இ-ருபி எனும் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது டிஜிட்டல் கட்டணத்திற்கான பணமில்லா மற்றும் தொடர்பில்லா கருவியாகும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நேரடி பலன் பரிவர்த்தனையை இன்னும் அதிக செயல்திறன் மிக்கதாக ஆக்குவதில் முக்கிய பங்காற்றவுள்ள இ-ருபி, டிஜிட்டல் ஆளுகை முறைக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்று கூறினார். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் கசிவுகளற்ற விநியோகத்தில் அனைவருக்கும் இ-ருபி உதவும் என்றுஅவர் கூறினார். மக்களின் வாழ்வை தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் இந்தியா எவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாக இ-ருபி விளங்குவதாக அவர் கூறினார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டை குறிக்கும் அம்ருத் மகோத்சவத்தை நாடு கொண்டாடும் சமயத்தில் இந்த எதிர்காலத்தை மனதில் கொண்ட சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.



