வியாழன், 14 நவம்பர், 2024

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் - கடற்படை விமான செயல்பாடுகள் மற்றும் விமான பாதுகாப்பு கருத்தரங்கு.


 கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகாவில் நவம்பர் 12-13 தேதிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான விமான பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் வருடாந்திர கடற்படை விமான பாதுகாப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விமான பாதுகாப்பு கருத்தரங்கு நவம்பர் 12 அன்று தொடங்கியது, தலைமை விருந்தினராக, கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

பினாகா (Pinaka) ஆயுத அமைப்பின் சோதனைகளை டிஆர்டிஓ (DRDO) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பி.எஸ்.க்யூ.ஆர் சரிபார்ப்பு சோதனைகளின் ஒரு பகுதியாக துல்லியமாக தாக்கும் பினாகா ஆயுத அமைப்பின் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. வெவ்வேறு துப்பாக்கி சுடும் நிலைகளில் மூன்று கட்டங்களாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை, ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ்

 ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில் மேலும் மோசமாக்குவதா?

 - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள  497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பழங்குடி சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். - பிரதமர் நரேந்திர மோடி

 பகவான் பிர்ஸா முண்டா, நமது சுற்றுப்புறத்தோடு எப்படி வாழ்வது, நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வது எப்படி என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்டு, அவரது கனவுகளை நிறைவேற்றவும், நமது பழங்குடி சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். - பிரதமர் நரேந்திர மோடி

நீரிழிவு நோய்க்கான ஒருங்கிணைந்த சித்த மருத்துவ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனதில் தொடங்கப்பட்டது


 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நீரிழிவு நோய்க்கான ஒருங்கிணைந்த சித்த மருத்துவ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் திருவனந்தபுரம் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் இன்று திறக்கப்பட்டது. 

இந்நிறுவனங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தினுடைய தலைமை இயக்குநர் பேராசிரியர் மரு. திரு என்.ஜெ. முத்துக்குமார் தொடங்கி வைத்து இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் குறிக்கோளை பற்றி விளக்கினார். 

திங்கள், 21 அக்டோபர், 2024

அறிவுசார் கூட்டாளியாக சிங்கப்பூரை இந்தியா பார்க்கிறது, சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்குடன் திரு தர்மேந்திர பிரதான் சந்திப்பு.


 மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கை இன்று சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே பள்ளிக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்தினர். 'திறமை, வளம் மற்றும் சந்தை' ஆகிய மூன்று முக்கிய தூண்கள் மூலம் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசுமுறைப் பயணம்.


 கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 21 முதல் 24 ஆம் தேதி வரை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இருநாடுகளுக்கும் இடையே அனைத்துத் துறைகளிலும் விரிவான, உத்திப்பூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில், இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்தப் பயணம் நோக்கமாக கொண்டுள்ளது.

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் அக்டோபர் 2024-ல் ரூ.1000 கோடி மதிப்புள்ள விற்பனையை எட்டியுள்ளது.

 

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் அக்டோபர் 2024-ல் ரூ.1000 கோடி மதிப்புள்ள விற்பனையை மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டு டிசம்பர், 2023 இல் இந்த இலக்கை எட்டியதை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்த சாதனை மலிவு மற்றும் தரமான மருந்துகள் மீது, மக்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

 நாடு முழுவதும் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்களிலிருந்து மருந்துகளை வாங்குவதன் மூலம், இந்த முயற்சியை ஏற்றுக்கொண்ட மக்களின் அசைக்க முடியாத ஆதரவால் தான் இது சாத்தியமானது. இந்த கணிசமான வளர்ச்சி, கையிருப்பிலிருந்து செலவினங்களைக் குறைப்பதன் மூலம் அனைவருக்கும் சுகாதார சேவையை அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும் மாற்றுவதற்கான உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.  சில நாட்களுக்கு முன்பு, பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் செப்டம்பர் 2024-ல் ஒரே மாதத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள மருந்துகளை விற்றது குறிப்பிடத்தக்கது.

2014-ல் வெறும் 80 ஆக இருந்த மையங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 170 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 14,000-க்கும் மேற்பட்ட மையங்களாக அவை வளர்ந்துள்ளன.

அடுத்த 2 ஆண்டுகளில், நாட்டில் 25,000 மக்கள் மருந்தக மையங்கள் அமைக்கப்படும். பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் தயாரிப்புகளில் 2047 மருந்துகள் மற்றும் 300 அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளன, இதில் இதய ரத்தக்குழாய் மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு, இரத்த சோகை, நீரிழிவு, தொற்று எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, இரைப்பை குடல் மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள் போன்ற அனைத்து முக்கிய சிகிச்சை குழுக்களும் அடங்கும். தினமும் சுமார் 10 லட்சம் பேர், பிரபலமான இந்த மக்கள் நட்பு மையங்களுக்கு வருகை தருகின்றனர்.

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் முன்முயற்சி, சமூகங்களுக்கு தொடர்ந்து அதிகாரம் அளித்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான சுகாதாரத்தை எட்டக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது. சாதனையை முறியடிக்கும் விற்பனை திட்டத்தின் வெற்றியை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், நாட்டில் சுகாதார சமத்துவத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புதன், 4 செப்டம்பர், 2024

வருங்கால சந்ததியினரின் மனதை ஊக்குவித்து, அவர்களை ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் முக்கிய பணி ஆசிரியர்களிடம் உள்ளது. -குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு


 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

வியாழன், 27 ஜூன், 2024

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.


ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் வியாழக்கிழமையுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர் திரு சஞ்சய் சிங், உரிமைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை 2023 ஜூலை 24 அன்று அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே. - மு.க.ஸ்டாலின்

 எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! 

அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட 'விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு' என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம்.

இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே. - மு.க.ஸ்டாலின் 


அலைகளின் தாலாட்டில்.. அண்ணனின் தலைமாட்டில்.. தலைவரின் நினைவிடம்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.

எத்தனையோ நிகழ்வுகளின்போது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களைப் போன்ற உணர்வுடன் அந்தக் கடிதங்களைப் படித்தவன்தான் உங்களில் ஒருவனான நான். இம்மண்ணை விட்டுச் சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்கள் தன் மரணத்திலும் போராளியாக - சுயமரியாதை வீரராகச் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியுடன் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் அவருக்குரிய இடத்தில், அவரது நினைவிடம் கலைத்திறனுடன் உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் திறப்புவிழாவுக்கு உடன்பிறப்புகளாம் உங்களை, உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், கழகத்தின் தலைவராகவும் வரவேற்கக் கடமைப்பட்டுள்ளேன்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். காரணம், யானைதான் காட்டின் வளத்தைப் பெருக்கும். இயற்கையின் சமச்சீரான நிலையைத் தக்கவைக்கும். பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கும். யானை வாழ்ந்ததற்கான அடையாளம் அது நடந்து சென்ற பாதை மட்டுமல்ல, அது உலா வந்த காட்டின் பசுமையும் செழுமையும்தான். தமிழ்நாட்டின் தாய் யானையாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர். 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவர் 80 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தார். இனம் காத்திடப் போராடினார். மொழிகாக்கச் சிறை சென்றார். மக்களின் மனங்களை வென்று 5 முறை முதலமைச்சர் ஆனார். இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார். நவீனத் தமிழ்நாட்டைத் தன் சிந்தனை உளியால் செம்மையுறச் செதுக்கினார். எதிர்காலத் தலைமுறைக்கும் வாழ்வளிக்கும் திட்டங்களை வகுத்தளித்த பிறகே நிரந்தரமாக ஓய்வு கொண்டார்.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், மக்கள் பக்கம் நின்றது. அவர்களின் மனங்களில் குடியேறியது. மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. அந்த அண்ணா நம்மை விட்டு மறைந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் முத்தமிழறிஞர் கலைஞர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் தம்பி என்றவர் அண்ணா. அந்த அண்ணாவின் இதயத்தைக் இரவலாகக் கேட்டவர் தலைவர் கலைஞர்.

“நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா

நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை

உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா”

-என்று இரங்கற்பாவில் இலக்கியம் படைத்தவர் கலைஞர். சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்பதுதான் தலைவரின் அரசியல் இலக்கணம். சொன்னதுபோலவே, அவர் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டபோது, தன் அண்ணனின் அருகிலேயே உறக்கம் கொண்டார். இலக்கியமாய் நிலைத்துவிட்ட, ‘இரவல் கேட்ட இதயத்தை’யும் சொன்னது போலவே, அண்ணாவின் கால்மலரில் வைத்து வரலாற்றைப் படைத்தார்.

வங்கக் கடலோரம் தமிழ் அலைகள் தாலாட்ட 1969-இல் பேரறிஞர் அண்ணா நிரந்தர ஓய்வெடுக்கும்படி இடம் அமைத்துக் கொடுத்தவரே தலைவர் கலைஞர்தான். ஓங்கி உயர்ந்த தூணும், அணையா விளக்கும் கொண்ட அண்ணா சதுக்கத்தை அமைத்தவரும் அவர்தான். தன்னை அரசியல் களத்தில் ஆளாக்கிய அண்ணாவுக்கு மட்டுமல்ல, அரசியல் களங்களில் மற்போர் போல சொற்போர் நடத்தினாலும் தமிழருக்கேயுரிய பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் மாற்று இயக்கத்தின் தலைவர்கள் மறைந்தபோதும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்த அரசியல் பண்பாளர் தலைவர் கலைஞர்.

மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவிடங்களை அமைத்தவர் கலைஞர்தான். எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில், 1975 அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி பிறந்தநாளன்று பெருந்தலைவர் காமராஜர் மரணமெய்திய போது, முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களே மழையையும் சகதியையும் பொருட்படுத்தாமல், கிண்டியில் உள்ள இடத்திற்கு இரவு நேரத்தில் நேரில் சென்று, கார் விளக்கொளியில் ஆய்வு செய்து, அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு மேற்பார்வையிட்டு, அரசு மரியாதையுடன் பெருந்தலைவர் காமராசரின் உடலை எரியூட்டச் செய்து, அந்த இடத்தில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சின்னமான ராட்டைச் சின்னத்துடன் கூடிய நினைவிடத்தை அமைத்தவர் கலைஞர்.

இராமாயணத்தைச் சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி என்பதனால் அவரது நினைவிடத்தை இராமரின் பட்டாபிஷேக மகுடம் போல அமைத்தவரும் கலைஞர்தான். மாற்றுக் கருத்துடையவர்களேனும் அவர்தம் மனம் எதை விரும்பியதோ அதனையே நினைவிடத்தின் அடையாளமாக்கியவர் தலைவர் கலைஞர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்தில் முதன் முதலில் குடை போன்ற வடிவமைப்பை அமைத்தவரும் கலைஞரே. பலருக்கும் நிழல் தருபவராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பதன் அடையாளம் அது.

தேர்தல் களத்துப் பகையை நெஞ்சில் கொள்ளாமல், தன் காலத்துத் தலைவர்களுக்கு, உரிய மரியாதையுடன் நினைவிடம் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர், அவர் விரும்பியபடி கடற்கரையில் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதி தரவில்லை. தம்பிடி இடம் கூடத் தரமாட்டோம் எனக் காழ்ப்புணர்வைக் காட்டினார்கள். கழகத்தினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலைஞருக்குக் கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் எனக் கண்ணீர்க் கோரிக்கை வைத்தது. இரக்கம் சுரக்கவில்லை ஆட்சியாளர்களுக்கு! இரத்தம் கொதித்தது உடன்பிறப்புகளுக்கு! சட்டப் போராட்டத்தைத் தொடங்கினோம். தந்தைக்கு மகன் செய்யும் கடமையாக நினைக்காமல், தலைவருக்குத் தொண்டன் செய்ய வேண்டிய கைம்மாறாக இதனை முன்னெடுத்தேன். விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின், நண்பகல் பொழுதில் நல்ல தீர்ப்பு வந்தது. கடற்கரையில் இடம் ஒதுக்கித் தீர்ப்பளித்தனர் நீதியரசர்கள். தன் அண்ணனிடம் இரவலாகப் பெற்ற இதயத்தை ஒப்படைத்து, சொன்ன சொல் காத்த தம்பியானார் தலைவர் கலைஞர்.

‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று தலைவர் கலைஞரே எழுதித் தந்த தனக்கான கல்லறை வரிகளுடன் கடற்கரையில் அவர் ஓய்வு கொள்ளத் தொடங்கினார். அன்றாடம் ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் அங்கே வந்து கண்ணீரைக் காணிக்கையாக்குவது வாடிக்கை. 2021 தேர்தலில் கழகம் பெற்ற வெற்றியை உயிர்நிகர் தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில்தான் உங்களில் ஒருவனான நானும் காணிக்கையாக்கினேன். தலைவரின் ஓய்விடத்தில் தங்களின் திருமணத்தை நடத்தி, புதுவாழ்வைத் தொடங்கிய வெற்றிகரமான இணையர்கள் உண்டு.  பிறந்த குழந்தையைத் தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் கிடத்தி, குடும்பத்தின் மூதாதையரை வணங்குவது போன்ற வணக்கத்தைச் செலுத்தியவர்கள் உண்டு. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்புநிலை மக்கள் எனத் தலைவர் கலைஞரின் ஆட்சித்திறனால் தங்கள் வாழ்வில் ஒளிபெற்றவர்களின் நன்றி செலுத்தும் இடமாக கலைஞரின் ஓய்விடம் அமைந்தது.

தமிழுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்த தலைவர் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடத்தை ஒரு வரலாற்றுச் சின்னமாகக் கட்டியமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திராவிட மாடல் அரசு அதற்கான செயல்திட்டங்களை வகுத்தது. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடங்கிய இந்தப் பணி, தலைவர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வருவதற்கு முன்பாக நிறைவடைந்துள்ளது.

எதையும் தாங்கும் இதயத்துடன் பேரறிஞர் அண்ணா துயில் கொள்ளும் சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களால் நம் இனிய தமிழ்நாடு பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்றுச் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளன பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடங்கள். முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர் கலைஞருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். அவர் பெற்றுத் தந்த செம்மொழித் தகுதி, அவர் உருவாக்கிய கணினிப் புரட்சி, அவர் கட்டமைத்த நவீனத் தமிழ்நாடு, அவருடைய படைப்பாற்றல், அவரது நிர்வாகத்திறன், இந்தியத் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்ற கலைஞரின் ஆளுமை உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை நிறைவேற்ற அல்லும் பகலும் உழைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையினரின் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது. தமிழினத்தின் உயர்வுக்காக அயராது உழைத்த முத்தமிழறிஞர் கலைஞருக்காக இரவு - பகலாக உழைத்தும், தங்கத்தைப் போல இழைத்தும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த நினைவிடம்.

என்றென்றும் நெஞ்சில் வாழ்ந்து, நம்மை இயக்கக்கூடிய தலைவரின் ஓய்விடம் வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒளி தந்த ஞாயிறான நம் கலைஞரின் ஓய்விடம், திங்கள் மாலையில் திறந்து வைக்கப்படும் நிகழ்வில், அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் உரிமையுடனும் உள்ளன்புடனும் அழைக்கின்றேன்.

“எழுந்து வா.. எழுந்து வா..” என்று கோபாலபுரம் இல்லத்தின் முன்பும், காவிரி மருத்துவமனை அருகே உள்ள சாலைகளிலும் நின்று முழக்கமிட்ட உடன்பிறப்புகள் நீங்கள்தானே..! உங்களின் குரலை இப்போது கடல் அலைகள் அன்றாடம் முழக்கமிடுகின்றன. பேரறிஞர் அண்ணாவை எழுந்து வரச் சொன்னார் தலைவர் கலைஞர். அண்ணா வரவில்லை. கலைஞரை எழுந்து வரச் சொல்கின்றன அலைகள். அவரின் ஓய்வு நிறைவடையவில்லை. தன்னால் வர இயலாவிட்டாலும், தன் உடன்பிறப்புகள் நிச்சயம் வருவார்கள் என்பதைத் தலைவர் கலைஞர் அறிவார். தலைமுறைகள் கடந்த தலைவரான நம் கலைஞர், தமிழ் அலைகளின் தாலாட்டில், தன் அண்ணனின் தலைமாட்டில் ஓய்வெடுக்கிறார். அவரைக் காண வங்கக் கடலோரம் வருக உடன்பிறப்பே!