சனி, 9 ஏப்ரல், 2022

குழந்தைகள் விரும்பும் கலைகளைக் கற்க பள்ளிகளும், பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும்.- திரு எம்.வெங்கையா நாயுடு


 இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க, குழந்தைகள் தேர்வு செய்யும் எந்தவித கலையையும் கற்பதற்கு அவர்களைப் பெற்றோரும், பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

62-வது தேசிய கண்காட்சி கலை விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி விருதுகளை வழங்கி குடியரசு துணைத்தலைவர் உரையாற்றினார்.

மேல்நாட்டு கலாச்சாரம் காரணமாக நமது பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைகள் மறைந்து வருவதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார். இத்தகைய கலைகளுக்கு அரசுகளும், சமுதாயமும் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, வெளியில் தெரியாத ஏராளமானோர் விடுதலைக்காக பாடுபட்ட போதிலும், அவர்களைப் பற்றி வரலாற்று நூல்கள் அதிக கவனம் செலுத்தாததால், மக்களுக்கு அவர்களைப் பற்றி தெரியவில்லை என்று கூறினார். இந்த வேறுபாட்டைக் களைய அவர்களது போராட்டம் பற்றி வெளியில் தெரியுமாறு மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ரவீந்திர நாத் தாகூர், சுப்பிரமணிய பாரதி, காஸி நஸ்ருல் இஸ்லாம், பங்கிம் சந்திர சாட்டர்ஜி தங்களது தேசபக்தி பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம் மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதை அவர் நினைவுகூர்ந்தார். கலைஞர்களும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது பற்றி குறிப்பிட்ட அவர், வளமையான கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் இணைக்கும் இழையாக அவர்களது கலை இருந்தது எனக்குறிப்பிட்டார். கலை மக்களை ஒற்றுமைப்படுத்தும் சாதனம் என்று கூறிய திரு நாயுடு, நமது வளமையான கலாச்சார பாரம்பரியங்களையும், பல்வேறு வகையிலான கலைகளையும் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக