர்ப்பில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் பொறுப்பு பிரதமர் மற்றும் உள்துறையிடம் (மோடி-அமித்ஷா) விடப்பட்டது. அதனால் இன்றுவரை அங்கு
தொலைத்தொடர்பு சேவை இல்லை. இதைக் கிண்டலும் கேலியும் செய்தார் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ஒருவரோடொருவர் பேசவும் தொடர்புகொள்ளவும் முடியாமல் தொலைத்தொடர்பு வசதிகள் பறிக்கப்பட்ட நிலையில் இருப்பதைவிடவும் அதிகபட்ச தண்டனை உண்டோ?” என்று!
காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் தண்டனைக்கு ஈடாக, கொரோனாவால் இன்று இந்தியா முழுவதுமே அனுபவிக்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம். காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம், தொலைத்தொடர்பு வசதிகள் இரண்டுமே இல்லை; நமக்கோ தொலைத்தொடர்பு வசதிகள் இருந்தாலும் ஜனநயகம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் மோடியிடமே
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
எப்படியென்றால், கொரோனா ஊரடங்கை இந்த மாதம் 30ந் தேதிவரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். அதைத் தொடர்ந்து பஞ்சாப். மகாரஷ்டிரா, கேரளா, பாஜக ஆளும் கர்நாடகா முதல்வர்களும் 30ந் தேதிவரை நீட்டித்தனர். அதற்குப் பிறகே ‘சம்மன் இல்லாது ஆஜராவது’ போல் முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டினார் மோடி.
அந்த வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் ப.சாமி உள்ளிட்ட ஒருசிலரைத் தவிர மீதிப் பேர் மிஸ்ஸிங்! ஏற்கனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த மோடி, அந்த வீடியோ கான்பரன்ஸில் அதை அறிவிக்காமலே கூட்டத்தை முடித்தார்.
ப.சாமிக்கோ ஒன்றும் ஓடவில்லை; மோடியின் உத்தரவுக்காகக் காத்திருந்து பார்த்தார். பதில் வரவில்லை. ஆகவே டெலிபோனில் கேட்டு 30ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு என் நேற்று அறிவித்தார்.
ஒன்றிய அரசைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மாநிலங்களின் மக்களுக்கே! அப்படியிருக்க, மாநில அரசு ஒன்றிய அரசின் உத்தரவுக்காகக் காத்திருப்பது என்றால், நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், இது ஜனநாயகமா?
சனாதனி மோடி ஜனநாயகத்தை அழிப்பவர் என்று தெரிந்தும், அவர் உத்தரவுக்காகக் காத்திருந்த ப.சாமியும் சனாதனிதானோ?
இதற்கு முன் 21 நாள் ஊரடங்கால் நாடு பட்ட பாட்டை மகளாகிய நாம்தான் அறிந்தோமே தவிர ஆட்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அறியாதது போல்தான் இருந்தார்கள் என்பதே உண்மை. இப்போது மேலும் 14 நாள் நீட்டிப்பால் படப்போகும் துன்பத்தை எப்படித் தாங்குவது? ஆட்சியாளர்கள் வழக்கம்போல் எந்த வழிவகையும் செய்வதாக அறிவிக்கவில்லை.
சரி, போகட்டும். இந்தக் கொரோனாவை ஒழிக்கவாவது உரிய மருத்துவ வசதி உண்டா? முகக்கவசம், பாதுகாப்பு உடை, அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகள், இன்னபிற எதுவுமே டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஊரடங்கைக் கண்காணிக்கும் காவலர்கள் ஆகியோருக்குக் கூட இதுவரையில் இல்லை.
கூலிவேலை, சிறுதொழில், சிறு வியாபாரம், படிப்பு நிமித்தமாக பல்வேறு மாநிலங்களிலும் தங்கியுள்ளவர்கள் உணவின்றித் தொலைதூர சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார்களே; இந்த 14 நாள் ஊரடங்கு நீட்டிப்பிலேயும் அவர்களுக்கு வழிவகை அறிவிக்கப்படவில்லையே, ஏன்? கட்டாயம் அவர்களைக் கரைசேர்க்க வேண்டுமாய் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து அரசுகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
வேலை, தொழிலின்றி வீட்டுக்குள் முடங்கிவிட்ட அல்லது வீடோ வேலையோ இன்றி தெருவோரம், ரோட்டோரம் ஒண்டியுள்ள அத்தனை பேருக்குமே வயிற்றுக்கு வழி செய்ய வேண்டுமாய் கேட்கும் அதேசமயம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்ததைக் கூட்டி இனி 10,000 ருபாயாயாக வழங்குவதோடு, குடும்ப அட்டை இல்லாதாருக்கும் அதை வழங்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
விளைபொருள்களை அறுவடை செய்ய ஆளின்றியும், அறுவடை செய்தாலும் விற்க முடியாமலும் திண்டாடுகிறார்கள் விவசாயிகள். இந்த நிலை நீடித்தால் அவர்கள் ஈடு செய்ய இயலாத நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். அரசுதான் அவர்களைக் காக்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.
இந்த ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவுவதைத் தடுத்து அவர்கள் மேல் நடவடிக்கையும் எடுக்கிறது தமிழ்நாடு அரசு. இது ஜனநாயகத்துக்கும் அரசமைப்புச் சட்டத்துக்குமே எதிரானதாகும். ஜனநாயக விரோத சனாதன மோடியோடு சேர்ந்த தோஷத்தாலேயே இப்படியான அநாகரிக நடவடிக்கையில் ஈடுபடுகிறார் ப.சாமி. இதனைக் கைவிட்டு
ஜனநாயக வழிக்குத் திரும்பக் கோருகிறோம்.
இப்போது கையில் பணமில்லை. அப்படிப் பணம் இருந்தாலும் பொருட்களை வாங்க முடியாத நிலை. காரணம், பொருட்களுக்கும் தட்டுப்பாடு, விலையும் எக்கச்சக்கம்! இது சிறு கடைகளால் அல்ல; அவர்களுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரக் கடைகளால் வந்த வினை! போக்குவரத்தைத் தடை செய்ததும், கடைகள் மதியம் 1 மணி வரைதான் இயங்க வேண்டும் என்றதும் கூட இதற்கு ஒரு காரணமாகும். எமர்ஜென்சியின் போதுகூட எல்லாப் பணிகளும் நடந்ததே! ஊரடங்கில் எல்லாரும் எல்லாமும் இயங்குவதற்கென்ன? சமூக விலகலைத்தானே கடைப்பிடிக்க வேண்டும்!
இல்லாத மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஊரடங்கு அடாவடி, கெடுபிடி என்பதாகவே படுகிறது. ஜனநாயக நாட்டில் இதற்கெல்லாம் இடமில்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த ஜனநாயக விரோத செயல்பாடுகள்?
சனாதனச் சங்கியான மோடி 130 கோடி மக்களின் உழைப்பையும் வெறும் முப்பது பேரே உறிஞ்சிக் கொழுக்க வகை செய்திருக்கிறார். அதாவது ஜனநாயகத்தை அழித்து கார்ப்பொரேட் முதலாளித்துவத்தைக் கட்டமைத்ருக்கிறார். எந்தக் கட்டமைப்புக்கும் பக்கபலமாக ஓர் இசம் தேவைப்படும். மோடியின் சிந்தனையில் கார்ப்பொரேட் முதலாளித்துவத்துக்கானதே இந்த வர்ணாசிரம இசம் என்னும் சனாதனம்.
மேலும், இந்தக் கொரோனா வருவதற்கு முன்னமேயே நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். அதாவது நாடே கிட்டத்தட்ட போண்டியாகிவிட்ட நிலைமை. அது வங்கிகள் மூலம் தெரியவந்தது. ஒருசில வங்கிகள் இழுத்து மூட வேண்டிய நிலைக்கே வந்தது. இதைச் சரிக்கட்டத்தான் பண மதிப்பழிப்பு
(demonetisation) நடவடிக்கை! ஏழைபாளைகளின் சிறுவாட்டுப்பணம், சேமிப்புப்பணம் உட்பட அனைத்தும் வங்கிகளுக்கு வந்தன. வங்கிகள் மீண்டும் இயங்கின.
சரி, இந்த வங்கிகள் ஏன் முதலில் போண்டியான நிலைக்கு வந்தன? கார்ப்பொரேட்டுகள் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாததால்தான்; அவர்களில் பல பேர் வெளிநாடுகளுக்குத்
தப்பியோடி அங்கே பதுங்கிக் கொண்டதும்தான்.
அடுத்து ஜிஎஸ்டியைக் கொண்டுவந்து சிறுகுறு தொழில் உற்பத்திப் பொருட்களின் விலையை படாப்பழியாக உயர்த்தி ஏற்றுமதியையே முற்றாக நிறுத்தினார் மோடி (உதாரணம்: திருப்பூர்). நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கே சென்றது.
இந்தப் பொருளாதார வீழ்ச்சியை மறைப்பது, திசைதிருப்புவது எப்படி? அதற்காகத்தான் காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு முடக்கம், முத்தலாக், சிஏஏ போன்றவை. அத்தனையுமே இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்; அரசமைப்புச் சட்டத்திற்குமே எதிரானவை. உலகமே இவற்றைக் கோட்டித்தனமானவை என்றது. சிஏஏவை உலகம் கண்டித்ததோடு, ஐ.நா.அவையே அருவருப்புடன் பார்த்து. சிஏஏ விடயத்தில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியரைக் கொன்றதோடு, 300க்கும் மேற்பட்ட அவர்களது வீடுகளையும் சூறையாடினர் சங்கிகளும் பாஜக குண்டர்களும். இது இந்தியாவையே, ஏன் உலகையே அதிரச் செய்ததுடன், மோடியின் சுயரூபத்தையும் தோலுரித்துக் காட்டியது.
இனி என்ன செய்வது என மோடி கைபிசைந்துகொண்டிருந்த வேளையில்தான் கொரோனா பிரச்சனை வந்தது. தனது அரசின் படுதோல்வியை மறைக்க, திசைதிருப்ப, படுபயங்கர கொரோனாவையும் பயன்படுத்தத் துணிந்தார் மோடி.
உண்மையில் கொரோனா பிரச்சனையில் மோடி செய்வதற்கு ஒன்றுமே இல்லை. மாநிலங்கள் கேட்கும் நிதியைக் கொடுப்பதும் மருந்துகள்,
கருவிகளை வரவழைத்துக் கொடுப்பதும்தான் அவரது வேலை. ஆனால் அதையெல்லாம் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு ஆலோசனைகள் மற்றும் கட்டளைகள் வழங்குவதுமாயிருக்கிறார்.
இன்றும் தொலைக்காட்சியில் உரையாடிய மோடி, அரைத்த மாவைத்தான் அரைத்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சமூக விலகலும் ஊரடங்கும் நமக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன என்றார். அவர் சொன்ன வெற்றிக்கு அவராலேயே விளக்கம் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை.
இந்த ஊரடங்கின்போது ஒன்றிய அரசும் சரி, தமிழக அரசும் சரி, எதிர்க்கட்சிகளை, மக்களைக் கலக்காமல் சட்டவிரோத காரியங்கள் பலவற்றைப் பூடகமாகச் செய்துள்ளன. இதற்கான உதாரணத்தை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலச் சொல்கிறோம். அதாவது, 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக ஒன்றிய அரசு இணைத்தது என்றால்; ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக மலைப்பகுதி காடுகளை கபளீகரம் செய்திருப்பதை நியாயப்படுத்தவும், அதன் பேரிலான வழக்குகளை செயலற்றுப்போகச் செய்யவும் சட்டத்தையே திருத்தி உதவியிருக்கிறார் ப.சாமி.
ஆக, கொரோனா போர் என அபத்தமாகக் குறிப்பிட்டு, அதை ஜனநாயகத்துக்கும் சனாதனத்துக்குமான ஓர் ஆபத்தமான போராகவே மாற்றியுள்ளார் மோடி! இதில் செய்யவேண்டியதை தானும் செய்யாமல்; தன்னார்வலர்களையும் செய்ய விடாமல் மிரட்டுவதோடு, சட்டவிரோத காரியங்களையும் செய்திருக்கிறார் ப.சாமி!
தங்கள் தவறுகளையும் தங்கள் மீதான விமர்சனங்களையும் மறைக்கத்தான் கொரோனாவை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்களா?
ஞாயிறு, 12 ஏப்ரல், 2020
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்! -Dr. அன்புமணி ராமதாஸ்
இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் 19 நாட்கள் ஆகும் நிலையில், ஊரடங்கை மீறி சாலைகளில் மக்கள் நடமாடுவது நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமூக இடைவெளி இல்லாத மனித நடமாட்டம் கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதை தடுக்க வாய்ப்புள்ள மாற்று நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வது கட்டாயமாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 8,380 ஆகவும், தமிழக அளவில் 969 ஆகவும் இருந்தது. அதேபோல், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கடந்த 9&ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை 169 ஆக இருந்தது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது. அதாவது இரு நாட்களில் இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 118 அதாவது 69.82% அதிகரித்துள்ளது. இது மிக மிக கவலையளிக்கக்கூடிய புள்ளிவிவரம் ஆகும்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில், உயிரிழப்புகளின் விகிதம் 1.03% ஆகும். அதேநேரத்தில் இந்தியாவில் இந்த அளவு 3.42 விழுக்காடாக உள்ளது. இது உலக சாராசரியை விட அதிகம் ஆகும். உலக அளவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் நிகழ்ந்த 63 நாடுகளில், 35 நாடுகளை விட அதிக விழுக்காட்டிலான உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றன. இதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால் அமெரிக்காவின் உயிரிழப்பு விகிதமும் (3.85%), இந்திய உயிரிழப்பு விகிதமும் (3.42%) கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. கனடா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் மிகவும் அதிகம் ஆகும். இந்திய உயிரிழப்பு விகிதம் பாகிஸ்தானை விட இரண்டரை மடங்காகவும், நார்வேயை விட இரு மடங்காகவும் உள்ளது. சீனாவின் உயிரிழப்பு விகிதத்தை இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்கள் பலருக்கு அதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரியாமல் இருக்கக்கூடும். கொரோனா வைரஸ் பாதித்திருப்பது அவர்களுக்கே தெரியாது என்பதால், அவர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடும். அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பதால் தான் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணியும் பட்சத்தில், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து தடுக்கப்படும்.
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் உன்னத பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் ஒவ்வொரு நாளும் ஏராளமானவர்களை எதிர்கொள்கின்றனர். அவர்களில் எவருக்கேனும் கொரோனா தொற்று இருந்து, அவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால், அவர்கள் மூலமாக மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்றக்கூடும். சிலரின் அலட்சியத்தால் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களும், காவலர்களும் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது. இந்த ஆபத்தை உணர்ந்து தான் உலகில் அமெரிக்கா, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஜெர்மனி, நியுசிலாந்து, தென்கொரியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வெளியில் நடமாடுபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தில்லி, மராட்டியம், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகரில் முகக்கவசம் அணியாமல் வருவோர் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188-ன் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்திலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும். முகக்கவசத்திற்கு பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வீட்டில் துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை கூட அணியலாம். இம்மாத இறுதியில் கொரோனா பதற்றம் தணிந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கூட அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் முகக்கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும்.
மக்களை மீட்க அரசாங்கம் முறையாக செயல்பட வேண்டும் - அல்லது திமுக செயல்பட வைக்கும் - மு.க.ஸ்டாலின்
“மனித குலம் நடுங்கி நிற்கும் கொரோனா பேரிடரிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் முறையாக செயல்பட வேண்டும் - அல்லது திமுக செயல்பட வைக்கும்”
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வருக்கு பதில்.
கொரோனா தனது கோரமுகத்தைத் தமிழகத்திலும் காட்டி, நம் மக்களிடையே சீர்குலைவை ஏற்படுத்திவரும் வரும் நிலையில், தமிழக அரசு அவசரகதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பல தளங்களிலும் பேசப்பட்டுவரும் சில கருத்துக்களை, முதல்வருக்குக் கடிதமாக அனுப்பி இருந்தேன். அதற்குப் பதில் என்ற பெயரில் நீண்ட அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிட்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு முதல்வரின் கவனத்திற்குச் செல்லவேண்டும் என்று, நான் அக்கறையுடன் விடுத்த அறிக்கைக்கு அவர் ஆத்திரத்துடன் பதில் தந்துள்ளார். அவரது அண்மைக்கால ஆத்திர குணம் அப்படி!
அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் நான் சித்தரிப்பதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். 'அரசு எதுவும் செய்யவில்லை' என்று நான் சொல்லவில்லை; 'அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க. சார்பில் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவோம்' என்று தான் சொன்னேன். நேற்று மட்டுமல்ல; மார்ச் இரண்டாவது வாரம் முதல் சட்டமன்றத்திலும் சொன்னேன்; எனது அறிக்கைகளிலும் சொல்லி இருக்கிறேன்; காணொலிகளிலும் சொல்லி இருக்கிறேன். நோயின் தீவிரத்தை உணர்ந்து எந்த அளவுக்கு தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும் என்றுதான் சுட்டிக்காட்டினேன். அதைக் கூட முதலமைச்சரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; பொங்கி வழிகிறார்.
“யாருடைய ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை; எல்லாம் எனக்குத் தெரியும்; தானே எல்லாம்” என்ற முற்றிய தன்முனைப்பு நிலைக்கு அவர் வந்துவிட்டதைத் தான் அவரது பதில் அறிக்கை காட்டுகிறது!
“கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததுமே அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வருகின்றது” என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை மக்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
“எந்த மாநிலங்களும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தது, சர்வதேச பயணிகளை விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தி கண்காணிப்பில் வைத்தோம்” என்கிறார். பின்னர் அவரே, ''வெளியில் இருந்து வந்தவர்கள் சிகிச்சைக்கு தாமாக முன்வர வேண்டும்” என்று ஏப்ரல் 1-ம் தேதி பேட்டி கொடுத்தார். சோதனைச்சாவடி சோதனைகளை, விமான நிலைய சோதனைகளை ஜனவரியில் தொடங்கிவிட்டோம் என்றால் மூன்று மாதம் கழித்து, முதல்வர் எதற்காக இப்படி பேட்டி அளிக்க வேண்டும்?
''ஜனவரி மாதத்திலேயே இந்த நோயினைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள், முழு உடல் கவச உடைகள், மருந்துகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஆணை வழங்கிய தீர்க்கதரிசியான அரசு மாண்புமிகு அம்மாவின் அரசாகும்" என்று தனது முதுகை தானே தட்டிக் கொடுத்துக்கொண்டு முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், ''ஒன்றரைக் கோடி முகக்கவசம், 25 லட்சம் 'என்-95' முகக்கவசம், 10 லட்சம் பாதுகாப்பு முகக்கவசம், 2500 வெண்டிலேட்டர், 30 ஆயிரம் சோதனைக் கருவிகள் வாங்கப்பட உள்ளது" என்று மார்ச் 30-ம் தேதி முதல்வர் பேட்டி கொடுத்தாரே? - எது உண்மை?
இவையெல்லாம் வாங்குவதற்கு 3 ஆயிரம் கோடி பணம் வேண்டும் என்று ஏப்ரல் 3-ம் தேதிதான் பிரதமரிடம் பணம் கேட்கிறார் முதல்வர். எது உண்மை?
மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் இதைத் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது; கேட்க வேண்டிய சந்தர்ப்பத்தில் தான் கேட்கிறேன். சந்தர்ப்பவாதம் பற்றி முதலமைச்சர் பேசலாமா?
இவர், ஒன்று சுயபரிசோதனை (Self Introspection) செய்துகொள்ள வேண்டும்; அல்லது கண்ணாடிமுன் நின்று சற்று பின்னோக்கிப் பார்த்து யோசிக்க வேண்டும். கூவத்தூர் முதல் கோட்டைவரை இவரது சந்தர்ப்பவாதத்தைப் பார்த்து, இவரது கட்சியினரே இவருடைய முதுகுக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.
கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கிய நிலையில் - பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். சட்டமன்ற நடவடிக்கைகளை ஒருமுறை திரும்பப் படித்துப் பார்த்தாலே அனைத்தும் முதலமைச்சருக்குப் புரியும். அவர்தான் கடந்த காலத்தை மறந்து, எதிர்காலக் கனவில் நிகழ்காலத்தில் மிதப்பவராயிற்றே!
‘சட்டமன்றத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டும்' என்று வைத்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி, “போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆகவே சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டியதில்லை” என்று 17.3.2020 அன்று அறிவித்தது யார்? - இதுதான் தீர்க்க தரிசனத்திற்கான அடையாளமா?
“நோய் வருவது இயற்கை. அது தமிழகத்தில் அபாயகரமாக இல்லை” என்றும் “சட்டமன்றம் நடைபெற்றால்தான் மக்கள் அச்சமின்றி இருப்பார்கள்” என்றும் கூறியது யார்?
“அவையை ஒத்தி வைப்பது மக்களை பீதிக்குள்ளாக்கும்” என்று கூறிவிட்டு, பிறகு அவையை முன்கூட்டியே முடித்தது யார்? - இவையெல்லாம் முன்னுக்குப்பின் முரண்பட்ட காரியங்கள் இல்லையா?
நோயின் தீவிரத்தை உணராமல் முதலில் 60 கோடி மட்டும் நிதி ஒதுக்கியது யார்? பிறகு நான், “1000 கோடி ரூபாய் ஒதுக்குங்கள்” என்று கோரிக்கை விடுத்த பிறகு 500 கோடி ரூபாயாக உயர்த்தியது யார்? இதுதான் கொரோனாவின் கொடுமையை உணர்ந்ததற்கான ஆதாரமா?
அனைத்து அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று நான் முதலில் கோரிக்கை விடுத்த போது, கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டும் 24.3.2020 அன்று அறிவித்துவிட்டு, தற்போது 8.4.2020 அன்று பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சேர்த்து மீண்டும் அறிவித்தது யார்?
ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அரசு தொடர்ந்து செயலாற்றுகிறது என்று வெளிக்காட்டும் முயற்சி இல்லையா? - அந்த அளவுக்கு விளம்பர வெளிச்சம் முதல்வரை வேதனைப்படுத்துகிறது!
24.3.2020 அன்று சட்டமன்றத்தில் அரிசி ரேசன் கார்டுகளுக்கு மட்டும் 1000 ரூபாய் என்று கூறிவிட்டு, பிறகு 25.3.2020 அன்று தொலைக்காட்சி உரையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 1000 ரூபாய் என்று அறிவித்தது யார்? - ஏன் இந்தக் குழப்பம்?
அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என 29.3.2020 அன்றே நான் கோரிக்கை விடுத்தபோது, “இது மருத்துவம் சார்ந்த பிரச்சினை. அரசியல் அல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை” என்று கூறி விட்டு - 3.4.2020 அன்று அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தியது யார்?
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் - 13 வகையான தொழிற்சாலைகளை திறக்க தலைமைச் செயலாளர் மூலம் 7.4.2020 அன்று உத்தரவு பிறப்பிக்க வைத்து, பிறகு அதே தேதியில் - சில மணி நேரத்தில் தொழிற்துறை முதன்மைச் செயலாளரை விட்டு தலைமைச் செயாலாளர் உத்தரவை ரத்து செய்ய வைத்தது யார்? யாருடைய தலையீட்டினால் இந்த மாற்றம்?
இவை அனைத்துமே, கொரோனா குறித்து, தமிழக முதலமைச்சருக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனால் தானே எல்லாவற்றையும் முன்னெடுத்துச் செய்வதாகக் காட்டிக்கொள்வதில் மட்டும் தணியாத ஆசை!
“நோய்த் தொற்று மூன்றாம் நிலைக்குச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது” என்று 9.4.2020 அன்று முதலமைச்சர் ஒருபுறம் அறிவிக்கிறார். “நோய்த் தோற்று இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளது” என்று 10-ம் தேதி தலைமைச் செயலாளர் அறிவிக்கிறார். தானும் குழம்பி, மக்களையும் குழப்பியது எந்த அரசு? இது என்ன புதுக் குழப்பம் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள்.
“கேரளாவிற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஆர்டர் கொடுத்து விட்டோம்” என்று கூறும் முதலமைச்சர், நேற்று பிரதமருடனான வீடியோ கான்பரன்ஸில், “பி.சி.ஆர்., ரேபிட் கிட்ஸ்கள் அதிக எண்ணிக்கையில் வேண்டும்” என்றும், “பி.பி.இ, என்-95 மாஸ்குகள், வென்டிலேட்டர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டியதிருக்கிறது” என்றும் கூறியது ஏன்?
உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதில் கூட இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதற்கு இதைவிட புதிய ஆதாரம் வேண்டுமா?
அரைகுறையாகச் செய்துவிட்டு ஆத்திரம் வருவது ஏன்?
“இரு வருடங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் நோய்த் தொற்றை தடுக்க பல கோடி ரூபாய்களை தி.மு.க. எம்.பி.,க்கள் இந்த நிதியின் கீழ் ஒதுக்கியிருந்த போதிலும், இந்த நிதியை நிறுத்திய மத்திய அரசை ஒரு வார்த்தை கண்டிக்காமல் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது யார்?
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியிலிருந்தும் ஒரு கோடி ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும் என்று தன்னிச்சையாக அறிவித்து ‘இரட்டை வேடம்’ தரித்து நிற்பது யார்?
இந்த நிதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தான் பயன்படுகிறது என்கிறார் முதல்வர். சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதி மக்கள் தேவை அறிந்து மக்களுக்காகத் தான் அந்நிதியை ஒதுக்கப் போகிறார்கள். உண்மை என்னவென்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றி வரும் மக்கள் சேவையைத் தடுக்கும் சதிதான் இந்த நடவடிக்கையே தவிர வேறல்ல!
தமிழக மக்களைப் பாதிக்கும் மிகப் பெரிய சுகாதாரப் பேரிடர்ப் பிரச்சினையில், சுகாதாரத்துறை அமைச்சரை ஒதுக்கி - பிறகு சுகாதாரச் செயலாளரை முன்னிலைப்படுத்தி - அவரையும் புறந்தள்ளி இப்போது தலைமைச் செயலாளரையே தனது செய்தித்தொடர்பாளராக மாற்றி கழுத்தறுப்பு அரசியல் செய்து கொண்டிருப்பது யார்? - எல்லாம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிதான்!
இது என்னரக அரசியல்?
ஒடிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையிலும், பா.ஜ.க. ஆளும் கர்நாடகம் முடிவெடுத்துவிட்ட பிறகும், “தமிழகத்தில் உடனடியாக ஊரடங்கு குறித்து முடிவு எடுங்கள்” என்று நான் விடுத்த வேண்டுகோள் முதலமைச்சருக்கு ‘அரசியலாகத்’ தெரிகிறது. ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்? 'கொரோனாவை' முழுமையாக ஒழித்துவிட்டாரா? மத்திய அரசு என்ன நினைக்குமோ என்று உள்ளூர பயம் தான் காரணம்!
மத்திய அரசிடம் இருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பயம்தான் காரணம்? பதவியைக் காப்பாற்றிக் கொள்ள உரிமைகளைக் காவு கொடுக்கும் இந்த சுயநலத்தாலும் கோழைத்தனத்தாலும் தமிழகம் இழந்த பெருமைகள் எத்தனையோ உண்டு! இப்போது உயிர்களையும் இழக்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்டது.
மத்திய அரசிடம் முதலில் 9 ஆயிரம் கோடி ரூபாயும் அதன்பிறகும் 3,200 கோடி ரூபாயும் கேட்டவர் முதல்வர். அவர் சொல்லும் கணக்குப்படி மத்திய அரசு இதுவரை கொடுத்துள்ள தொகை 870 கோடியே 24 லட்சம் ரூபாய்தான். கேட்டதில் பத்தில் ஒரு பங்கு! மற்ற பங்கைக் கேட்பதற்கு முனைப்போ - முதுகெலும்போ இல்லாதவராக முதலமைச்சர் இருக்கிறார்!
நாடே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் மக்களைப் பார்த்து நிதி கொடுங்கள் என்று அறிக்கை விட்டு கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். “100 ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன்” என்று பேட்டியும் கொடுத்தார். எதற்காக இந்த நிலைமை? தனது உரிமையை முன்னிறுத்தி மத்திய அரசிடம் கேட்கக் கூடத் தைரியம் இல்லை! - அந்த கையாலாகாத்தனத்தை மறைக்க மக்களிடம் கெஞ்சுகிறார்; மக்கள் பிரதிநிதிகளாம் சட்டமன்ற உறுப்பினர் உரிமையில் கை வைக்கிறார்.
தமிழக அரசு கேட்ட நிதியைத் தாருங்கள் என்று நான் தான் அறிக்கை வெளியிட்டேன். பிரதமர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கெடுத்த தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும் தமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக வழங்குங்கள் என்று வாதாடினார். உண்மையில் முதலமைச்சர், தி.மு.க.,வைப் பாராட்டி இருக்க வேண்டும்; நன்றி தெரிவித்திருக்க வேண்டும். இதெற்கெல்லாம் முதலமைச்சரிடம் இருந்து நன்றியை எதிர்பார்க்கவில்லை. அந்தளவுக்கு மனிதர்களை அடையாளம் காணத் தெரியாதவன் அல்ல நான். நன்றி என்பது நாகரிகத்தின் அடையாளம். தி.மு.க.,வையும் என்னையும் இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் என்று கொச்சைப்படுத்தி அறிக்கை விடுகிறார் என்றால் அவர் நடந்து கொள்ளும் தன்மைகள் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல!
இவருடைய இரட்டை வேடம் நாடு நன்கு அறிந்ததே! நீட் தேர்வில் இரட்டை வேடம்; பத்து சதவிகித இடஒதுக்கீட்டில் இரட்டை வேடம்; ஹைட்ரோகார்பனில் இரட்டை வேடம்; இப்படி, ‘எடப்பாடி எத்தனை எடப்பாடிகளோ’ என்று கூறுமளவுக்கு, எல்லாப் பிரச்சினைகளிலும் இரட்டை வேடம் போட்டு, கபட நாடகம்!
சோகமயமான சூழலில் இத்தகைய வஞ்சகமும் வன்மமும் கூடாது!
நாடே துயரத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருக்கும் வேளையிலே, ஆத்திரமும் ஆவேசமும் சத்ருவாகிவிடும் என்பதை உணர வேண்டும்.
பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நான் வைத்ததாகவும் முதல்வர் சொல்லி இருக்கிறார். எது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை அவரது பதிலில் தேடிப்பார்த்தேன்; கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் 10-ம் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யவிருப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், தமிழகத்திற்கு வந்து சேரவேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் இன்னும் வந்து சேரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டேன். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டா?
''ஒரு லட்சம் டெஸ்டிங் கிட்டுக்களை இறக்குமதி செய்ய முடிவெடுத்து ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் 8-ம் தேதிக்குள் அவை முழுமையாக தமிழகம் வந்து சேரும்" என்று ஏப்ரல் 2-ம் தேதி சுகாதாரத் துறை செயலர் சொன்னார். இதையே 6-ம் தேதி முதல்வரும் சொன்னார். பின்னர் '9-ம் தேதி வந்துவிடும்' என்றார் முதல்வர். இன்றுவரை வரவில்லையே? - என்ன காரணம்?
முதல்வர் பதில் சொல்ல வேண்டாமா?
“10-ம் தேதி முதல் அரைமணிநேரத்தில் பல லட்சம் பேருக்கு பரிசோதனை செய்வோம்' என்றாரே முதல்வர் என்ன ஆனது?
“கொரோனா டெஸ்டிங் பொருட்களை மாநிலங்கள் தன்னிச்சையாக கொள்முதல் செய்யவும், இறக்குமதி செய்யவும் வேண்டாம். மத்திய அரசே இறக்குமதி செய்து உரிய முறையில் வழங்கும்” என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்திவிட்டதாகச் செய்தி வருகிறதே. இது உண்மையா?
ஜனவரி மாதமே தயார் நிலையில் இருந்தோம் என்று மார்தட்டிக் கொள்பவரைத் தான் கேட்கிறேன்.
''கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 4-ம் தேதி முதலே இந்த ரேபிட் டெஸ்ட் கிட்-ஐ கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவிலேயே கொரோனா தொற்றில் இரண்டாவது இடத்திலுள்ள தமிழகம் இன்னும் இந்த ரேபிட் டெஸ்ட்டை நடைமுறைக்கு கொண்டு வராதது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது" என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டு இருப்பது முதல்வர் காதில் விழவில்லையா?
''மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது, தன்னலமற்று பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற பணியாளர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது" என்கிறார் முதல்வர்.
நான் வைத்துள்ள கோரிக்கைகள், ஆலோசனைகள் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் தானே தவிர மருத்துவர்கள் மீதல்ல. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என களத்தில் நிற்கும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால் இன்றைக்கும் சில மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்படுமளவுக்கு நிலைமை மாறிக்கொண்டு இருக்கிறது என்ற கவலையில்தான் சொன்னேன். அதை உணராமல் தன் மீது விழும்பழியை துடைத்துக் கொள்ளும் வழி அறியாது, மருத்துவர்கள் மீது போட்டு தப்பி ஓடப் பார்க்கிறார் முதல்வர்.
இன்றைக்கு ஏதோ மருத்துவர்களின் ஒரே காப்பாளர் போலப் பச்சோந்தியாய் நடிக்கிறார் முதலமைச்சர். ஆனால், தமிழக அரசால் பழிவாங்கும் நோக்கத்தோடு பணிமாற்றம் செய்யப்பட்ட 135 மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று வரைக்கும் பணிமாறுதல் செய்யாமல் பிடிவாதம் செய்வதற்குப் பின்னால் உள்ள ஆணவம், பழிவாங்கும் பாழ்பட்ட நோக்கம் அனைத்து மருத்துவர்களும் அறிந்ததுதான்.
அரசிடம் கோரிக்கை வைத்து போராடினார்கள் என்பதால் 135 மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ கொடுத்தது எடப்பாடி அரசு. அவர்களை வெவ்வேறு இடங்களுக்குத் தூக்கியடித்தது எடப்பாடி அரசு. இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்திமன்றம் போனார்கள். நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், ''போராட்டத்தில் 18,000 மருத்துவர்கள் பங்கேற்ற நிலையில் 135 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அவர்களை தண்டிக்கும் நோக்கமே தவிர வேறு ஒன்றுமில்லை. சார்ஜ் மெமோ, பணி இடமாற்றம் ஆகிய உத்தரவுகளை ரத்து செய்கிறேன்" என்று தீர்ப்பளித்தார்.
பிப்ரவரி மாதம் 28-ம் தேதி இந்தத் தீர்ப்பு வந்தது. இதுவரைக்கும் அந்த மருத்துவர்களுக்கு பணியிடமாற்றம் வழங்கவுமில்லை; சார்ஜ் மெமோ திரும்பப் பெறவுமில்லை. இப்படிப்பட்ட இரக்கமற்றவர் தான், நான் ஏதோ மருத்துவர்களைக் குறைசொல்வதாகச் சொல்கிறார்.
அம்மா உணவக ஊழியர்களுக்கு சிறப்பூதியம் வழங்கப்படுமா என்று கேட்டபோது, “அவர்கள் பணிபுரியும் தொழிலில் தானே பணிபுரிகிறார்கள்” என்றும், ஆம்புலென்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றிக் கேட்டபோது, “ஆம்புலென்ஸ் தொழிலாளர்கள்ன்னா எனக்கு ஒன்னும் புரியவில்லையே” என்றும் கிண்டலடிப்பதுதான் ‘அம்மாவின் அரசா?’
நான் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். கூவத்தூரில் சசிகலா காலில் தவழ்ந்து, ஆர்.கே.நகரில் தினகரனுக்காக உருண்டு, டெல்லியில் பா.ஜ.க.,வின் மடியில் மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு மனிதர், சந்தர்ப்பவாதம் என்ற வார்த்தையை எல்லாம் பயன்படுத்தலாமா? அவருக்கே இதெல்லாம் சற்று அதிகமாகத் தெரியவில்லையா?
இவரது சந்தர்ப்பவாத தாண்டவங்கள் தமிழ்நாட்டில் சந்தி சிரித்தவைதான்; இன்னும் சிரிக்கப் போகின்றவைதான்!
இந்த அரசியலை எல்லாம் பேசுவதற்கான நேரம் இதுவல்ல; இன்றைய சூழ்நிலை என்பது நாடே துயர மன நிலைமையில் இருக்கிறது. இந்த நேரத்திலும் உண்மையைப் பேசாமலும், திரைமறைவு காரியங்களில் ஈடுபட்டும், வாய்க்கு வந்தபடி புள்ளிவிவரங்களை வாரி அடித்து விட்டும் மக்களது வாழ்க்கையில் இந்த அரசு விளையாடுமானால் அதைக் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது!
அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை தி.மு.க. செயல்பட வைக்கும்.
மீண்டும் சொல்கிறேன்; திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை அரசியல் செய்வதற்கு பல களங்கள் உள்ளன. பேரிடர் காலம் என்பது திசைத் திருப்பல் ஏதுமின்றி மக்களுக்காகப் பணியாற்றும் களம். ஆகவே, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தி.மு.க. என்றைக்கும் தயாராக இருக்கிறது.
எனவே, பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை கொச்சைப்படுத்தும் மலிவான மனவோட்டத்தையும், அநாகரிகமான அரசியலையும் கைவிட்டு - நெருக்கடிகள் மிகுந்த இந்த நேரத்தில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் சென்று - மனித குலமே நடுங்கி நிற்கும் இந்தப் பேரிடரிலிருந்து தமிழக மக்களை மீட்டிட பொறுப்புள்ள முதலமைச்சராக, கடமை உணர்வுடன் செயல்பட முன்வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கொரானா காலம் முடிந்த பிறகே அரசியல் என்பதை எடப்பாடி நினைவில் ஏந்தி நடக்க வேண்டும்!
நிவாரண உதவிகளை செய்து மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். -K.S.அழகிரி
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத்தொடங்கியது. நம்மை ஒத்த மக்கள் தொகைக்கொண்ட அண்டை நாடான சீனாவில் ஏற்படுகிற பாதிப்பு இந்தியாவிலும் ஏற்படும் என்கிற தொலைநோக்கு பார்வை மத்திய பா.ஜ.க. அரசுக்கு இல்லாததால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சீனாவில் இருந்து வந்த மாணவர் மூலமாக முதல் தொற்று ஆரம்பமானது. அதற்கு பிறகு படிப்படியாக அது பரவத்தொடங்கியது. கொரோனா நோய் என்பது ஒரு கொடிய தொற்றுநோய் என்பதை உணராமல் பிரதமர் மோடி பிப்ரவரி 24 ஆம் தேதி அகமதாபாத் விளையாட்டு மைதானத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி நமஸ்தே டிரம்ப் வரவேற்பு மடலை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது கொரோனா நோயின் அச்சம் அமெரிக்கா அதிபருக்கோ, இந்திய பிரதமருக்கோ இல்லாததன் விளைவைத்தான் அமெரிக்க, இந்திய மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இந்திய விமான நிலையங்களை ஒரு மாதத்திற்கு முன்பே மூடியிருந்தால் இந்தியாவில் கொரோனா நோய் நுழைந்திருக்காது. தலைநகர் டெல்லியில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாட்டிற்கு மத்திய உள்த்துறை அமைச்சகம் முன்கூட்டியே தடை விதித்திருந்தால் இன்றைய பாதிப்பில் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கும். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் பொறுப்பே தவிர, மத்திய அரசு அனுமதியோடு மாநாடு நடத்திய தப்ளிக் ஜமாத் அல்ல. கொரோனா நோய்க்கு மதசாயம் பூசுபவர்கள் அந்த நோயை விட கொடியவர்கள்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 26 மாநிலங்களுக்கு ரூபாய் 11,051 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்த நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில் கடுமையான பாரபட்சம் பா.ஜ.க. அரசால் காட்டப்பட்டிருக்கிறது. கொரோனா நோயினால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 1,611 கோடி ஒதுக்கியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ரூபாய் 510 கோடி ஒதுக்கியிருக்கிறது. ஆனால் குறைவான பாதிப்புள்ள உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 966 கோடி, மத்தியப்பிரதேசத்திற்கு ரூபாய் 910 கோடி, பீஹாருக்கு ரூபாய் 708 கோடி, குஜராத்துக்கு ரூபாய் 662 கோடி, ஆனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிற கேரளாவிற்கு ரூபாய் 157 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கை புரிந்துகொள்ளலாம்.
35 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதமான 2 டிரில்லியன் டாலர் - அதாவது 148 லட்சம் கோடி ரூபாயை நிதியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒதுக்கியிருக்கிறது. ஆனால் 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய மக்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1 சதவீத தொகையை கூட ஒதுக்குவதற்கு இதுவரை பா.ஜ.க. அரசு முன்வரவில்லை. அமெரிக்காவை போல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத மதிப்பான ரூபாய் 20 லட்சம் கோடியை ஒதுக்கினால் தான் கொரோனா நோயை எளிதாக வெல்லுவதோடு, பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் நான் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவர்களோடு காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியதில் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அதில் கொரோனா நோய் ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்தவேண்டியதில் பரிசோதனையும், தடுப்பு நடவடிக்கையும் ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். உலகத்திலேயே பரிசோதனை விகிதம் இந்தியாவில் குறைவாக இருக்கிறது. 10 லட்சம் பேரில் 120 பேருக்குத்தான் சோதனை செய்கிற வசதி இருக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் கொரோனா நோயில் சிக்கி தவிக்கும் மக்களிடம் பரிவு காட்டுகிற வகையில் இலவசமாக சோதனைகள் நடத்தப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தற்போது ஒரு சோதனைக்கு ரூபாய் 4500 வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மக்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு இல்லாத அக்கறையை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியிருப்பதை மனதார வரவேற்கிறேன் .
மேலும் மக்கள் ஊரடங்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒவ்வொரு ஜன் தன் வங்கி கணக்கிலும் ரூபாய் 7500 மத்திய அரசு செலுத்தவேண்டும். தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 43.7 கோடி என்று கணக்கிட்டிருக்கிறது. இதில் விவசாயத்துறையில் 24.6 கோடி, கட்டுமான தொழிலில் 4.4 கோடி மற்றும் உற்பத்தி, சேவை துறைகளில் மீதி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நாடுமுழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிவாரண உதவிகள் எதுவும் சென்றடைவதில்லை. இவர்களுக்கு மக்கள் ஊரடங்கு காலமான 3 மாத காலத்திற்கு உதவித்தொகையை நேரடியாக, ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எனவே, மத்திய பா.ஜ.க. அரசு நாட்டில் நிலவுகிற அசாதாரண சூழலில் போர்க்கால அடிப்படையில் அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பது மிக மிக அவசியமாகும். ஒரு பக்கம் கொரோனா நோய் தடுப்பில் கவனம் செலுத்துகிற மத்திய, மாநில அரசுகள், மக்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து நிற்கிற ஏழை, எளிய மக்களை பசி, பட்டினி, பஞ்சத்தில் இருந்து காப்பாற்றுகிற மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த சூழலில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இரு முனைகளிலும் நிவாரண உதவிகளை செய்து மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
சனி, 11 ஏப்ரல், 2020
மதுவிலக்கை உறுதியான செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஓர் உன்னதமான கனவு நிறைவேறுவதற்கு ஏற்ற தருணம் இது!- DR.S.ராமதாஸ்
ஒரு கனவு கண்டேன்!
தமிழ்நாடும், இந்தியாவும் இப்போது மிகவும் நெருக்கடியான, சவாலான காலகட்டத்தை கடந்து சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து புதிது புதிதாக வரும் செய்திகள் எனது தூக்கத்தைக் கெடுக்கின்றன. கொரோனா வைரஸ் நோய் பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விட்டது; வைரஸ் கிருமிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டன என்ற செய்தி வரும் போது தான் துக்கம் கலையும்; இயல்பான தூக்கம் வரும்.
அப்படிப்பட்டதோர் இரவில் தான் நான் உறங்குவதற்கு சென்றேன். வழக்கம் போலவே பல்வேறு நிகழ்வுகள் மனதில் நிழலாட உறக்கம் கண்களை விட்டு விலகிச் சென்றது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தூக்கம் கண்களைத் தழுவ, அடுத்த சில நிமிடங்களில் ஒரு கனவு என்னை ஆட்கொண்டது.
அந்தக் கனவில் முதலில் வந்தவர் மகாத்மா காந்தியடிகள்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்காக எந்த அளவுக்கு தீவிரமாக போராடினாரோ, அதே அளவு தீவிரத்துடன் மதுவிலக்குக்காகவும் போராடினார். 1930-ஆம் ஆண்டில் இந்தியாவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா முழுவதும் கள்ளுக்கடை மற்றும் சாராயக்கடைகள் முன்பு மறியல் போராட்டங்களை அறிவித்தார் மகாத்மா காந்தி.
மகாத்மா அறிவித்த போராட்டம் வட மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைய சென்னை மாகாணத்தில் மொத்தம் 9,000 சாராயக்கடைகள் இருந்தன. ஆனால், காந்தியடிகளின் எதிர்ப்பால் 6,000 கடைகளை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை. அதுமட்டுமின்றி மாவட்ட ஊராட்சிகளும், ஊராட்சி ஒன்றியக் குழுக்களும் தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்க அனுமதி அளிப்பதில்லை என்று தீர்மானித்தன. கிராமங்களில் மது குடிப்பவர்களை மக்கள் புறக்கணித்தனர். மதுவுக்கு எதிராக மகாத்மா காந்தி நடத்திய அந்தப் போராட்டம் தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
மகாத்மா காந்தியின் இந்த போராட்டத்திற்கு முன்பே அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மதுவிலக்குப் போராட்டத்தை 1921-ஆம் ஆண்டே தந்தை பெரியார் தமிழகத்தில் சிறப்பாக நடத்தினார். தந்தை பெரியார் அடிப்படையில் சிக்கனவாதி. எதையும் இழக்க விரும்ப மாட்டார். ஆனாலும், தமது குடும்பத்திற்கு சொந்தமான தென்னை மரங்கள் கள் இறக்க பயன்படலாம் என்ற அச்சத்தில் 500-க்கும் மேற்பட்ட மரங்களை தந்தை பெரியார் வெட்டிச் சாய்த்தார். தொடர்ந்து நடத்திய போராட்டங்களுக்காக பெரியார் 21.11.1921 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த காட்சியும் எனது கனவில் வந்து சென்றது.
தந்தை பெரியார் கைதானவுடன் மதுவிலக்கு போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்று வெள்ளையர் அரசு நினைத்தது. ஆனால், அதை பொய்யாக்கினார் பெரியார். தமக்கு பதிலாக தமது மனைவி நாகம்மையையும், சகோதரி கண்ணம்மையையும் போராட்டத்தில் கலந்துக் கொள்ள செய்தார். மதுவிலக்கு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது, அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக மகாத்மாவுடன் ஆங்கிலேயர்கள் பேச்சு நடத்தினார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த காந்தியடிகள்,‘‘மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும். அவர்கள் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதிகள் ஆவர்’’ என்று பெருமையுடன் கூறினார். அந்த அளவுக்கு நாகம்மையும், கண்ணம்மையும் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருந்தனர்.
மதுவிலக்கை அடைவதில் மகாத்மாவும், பெரியாரும், நாகம்மை மற்றும் கண்ணம்மையும் போராட்டத்தால் சாதித்தவர்கள் என்றால், இராஜாஜியும், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும் அதிகாரத்தால் சாதித்தவர்கள்.
1937-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்ற இராஜாஜி அடுத்த 100 நாட்களுக்குள், அதாவது அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அன்றைய சேலம் மாவட்டம் இன்றைய சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். பின்னர் வட ஆற்காடு, இன்றைய ஆந்திராவில் உள்ள சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களுக்கு மதுவிலக்கை நீட்டித்தார். வழக்கம் போலவே மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறி அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர். ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாத இராஜாஜி மதுவிலக்கை உறுதியாக நடைமுறைப்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட அப்போது அவர் விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்.
இந்திய வரலாற்றில் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திலும் மதுவிலக்கை கொண்டு வந்தவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தான். 1948-ஆம் ஆண்டில் அவர் மதுவிலக்கை கொண்டு வந்தபோது அரசுக்கு ரூ.18 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறினார். ஆனால், ஆண்டுக்கு ரூ.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை; அதற்காக மதுவிலக்கை கைவிட மாட்டேன் என்று உறுதிபட கூறினார். அப்போது அவர் கொண்டு வந்த மதுவிலக்கு தான் 1971-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அந்த மதுவிலக்கைத் தான் 1971-ஆம் ஆண்டில் கலைஞர் அரசு நீக்கியது.
ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அறிவித்த மதுவிலக்கை கடைபிடிப்பதில் காமராசர், பக்தவச்சலம் போன்ற காங்கிரஸ் தலைவர்களைப் போலவே திமுகவின் முதல் முதலமைச்சரான அறிஞர் அண்ணாவும் உறுதியாக இருந்தார். மதுவிலக்கை ரத்து செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்ட போது, ‘‘மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தொழுநோயாளியின் கைகளில் இருக்கும் வெண்ணெய்க்கு சமமானது’’ என்று கூறி அந்த யோசனையை நிராகரித்து விட்டார். ஆனால், அவருக்கு பிறகு முதலமைச்சரான கலைஞர், இராஜாஜி போன்றவர்களின் வேண்டுகோளையும் மீறி மதுவிலக்கை ரத்து செய்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 39 ஆண்டுகளாக மதுவிலக்கு கோரிக்கையை நான் எழுப்பி வருகிறேன். அப்போதெல்லாம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மதுவுக்கு அடிமையானவர்கள் பாதிக்கப்படுவர்; கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்றெல்லாம் கூறி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுத்து விடுவார்கள் தமிழக ஆட்சியாளர்கள். ஆனால், கெட்டதிலும் ஓர் நல்லது என்பதைப் போல கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவது சாத்தியமானது என்பதை நிரூபித்துள்ளது. கடந்த 18 நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகள் திறக்கப்படாததால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவில்லை. தமிழகத்தில் நாளையே முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கூட மக்கள் மது இன்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த வகையில் தமிழகத்தில் முழுமதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு தான் இந்த ஊரடங்கு என்று கனவில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே கனவு கலைந்து விழிப்பு வந்து விட்டது.
கண்டது கனவு தான் என்றாலும் கூட அதில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நிஜம் தானே. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் உண்மை தானே.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மேற்குறிப்பிடப்பட்ட தலைவர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி அவர்களும் இணைய முடியும்.
எது எப்படியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை உறுதியான செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஓர் உன்னதமான கனவு நிறைவேறுவதற்கு ஏற்ற தருணம் இது!
சனி, 4 ஏப்ரல், 2020
கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்! - மு.க.ஸ்டாலின்
"கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்!"
- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை விவரம்:
அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அன்றாடம் மக்களை நேருக்கு நேராகச் சந்தித்தே பழக்கப்பட்டவன் நான்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாம் எல்லாருமே இப்போது தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை.
அவரவர் வீடுகளில் தனித்து இருந்தால்தான் கொரோனா வைரஸைக் கொல்லவும் முடியும்; வெல்லவும் முடியும்!
அதனால்தான் வீடியோ மூலமாக உங்களைச் சந்திக்கிறேன்.
கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சென்னை 'அண்ணா அறிவாலயம்' வளாகத்தில் உள்ள 'கலைஞர் அரங்கத்தை' அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தோம்.
சென்னையில் மட்டுமல்லாது மற்ற ஊர்களில் உள்ள தி.மு.க. கட்டடங்களும் மக்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம்!
அதுமட்டுமின்றி, 'மாஸ்க்' உள்ளிட்ட தற்காப்புப் பொருட்களைத் திரட்டி, தேவைப்படுகிற மக்களுக்கு தருகிற மகத்தான வேலையையும் தி.மு.க. கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதியினர், கழக முன்னணியினர் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா நேரத்திலும் மக்களோடு மக்களாக அவர்களை இருக்க அறிவுறுத்தியிருக்கிறேன்!
தினமும் வீட்டில் இருந்தபடியே இவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நிர்வாகியும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னென்ன சேவைகள் செய்தோம் என்று என்னிடம் சொல்லி வருகிறார்கள்.
அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை; இந்தியாவுக்கு மட்டுமில்லை;
உலகப் பிரச்சினையாக இருக்கிறது. எனக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களை மூத்த மருத்துவர்களிடம் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
அவர்கள் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிக்கும் RT-PCR என்ற ஆய்வின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்! எதனால் அப்படி சொல்கிறார்கள் என்றால், நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே நோய்க் கிருமியைச் சுமந்து பரப்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்!
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களை மட்டும் பரிசோதனைச் செய்தால் போதாது;
வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காப்பதுதான் சரியானது!
இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
இந்த பரிசோதனையைச் செய்வதற்கு அதிக கட்டணம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.
இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளோடு வருகிற அனைவருக்கும் RT-PCR பரிசோதனையைச் செய்ய வேண்டியது அவசியம்.
அரசு மருத்துவமனைகள் மாதிரியே, தனியார் மருத்துவமனைகளையும் தயார்ப்படுத்த வேண்டும்.
செயற்கைச் சுவாசக் கருவிகள் கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.
கூடுதல் நிதியை ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும். மருத்துவர்களுக்கான பிபிஇ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. அவற்றை அதிகரிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் அதிகம் வாங்க வேண்டும். மத்திய அரசு, இவற்றை எல்லாம் போர்க்கால அடிப்படையில உற்பத்தி செய்து மாநிலங்களுக்குத் தர வேண்டும்.
நாடு இப்பொழுது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது.
சிலர் சொல்வது போல இது சுகாதாரப் பேரிடரோ அல்லது பொருளாதாரப் பேரிடரோ மட்டுமன்று; மிகப்பெரிய சமூகப் பேரிடராகவும் மாறிவிட்டது என்பதுதான் உண்மை!
இதை மக்கள் அனைவரும் உணர வேண்டும். முதலில் தமிழக அரசு உணர வேண்டும்.
ஏதோ சலுகைகள் அறிவித்தோம்; அதோடு தங்கள் கடமை முடிந்ததாக நினைத்துவிடக் கூடாது.
ஒவ்வொரு அறிவிப்பும் கடைசி மனிதனையும் போய்ச் சேர்ந்ததா என்பதை சரி பார்க்க வேண்டும்.
கிராமப்புறங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிக உயர்ந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதனால் மாநிலம் முழுவதும் ஒரே விலையை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதையும் அரசு நிவர்த்தி செய்திட வேண்டும்.
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் முறையாக வரவில்லை என்கிறார்கள். அது கிடைக்க வழி செய்திட வேண்டும்.
பல்வேறு வகையான கடன்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் உண்டு என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பல வங்கிகள் இம்மாத தவணையை (இ.எம்.ஐ.) வாடிக்கையாளர்களைக் கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். வங்கிக்கு வந்து எழுதித்தர வேண்டும் என்று சொல்கிறார்களாம். இதை ஏன் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை?
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நிறையப் பேர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களின் சொந்தச் செலவில் கிருமி நாசினி, முகக்கவசம், பிளீச்சிங் பவுடர் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் ஆட்சி நடத்துகிற முறையா?
துயரமான நேரத்திலும் இப்படி அரசியல் செய்ய வேண்டுமா?
இந்த நோயின் தீவிரத்தைச் சொல்லி யார் முதலில் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்?
தமிழக அரசு தான் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும், நான் தான் முதன்முதலில் தி.மு.க. நிகழ்ச்சிகள் அத்தனையும் மார்ச் 31-ம் தேதி வரைக்கும் ஒத்திவைக்கப்படும் என்று மார்ச் 16-ம் தேதியே அறிவித்தேன். இந்த மெத்தனப்போக்கை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரினேன்.
நேரில் பங்கேற்காமல், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டச் சொல்லி அறிவுறுத்தினேன்.
அதையும் முதலமைச்சர் கேட்கவில்லை.
இந்தத் துறையின் அமைச்சர் கூட வேண்டாம், தானே எல்லாம் என்கிற முனைப்போடு செயல்படுகிற முதலமைச்சர் எதிர்க்கட்சிகளை மட்டும் எப்படி அனுமதிப்பார்?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தி.மு.க.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி தி.மு.க. அதனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொல்வதற்கான அனைத்து தகுதியும் தி.மு.க.,வுக்கு இருக்கிறது.
இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுடைய குறைகளை அரசாங்கத்துக்குச் சொல்வதற்கான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குத்தான் இருக்கிறது.
மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை தி.மு.க.,வுக்கு இருக்கிறது.
அ.தி.மு.க. தானே ஆட்சியில் இருக்கிறது, அவர்களுக்குக் கெட்ட பெயர் வந்தால் வரட்டும் என்று நாங்கள் சும்மா இருக்க முடியாது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள்தான் எங்களுக்கு முக்கியம்.
மக்களைத் தவிர வேறெதுவும் எங்களுக்கு முக்கியமில்லை!
இயற்கைக்கும் நோய்க்கும் சாதி, மதம், மொழி, இனம், நாடு, எல்லை இப்படி எந்தப் பாகுபாடும் இல்லை!
அதனால் இந்தத் துயரமான நேரத்தில் மக்களின் உயிரைப் பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்கிறவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சாதி,மத அடிப்படையில நம்மை பிளவுபடுத்த யாரையுமே அனுமதிக்காதீர்கள்!
கொரோனா நோய்தான் நம்முடைய எதிரியே தவிர; கொரோனா நோயாளி நம்முடைய எதிரி இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒற்றுமையால்தான் எதையும் வெல்ல முடியும். பிரிவினையால் எதையும் வெல்ல முடியாது!
'வீட்டிலேயே இருக்க முடியவில்லை' -
'வீட்டிலேயே இருக்க போரடிக்குது' -
'மனசுக்குக் கஷ்டமா இருக்கு' என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொல்லி வருகிறார்கள். உண்மைதான்! தினமும் ஓய்வில்லாமல் ஓடியாடி உழைத்தவர்களுக்கு வீட்டில் இருப்பது என்பது கடினம்தான். ஆனால் வேறு வழியில்லை!
வீட்டில் உங்களை இருக்கச் சொல்வது உங்களது நன்மைக்காக, நாட்டுக்காக!
நாட்டுக்காக உழைப்பது மட்டுமல்ல;
வீட்டில் இருப்பதும் ஒருவிதமான போராட்டம் தான்.
கொரோனாவை எதிர்க்கும் போராட்டம்!
அதை வீட்டிற்குள் இருந்து நடத்துகிறோம். அவ்வளவுதான்.
நிறையப் படியுங்கள். எழுதுங்கள். பிள்ளைகளுடன் பேசுங்கள்.
பெற்றோர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்யுங்கள். உற்சாகமாகக் கழியுங்கள்.
இந்த 21 நாள் அனுபவம் நிச்சயம் உங்களுக்கு மனநிம்மதியைத் தான் தரும்.
மனக்கஷ்டத்தைத் தராது!
திரும்பத் திரும்ப உங்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்- வீட்டிற்குள்ளேயே இருங்கள். வீட்டிற்குள்ளேயும் தனித்தனியாக இருங்கள்!
அதைக் கடைப்பிடித்தாலே கொரோனாவை வென்றுவிடலாம்.
உலக சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சொல்லியிருப்பதைப் பார்த்தேன்.
"இந்தியா இரண்டு மாபெரும் நோய்களை வென்றுவிட்டது. ஒன்று, பெரிய அம்மை; இன்னொன்று போலியோ. அதே போல இந்த கொரோனாவையும் இந்தியா நிச்சயம் வெல்லும்" என்று சொல்லி இருக்கிறார்.
அந்த தன்னம்பிக்கைதான் இப்போது நமக்குத் தேவை.
வியாழன், 2 ஏப்ரல், 2020
மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது: வட்டி தள்ளுபடி வழங்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்
மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை
ஆகிவிடக்கூடாது: வட்டி தள்ளுபடி வழங்க வேண்டும்!
கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இதில் நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக அபராதம் வசூலிக்க வகை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது தொடர்பாக ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. சில வங்கிகள் தாங்களாகவே கடன் தவணையை ஒத்திவைத்துள்ளன. இன்னும் சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் எழுத்துபூர்வமாக விண்ணப்பித்தால் மட்டுமே கடன் தவணையை ஒத்திவைக்கின்றன. ஆனால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான தொகைக்கு, கடன் செலுத்தி முடிக்கும் காலம் முழுமைக்கும் வட்டி செலுத்தியே தீர வேண்டும் என்று வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துவதில் மட்டும் அனைத்து வங்கிகளும் ஒரே அணுகுமுறையை கடைபிடிக்கின்றன.
உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கியில் ஒருவர் ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருப்பதாகவும், அக்கடனுக்கு இன்னும் 15 ஆண்டுகள் தவணை செலுத்த வேண்டியிருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவர் அடுத்த 3 மாதங்களுக்கு தவணை செலுத்தவில்லை என்றால், அந்த 3 மாதங்களுக்கான தவணைத் தொகை, அவர் செலுத்த வேண்டிய அசல் தொகையுடன் சேர்க்கப்படுகிறது. அத்துடன் அந்த தொகைக்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கும் அவர் வட்டி செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால் அவர் தவணைக்காலம் முழுமைக்கும் சேர்த்து ரூ.2.34 லட்சம் கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். இதற்காக அவரது கடன் தவணைக் காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
15 ஆண்டுகள் தவணைக்காலம் கொண்ட ரூ.30 லட்சம் வீட்டுக் கடனுக்கு, மாதத் தவணையாக ரூ.28,500 மட்டுமே செலுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு அவர் கட்டாமல் இருக்கும் தொகை ரூ.85,500 மட்டும் தான். ஆனால், அவ்வாறு செலுத்தாமல் இருப்பதற்காக அந்தத் தொகையை செலுத்துவது மட்டுமின்றி, ரூ.2.34 லட்சம் கூடுதல் வட்டி வசூலிக்க வங்கிகள் துடிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் என்ற தத்துவத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வாடுகின்றனர். சுயதொழில் செய்பவர்கள் வருவாயை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலை மாறி இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியவில்லை. அதனால் தான் மாதக்கடன் தவணை செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ரிசர்வ் வங்கியும் அதையேற்று 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளை அனுமதித்தது.
கடன் தவணை ஒத்திவைப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்பதால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முன்வராத வங்கிகள், கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று கூடுதல் வட்டி செலுத்த வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்துவது வணிக அறத்திற்கு எதிரானது ஆகும். அனைத்தையும் இழந்து நிற்கும் ஒருவனுக்கு நம்மால் முடிந்த உதவிகளை வழங்குவது தான் அறமே தவிர, அவனுக்கு செய்த உதவிக்கான தொகையை வட்டி போட்டு வசூலிப்பது அறம் அல்ல.
எனவே, இந்த பிரச்சினையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட வேண்டும். 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31&ஆம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு ஆணையிட வேண்டும்.
மத்திய அரசின் நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் மக்களை துன்புறுத்துகிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. -K.S.அழகிரி
வரலாறு காணாத வகையில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்து மக்கள் உயிரை காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளே முடங்கி வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தை பறிகொடுத்து வாழ்வாதாரத்திற்காக கடும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் மக்களை துன்புறுத்துகிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவற்றுக்கு வட்டிவிகிதத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தற்போது சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்பட்டுவரும் 7.9 சதவீத வட்டியை 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அதேபோல தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பெறுகிற வருமானம் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. தங்களது மாத அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கு செலுத்துகிறார்கள். தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வைப்புநிதிக்கான வட்டிவிகிதத்தை மத்திய பா.ஜ.க. அரசு குறைத்ததை விட தொழிலாளர் விரோத நடவடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.
அதேபோல பொது வருங்கால வைப்புநிதி என்பது பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களில் செலுத்தப்பட்ட மொத்த தொகுப்பாகும். இதில் முதலீடு செய்தால் அதிக வட்டியும் பாதுகாப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இத்தகைய திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கிறார்கள். அந்த நம்பிக்கைகளை சீர்குலைத்து சிறுசேமிப்பு செய்கிற பழக்கத்தில் பின்னடைவு ஏற்படுகிற வகையில் செயல்பட்ட மத்திய பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்து வாங்கும் சக்தி இல்லாமல் இருக்கிற நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும்.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக பிரதமர் பெயரில் ஒரு அறக்கட்டளையை மோடி உருவாக்கியிருக்கிறார். ஆனால் 1948 முதல் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த நிதியில் டிசம்பர் 2019 நிலவரப்படி ரூபாய் 3800 கோடி செலவழிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 2018 - 19 ஆம் ஆண்டில் கூட ரூபாய் 212 கோடி தான் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை இயற்கை பேரழிவுகளான வெள்ளம், புயல், பூகம்பம் மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரண தொகையை பிரதமர் வழங்குவது வழக்கமாகும். இந்த நிதிக்கு வழங்கப்படுகிற நன்கொடைக்கு 100 சதவீத வரிச்சலுகை உண்டு.
கடந்த 72 ஆண்டுகளாக நடைமுறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் நிலுவையில் இருக்கிற ரூபாய் 3800 கோடியை பயன்படுத்தாமல் புதிதாக தமது பெயரில் புதிய நிதியத்தை உருவாக்குவது ஏன்? சமீப காலமாக மத்திய அரசில் ஏற்பட்டுள்ள அதிகாரக் குவியலின் காரணமாக எல்லாவற்றுக்கும் பிரதமரை முன்னிலை படுத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழி வகுக்குமா? 136 கோடி மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்தி திட்டங்களை அறிவிப்பது ஏற்ப்புடையது தானா? கொரோனா போன்ற கொடிய நோயை எதிர்க்க தனிப்பட்ட முறையில் பிரதமரை முன்னிலைப்படுத்தாமல் ஏற்கனவே மிகச்சிறப்பாக நடைமுறையில் இருக்கிற பிரதம மந்திரி நிவாரண நிதியை புறக்கணித்து புதிய நிதியத்தை உருவாக்கியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)