புதன், 13 ஏப்ரல், 2022

கெயில் அத்துமீறலால் உழவர் தற்கொலை: குழாய் பாதையை தடுத்து நிறுத்துங்கள் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! - DR.அன்புமணி ராமதாஸ்

 கெயில் அத்துமீறலால் உழவர் தற்கொலை: குழாய் பாதையை தடுத்து நிறுத்துங்கள் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்!

 - DR.அன்புமணி ராமதாஸ்

தருமபுரி மாவட்டம் கரியப்பன அள்ளி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும், உழவர்களின் எதிர்ப்பையும் மீறி, எரிவாயு குழாய் பாதை அமைப்பதற்கான பணிகளில் கெயில் நிறுவன அதிகாரிகள் முயன்றதால், பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதையறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கெயில் நிறுவன அதிகாரிகளின் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை ஆகிய தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு எரிவாயு குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்த போதிலும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் தொடர் போராட்டம் காரணமாக அத்திட்டத்தை செயல்படுத்துவதை கெயில் நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. இத்தகைய சூழலில், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் இத்திட்டத்திற்கான நில அளவீட்டுப் பணிகளில் கெயில் நிறுவன அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு அப்பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

கெயில் நிறுவனத்தின் அத்துமீறலைக் கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தியும் சில உழவர்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில்,  இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, இன்று, 13&ஆம் தேதி மாலையில் உழவர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். இது மிகவும் சரியான நடவடிக்கை ஆகும். ஆனால், அதை பொருட்படுத்தாத கெயில் நிறுவன அதிகாரிகள் கரியப்பன அள்ளி கிராமத்தில்  நிலத்தை அளந்து கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் செயலால், தமது வாழ்வாதாரமாக திகழும் ஒரு ஏக்கர் நிலமும், அதில் அடங்கியுள்ள வீடும் பறிபோய் விடும் என்று அஞ்சிய கணேசன் என்ற உழவர், அவரது நிலத்திலேயே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கணேசனின் தற்கொலை செய்தி கடும் மன வலியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உலகுக்கு உணவளிக்கும் கடவுள்களான உழவர்கள் தங்களின் நிலங்களை எவ்வாறு நேசிக்கிறார்கள்; அதற்கு  ஒரு பாதிப்பு வந்தால் உயிரைக்கூட இழக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு கணேசனின் தற்கொலை தான் காரணமாகும். உழவர்களுக்கும், நிலங்களுக்கும் உள்ள உறவின் மகத்துவம் வருமானத்தையும், லாபத்தையும் மட்டுமே பார்க்கும் கெயில், ஓ.என்.ஜி.சி போன்ற அரசு பெரு நிறுவனங்களுக்குத் தெரியாது.

ஒரு மாவட்டத்தில், அந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி அணுவும் அசையக்கூடாது. ஆனால், சமாதானப் பேச்சு நடத்தி, அதில் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்ட பின்னர் பணிகளைத் தொடரலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்திய பிறகும் அத்துமீறும் அதிகாரத்தை கெயில் நிறுவனத்திற்கு யார் கொடுத்தது? மனிதநேயமின்றி செயல்பட்ட கெயில் நிறுவனம் தான் உழவர் கணேசனின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்; அதற்கு காரணமான கெயில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பாதை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக 2012 -13 ஆம் ஆண்டுகளில் உழவர்கள் தீவிரமாக போராடிய போது அப்போராட்டத்தை முறியடிப்பதற்கான ஒடுக்குமுறைகள் தமிழக அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக போராடத் தொடங்கிய பிறகு தான், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உழவர்கள் தரப்பு நியாயத்தை புரிந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு தடை விதித்தார். 

உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இத்திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை, சட்டத்தின் கண்களை மட்டும் கொண்டு பார்த்து, நீக்கியிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை கருணையின் கண் கொண்டு பார்த்து கைவிடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், 7 மாவட்டங்களில் உள்ள உழவர் அமைப்புகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக