செவ்வாய், 18 ஏப்ரல், 2023

மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போக்குவரத்து அமைச்சர்களுடன் ஆலோசனை


 மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போக்குவரத்து அமைச்சர்களுடன் புதுதில்லியில்  ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முதன்மை செயலாளர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத்தில் சௌராஷ்டிரா- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்   இதனைத் தெரிவித்தார்.  நாட்டின் நூற்றாண்டு கால பழமை மிகுந்த பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும்  மக்களை இணைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.  இந்தியாவின் ஆழமாக வேரோடிய பாரம்பரியங்கள் அதன் வலிமையையும், ஒற்றுமையை பிரதிபலிப்பதுடன்,  எந்த சவாலையும் எதிர்நோக்கி உறுதியுடன் நிற்கும் திறனைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

விண்வெளியில் தொடக்கம் முதல் இறுதி வரையிலான திறனைக் கட்டமைத்துள்ள மிகச் சில நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.- டாக்டர் ஜிதேந்திர சிங்


இந்தியா விண்வெளிப் பொருளாதாரத்தில்  வளர்ந்து வருகிறது என்று ஜி-20 விண்வெளிப் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை  இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ், ஜி-20 விண்வெளிப் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசின் விண்வெளித்துறை ஏற்பாடு செய்திருந்தது.

உள்ளூர் கிராமப்புற பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளில் 46 சதவீதம் பேர் மகளிர். - திரௌபதி முர்மு


 குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி பஞ்சாயத்துகள் ஊக்கப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த பல ஆண்டுகளாக நகர்ப்புறம் விரைவாக வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் இன்றும் கிராமங்களில் வசித்து வருவதாக கூறினார். நகரங்களில் வசிப்பவருக்கும், கிராமங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  கிராமங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் உரிய சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது.- மத்திய இணையமைச்சர் DR. ஜிதேந்திர சிங்


 ஜம்மு - காஷ்மீரில் சர்தார் வல்லபாய் பட்டேலினால் முடிக்கப்படாத பணியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்ற விழாவில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சுதந்திரத்திற்குப் பிறகு 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கியப் பங்காற்றியதாகவும், துரதிர்ஷ்டவசமாக, ஜம்மு - காஷ்மீரைக் கையாள பட்டேலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் உரிய சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தால், இந்தியாவின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும் என அவர் கூறினார். ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது, ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும், இந்த பிரச்சினை இவ்வளவு  ஆண்டுகளாக நீடித்திருக்காது” என்றார்.