திங்கள், 18 ஏப்ரல், 2022

மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை சார்ந்த அரசியலுக்கான தேவையைக் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்


 இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை சார்ந்த அரசியலுக்கான தேவையைக் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ண மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் மறைந்த திரு.பின்னாமநேனி கோடீஸ்வரராவின் உருவச்சிலையை மசூலிப்பட்டினத்தில் திறந்து வைத்து பேசிய அவர், பொது வாழ்க்கையில் தரம் தாழ்ந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசியல் எதிர்ப்பாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை நிறுத்த வேண்டுமென்று திரு.நாயுடு வலியுறுத்தினார். முக்கியமான தேச விஷயங்களின் மீது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பொதுக் கருத்தை உருவாக்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்து வரும் அரசியல்வாதிகள் பல்வேறு விஷயங்கள் மீது கோட்பாட்டு அடிப்படையிலான நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பதோடு மட்டும் தங்களின் பங்களிப்பை மக்கள் நிறுத்திக் கொள்ளக் கூடாது என்று யோசனை தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசிடமிருந்து பதிலளிக்கும் கடமையை தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டுமென்றும், கேள்வி கேட்க வேண்டுமென்றும் கூறினார். ஒழுக்கம், பண்பு, திறன், நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர சாதி, சமயம், பணம், குற்றச்செயல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக