கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்ற இலக்கை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவர்கள் தினத்தையொட்டி, சென்னையில் குடியரசுத் துணைத்தலைவரை பிரபல சிறுநீரகவியல் துறை நிபுணர் டாக்டர் ஜார்ஜி ஆப்ரகாம் சந்தித்து புத்தகம் ஒன்றை வழங்கினார். அப்போது, மேற்கண்ட கருத்துக்களை திரு.வெங்கையா நாயுடு எடுத்துரைத்தார். “எனது நோயாளிகள் எனது கடவுள் – சிறுநீரகவியல் மருத்துவர் ஒருவரின் பயணம்” (“MY PATIENTS MY GOD- JOURNEY OF A KIDNEY DOCTOR”) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தில் மருத்துவர், கல்வியாளர், ஆய்வாளர் என்ற முறையில் டாக்டர் ஆப்ரகாமின் 40 ஆண்டுகாலப் பயணம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.