வெள்ளி, 1 ஏப்ரல், 2022

‘யோகா’ பயிற்சி என்ற போர்வையில் - ‘சாக்கில்’ ஆர்.எஸ்.எஸின் ஷாகா பயிற்சி மதக்கலவரம், வெறுப்புப் பிரச்சார விதை ஊன்ற அனுமதிக்கலாமா? - கி.வீரமணி

 தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு...!

‘யோகா’ பயிற்சி என்ற போர்வையில் - ‘சாக்கில்’ ஆர்.எஸ்.எஸின் ஷாகா பயிற்சி

மதக்கலவரம், வெறுப்புப் பிரச்சார விதை ஊன்ற அனுமதிக்கலாமா?

பள்ளி மைதானங்களிலும், பொது இடங்களிலும் 

நடத்துவது தடை செய்யப்படவேண்டும்! - கி.வீரமணி

2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸின் நூற்றாண்டு என்பதை மய்யப்படுத்தி தமிழ்நாடு போன்ற ஆர்.எஸ்.எஸ். வலுவாகக் காலூன்ற முடியாத மாநிலங்களில் திட்டங்களைத் தீட்டி செயல்பட உள்ளது. அதில் ஒன்றுதான் இளைஞர்களுக்கு ‘யோகா’ பயிற்சி என்ற பெயரில் ‘ஷாகா’ பயிற்சி அளிப்பதாகும்.

முதலாவதாக தனியார் பள்ளிகளைக் குறி வைக்கிறார்கள். விடுமுறை நாள்களில் பிள்ளைகளுக்கு  உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கிறோம் என்று சொல்லி, தனியார் பள்ளிகளின் மைதானங்களைப் பயன்படுத்தி, தொடக்கத்தில் ஏதோ சில உடற்பயிற்சிகள் என்ற தந்திர முறையில், படிப்படியாக ஆர்.எஸ்.எஸின் ‘ஷாகா’வையும் திணிப்பதுதான் இதன் உள்நோக்கம்.

ஆர்.எஸ்.எஸின் யுக்திகளை அறிந்தவர்களுக்கே இதன் சூட்சமம் புரியும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி நல்லதுதானே என்று அப்பாவித்தனமாக நம்பி அனுப்புவது ஆபத்தானது.

தங்கள் பிள்ளைகளின்  மூளைக்குக் காவிச் சாயமேற்றி கடைசியில் தங்களின் அந்தரங்க திட்டமான மதக்கலவரங்களுக்கு இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனைப் பெற்றோர்கள் தொடக்கத்திலேயே புரிந்துகொண்டு, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர்களாக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் சரி, எம்.ஜி.ஆர். அவர்களும் சரி, ‘ஷாகா’ பயிற்சியை அனுமதிக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்ததை இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டுகிறோம்.

வடலூரில் வள்ளலார் வாழ்ந்த பூமியில் - அதுவும் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். அளித்த பயிற்சியை எதிர்த்து பொதுமக்கள் திரண்டு எழுந்துள்ளனர். (இதில் காவல்துறை நடந்துகொண்ட போக்கு வருந்தத்தக்கது. ஏதோ சமாதான சமரசக் கொடியைத் தூக்கிப் பிடிப்பதுதான் காவல்துறையின் வேலையா? தடுத்து நிறுத்தவேண்டாமா?)

கோவையில் தனியார் கல்விக் கூட வளாகத்தில் நடைபெற்ற ‘ஷாகா’ பயிற்சி கழகத்தினரின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சின்னமனூரில் தனியார் பள்ளி ஒன்றின் மைதானத்தில் ‘யோகா’ பயிற்சி என்று சொன்ன காரணத்துக்காக விடுமுறை நாள்களில் அப்பயிற்சியை நடத்திட அப்பள்ளியின் தாளாளர் அனுமதி அளித்துள்ளார்.

பின்னர் அதன் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு அனுமதியை ரத்து செய்துவிட்டனர்.

கழகத் தோழர்களும், மதச் சார்பற்ற அமைப்பினர், கட்சிகளைச் சார்ந்தவர்களும் ஒருங்கிணைந்து ஆங்காங்கே நடைபெறும் ஆர்.எஸ்.எஸின் வன்முறைப் பயிற்சியை முறைப்படி அமைதி வழியில், அறவழியில் தடுத்து நிறுத்த முயற்சிக்கவேண்டும்.

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முளையிலேயே கிள்ளி எறிய ஆவன செய்யவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். அமைதிப் பூங்காவான தமிழ்ப் பூமியை அமளிக்காடாக்கும் முயற்சியை  அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக