புதன், 23 செப்டம்பர், 2020

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலின பிரிவிலிருந்து நீக்க வலியுறுத்தி - 2020 அக்டோபர் 06-ல் 10,000 இடங்களில் உண்ணாவிரதம்..! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலின பிரிவிலிருந்து நீக்க வலியுறுத்தி - 2020 அக்டோபர் 06-ல் 10,000 இடங்களில் உண்ணாவிரதம்..!  - டாக்டர் K. கிருஷ்ணசாமி

            தொல்காப்பியத்தில் மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். தாமிரபரணி, வைகை, அமராவதி, பவானி, காவிரி, பாலாறு உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் வேளாண்மையை மட்டுமே பிரதான வாழ்வியல் ஆதாரமாகக் கொண்டு வாழக்கூடிய மக்கள் ஆவர். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிக அடர்த்தியாகவும், பிற பகுதிகளில் பரவலாகவும் உள்ளனர். டில்லி, மும்பை, கல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் அதிக அளவில் வாழ்கிறார்கள். அண்டை நாடான இலங்கையில் மலையகம் என்று அழைக்கப்படக்கூடிய பகுதியில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களாகவும், அந்நாட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் திரளாக உள்ளனர். அதே போன்று மலேசியா, பர்மா, ஃபிஜி தீவுகள், ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். 

தமிழ் மண்ணில் நில உடைமையாளர்களாக வாழ்ந்த இம்மக்களின் நிலங்கள், அன்று தமிழகத்தில் தோன்றிய சோழ அரசுகளாலும், அதற்கு பின்பு இஸ்லாமியர் மற்றும் விஜயநகர பேரரசுகளில் படையெடுப்புகளாலும் பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே நிலமற்ற வறியவர்களாகப் பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களுடைய வறுமைநிலை ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு பிரிட்டிஷ் அரசால் DC (Depressed Classes) பிரிவில் சேர்க்கப்படும் போதே, 1920-களில் அன்றைய தேவேந்திரகுல வேளாளர் அமைப்புகளின் சார்பாக இப்பிரிவில் சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்

வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்"

– என்று திவாகர நிகண்டும்,

"செருமலை வீரரும் திண்ணியோரும்

மருதநில மக்களும் மள்ளர் என்ப"

               -  என்று பிங்கல நிகண்டும் சொல்கின்றன.

           இவ்வாறு இலக்கியங்களில் சொல்லப்பட்ட மக்களை DC பிரிவில் சேர்த்ததையும், அதைத் தொடர்ந்து  SC பிரிவில் சேர்த்ததையும் வரலாற்றுப் பிழையாகவே தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் ஓரிரு சதவிகிதம் பேர் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் கூட, இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அனுகூலமாக இல்லை. மாறாக  தடைக் கல்லாகவே இருந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இடம் பெற்றிருக்கக்கூடிய சாதிகள் இடஒதுக்கீட்டின் பயனையும் பெற்றுக் கொண்டு, தங்களுடைய சாதிய அடையாளங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது; வளர்ச்சியும் அடைய முடிகிறது. ஆனால், SC பிரிவில் 77 சாதிகள் இடம் பெற்றிருந்தாலும் கூட, கடந்த 70 ஆண்டு காலத்தில் 77 சாதிகளும் ஒரே சாதியாகவே முத்திரை குத்தப்பட்டு விட்டன. தாழ்த்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், அட்டவணைப் பிரிவினர், தலித்துகள், அரிஜன்கள் என்ற வேண்டத்தகாத முத்திரைகள் வலிந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மீது சுமத்தப்பட்டதால், அம்மக்கள் தங்களது அடையாளத்தை முற்றாக இழக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் அந்த சமுதாயத்தின் வரலாறும், அடையாளமும் மிக மிக முக்கியம். முகவரியற்ற சமுதாயங்கள் வளர்ச்சி அடைந்த வரலாறுகள் இல்லை. தாழ்த்தப்பட்டோர் என்ற முத்திரையால் தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய 100 ஆண்டுகால பன்முக வளர்ச்சி தடைப்பட்டு இருக்கிறது. எனவே தான், குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தார், கடையர், பள்ளர் என்ற ஆறு பிரிவுகளையும் ஒன்றாக்கி ”தேவேந்திரகுல வேளாளர்கள்” என அரசாணை பிறப்பிக்கவும், இப்பொழுது அவர்கள் இடம்பெற்றிருக்கக் கூடிய பட்டியலின பிரிவிலிருந்து நீக்கிடவும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். புதிய தமிழகம் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக இம்மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மட்டுமின்றி மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவும் முன்னெடுத்துச் செல்கிறது.

          27.01.2019-அன்று மதுரையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள், ”தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற ஆக்கப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும், தென்காசி உட்பட அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரத்தின் போது,    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் "தேர்தல் முடிந்தவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும்" எனவும் வாக்குறுதி அளித்தார்கள். அதன் காரணமாக, தேவேந்திரகுல வேளாளர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளில் அம்மக்கள் பெருவாரியாக வாக்களித்து, 5 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து ஆட்சியைத் தக்க வைக்க உறுதுணையாக நின்றார்கள். ஆனால் ஒன்றரை வருடங்கள் ஆகியும் வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. 

எனவே தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10,000 இடங்களில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரும் அக்டோபர் 06-ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழக்கூடிய ஒவ்வொரு பகுதியிலும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் என  அனைவரும் பெரும் திரளாகக் கலந்து கொள்ள உள்ளனர். இந்த உண்ணாவிரத்தை வெற்றிகரமாக நடத்த புதிய தமிழகம் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக