புதன், 16 செப்டம்பர், 2020

விவசாய மின் இணைப்புகள் நடைமுறையில் தேவையான மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.- E.R.ஈஸ்வரன்,



விவசாய மின் இணைப்புகள் நடைமுறையில் தேவையான மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெற வேண்டுமென்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இல்லையெனில் பணம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நடைமுறை தான் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வந்தது. அதேபோல இலவச மின் இணைப்புக்கான சட்டத்திட்டங்களும், நடைமுறை சிக்கல்களும் ஏராளம். இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று ஏங்காத விவசாயிகள் கிடையாது. இப்போது அதற்கெல்லாம் விடிவுகாலம் பிறந்திருக்கிறது. 

பல ஆண்டுகளாக விவசாய மின் இணைப்பில் விவசாயிகள் எதிர்பார்த்த சட்டத்திட்ட திருத்தங்களும், நடைமுறை சிக்கல்களும் தீர்த்து வைக்கப்பட்டு தற்போது புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகளின் நிலைமையை புரிந்துக்கொண்டு விவசாய மின் இணைப்பில் தேவையான மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் திரு.சந்திரசேகர் அவர்கள் தலைமையிலான குழுவிற்கு விவசாயிகள் சார்பாகவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறை எவ்வளவுக்கு எவ்வளவோ எளிமையானதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளோ விவசாயம் மேம்படும். மின் இணைப்பு இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாமல் எத்தனையோ விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த புதிய மாற்றங்கள் மிகுந்த பலனளிக்கும். விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பல வருடங்களாக காத்திருந்தும் மின் இணைப்பு கிடைக்காததால் பல பேர் விவசாய நிலங்களை விற்பனை செய்ததையும், அதை வீட்டுமனைகளாக மாற்றியதையும் நாம் அறிவோம். தற்போது கொண்டு வந்த மாற்றங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைமுறைப்படுத்தி இருந்தால் தமிழகத்தில் விவசாய உற்பத்தி இன்னும் பல மடங்கு பெருகியிருக்கும்.

 விவசாயிகளுக்கு இந்த புதிய மாற்றங்கள் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கைகளுக்கு செவிசாய்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக