திங்கள், 4 ஏப்ரல், 2022

நகர்ப்புற சொத்துவரி உயர்வு அரசாணையை, ரத்து செய்ய வலியுறுத்தி, ஏப்ரல்-6 ல் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்.! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 நகர்ப்புற சொத்துவரி உயர்வு அரசாணையை, ரத்து செய்ய வலியுறுத்தி,

ஏப்ரல்-6 ல் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்.!

தொடர்ந்து இரண்டு வருட கரோனா முழு முடக்கம், அதனால் நாடெங்கும் நிலைகுலைந்து போன தொழில், வணிகம், வேளாண்மை அனைத்தும் இப்பொழுதுதான் மெல்லத் துளிர் விடுகின்றன. பள்ளிகளும், கல்லூரிகளும் அண்மையில் தான் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. கரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு மற்றும் அதன் அச்சம் நீங்கி, மக்கள் மெல்லமெல்ல இயல்புநிலைக்குத் திரும்புகிறார்கள். தங்களிடமிருந்த கையிருப்புகள் எல்லாம் கரைந்து, கடன் கூட வாங்க முடியாத அவலநிலையில் மக்கள் தத்தளிக்கிறார்கள். ரஷ்ய – உக்ரைன் போர், நேட்டோ நாடுகளின் பொருளாதாரத் தடைகள் அனைவரையும் பாதிக்கத் தொடங்கிவிட்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒவ்வொருவரின் பாக்கெட்டையும் தினந்தினம் பதம் பார்க்கிறது.

 ”கையிலே வாங்கினேன், பையிலே போடல, காசு போன இடம் தெரியல” என்ற நிலையில் தமிழக மக்கள் அல்லலுறுகிறபொழுது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பன்மடங்கு சொத்து வரியை உயர்த்தி அரசாணை பிறப்பித்திருக்கிறார்கள். ஒரு சில கிராமங்கள் அல்லது ஒரு பகுதியில் உள்ள மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மக்களுக்குப் பாதிப்பு வரும் எனக் கூறப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கே எதிர்ப்புக் குரல் கொடுத்து வரும் ’தி ஸ்டாக்கிஸ்ட் அரசு’, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 50%-க்கு மேல் வாழக்கூடிய நகர்ப்புறத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதிக்கக்கூடிய சொத்து வரியைத் தாறுமாறாக ஏற்றியிருப்பதேன்? தங்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று கருதக்கூடிய ஒரு மோசமான செயலுக்கு மத்திய அரசின் மீது முழுப்பழியையும் போட்டுத் தப்பித்துக் கொள்ள நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களை ஊழல் படுத்த வீடுவீடாக விதைத்த பல்லாயிரம் கோடிகளை அவர்களிடமிருந்தே அறுவடை செய்யத்தானே இப்பொழுது 600 சதுரடி கொண்ட வீடு முதல் அனைத்து நிறுவனங்களுக்கும் அபரிமிதமான வரி உயர்வை அறிவித்திருக்கிறீர்கள். ’தேர்தல் முடிந்து போயிற்று; தங்கள் காரியம் நிறைவேறிவிட்டது.

மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? தங்கள் நலனே முக்கியம்’ என்ற சுயநலத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு முழுக்க முழுக்கத் தவறானதும், கண்டிக்கத்தக்கதும், மக்கள் விரோத செயலும் ஆகும். எனவே கடந்த 30-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்துள்ள நகர்ப்புற சொத்து வரிa உயர்வு அரசாணையை அடியோடு இரத்து செய்ய வலியுறுத்தி, வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி புதன்கிழமை, தமிழகமெங்கும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினரும், அனைத்து தரப்பினரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக