புதன், 2 செப்டம்பர், 2020

மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்பு புதிய சமூகநீதி வரலாறு படைக்கும்! - DR.அன்புமணி ராமதாஸ்



மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு  இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற  தீர்ப்பு புதிய சமூகநீதி வரலாறு படைக்கும்!
 - DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்றும், இது தொடர்பான இந்திய மருத்துவக் குழுவின் விதிகள் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 பிரிவுகளில் 1758 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களும், 8 பிரிவுகளில் 42 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1800 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்திய மருத்துவக் கழகம் 2000 ம் ஆவது ஆண்டின் மருத்துவப் பட்ட மேற்படிப்பு விதிகளைக் காரணம் காட்டி இந்த ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய மருத்துவக் குழுவின் விதிகள் செல்லும்  என்றும்  ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மருத்துவர்கள் சங்கம் செய்த மேல்முறையீட்டில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் எந்த ஒரு பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கு மட்டும் தான் உண்டு என்றும், அதை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய மருத்துவக் குழுவுக்கு கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதன் மூலம் கல்வி, சமூகநீதி சார்ந்த விஷயங்களில் மாநில அரசுகளின் உரிமை உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்திய மருத்துவக்குழுவால் பறிக்கப்பட்ட இந்த உரிமையை மீட்டெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு இயக்கங்களை நடத்தியது. மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு  50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி கடந்த 10.03.2018 அன்று சென்னையில் மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்தினார்கள்.

அதுமட்டுமின்றி, இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு பலமுறை கடிதம் எழுதியதுடன், மருத்துவ மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்  நட்டாவை நேரிலும் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தேன். மருத்துவ மாணவர்களின் நலனுக்காக  தொடர்ந்து போராடிய கட்சி என்ற வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு கிராமப்புற மக்களுக்கும் பயனளிக்கும்.

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் மலைப்பகுதி அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டும் தான் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்பதால் மருத்துவர்கள் பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் பணியில் சேருவார்கள். அதுமட்டுமின்றி, 50% ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று விதி இருப்பதால் அரசு மருத்துவமனைகளுக்கு தாராளமாக மருத்துவர்கள் கிடைப்பர். அதனால் கிராமப்புற மருத்துவமனைகளில் அதிக அளவில் பட்ட மேற்படிப்பு முடித்த சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்பதால், ஊரக மக்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைக்கும்.

தமிழகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும்  தரமான மருத்துவமும், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியும் கிடைப்பதற்கு இந்திய மருத்துவக் குழுவின் நடைமுறைக்கு ஒத்துவராத விதிகள் தடையாக உள்ளன. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அத்தடைகளை தகர்க்க பா.ம.க. பாடுபடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக