புதன், 9 செப்டம்பர், 2020

பட்டாசுத் தொழிலாளர்களின் உடலும், உயிரும் கணிசமான தொகைக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

தொடர்கதையாகும் தீ விபத்துகள்..!

பட்டாசுத் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போவதா?

 - டாக்டர் K. கிருஷ்ணசாமி,

கடலூர் மாவட்டம், குறுங்குடி பகுதியில் பட்டாசு வெடி விபத்தில் தன்னுடைய இன்னுயிரை நீத்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பலத்த காயமுற்றோருக்கு உயர்தர நவீன சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும்; தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

பாதுகாப்பான முறையில் மட்டுமே உற்பத்தி நடைபெற வேண்டும் எனச் சட்ட விதிமுறைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுத் தொடர்ந்து பட்டாசு தொழில் நடைபெறுகிறது. இதனுடைய தொடர்ச்சி தான் கடலூர் மாவட்ட விபத்து. ஒன்று பணியில் ஈடுபடக் கூடியவர்களுக்கு விழிப்புணர்வு போதுவதில்லை அல்லது பணியிடங்கள் பாதுகாப்பாக இருப்பதில்லை, அதுமட்டுமின்றி தடைசெய்யப்பட்ட இரசாயன பொருட்களை ரகசியமாகப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்கள் பட்டாசு தொழிலில் ஈடுபடக்கூடியவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைகின்றன.

கடலூரில் குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள், எப்படி குழந்தைகள் வேலையில் அமர்த்தப்பட்டார்கள்? என்பது பெரிய கேள்வி. உச்சநீதிமன்ற உத்தரவால் ஏற்கனவே பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நிகழுமேயானால் பட்டாசு தொழிலை நிறுத்தக்கூடிய சூழல் கூட உருவாகலாம். எனவே, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசு மற்றும் நிறுவனங்களின் தலையாய பொறுப்பாகும். பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்துகளில் உயிரிழப்புக்குக் கொடுக்கக்கூடிய நட்ட ஈடு அற்ப சொற்பமானவைகளாகவே உள்ளன.

அரசு இதில் ஏதாவது ஒரு விதிமுறைகள் அடங்கிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சாத்தூர் அருகே சிப்பிப்பாறை என்ற கிராமத்தில் நடந்த பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு வெறும் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தது, நிறுவனம் கொடுத்த காசோலையும் போலியாகிவிட்டது. ஏழை, எளிய மக்களை இப்படி மோசமாக நடத்துவது மத்திய, மாநில அரசுகளுக்கு அழகல்ல.

கடலூர் பட்டாசு விபத்திற்கும் ரூபாய் இரண்டு இலட்சம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் போதுமானது அல்ல, இறந்தவர் குடும்பத்திற்குக் குறைந்தது தலா ரூ 25 இலட்சம் வழங்க வேண்டும். முழுமையான காப்பீடு இல்லாமல் இது போன்ற ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளில் பணிபுரிய எவரையும் அனுமதிக்கக் கூடாது. மற்றவர்களுக்கு மகிழ்ச்சிக்காகவும்,  கொண்டாட்டத்திற்காகவும் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளால் இனிமேல் எந்த ஒரு பிரஜையும் தன்னுயிரை இழக்கக்கூடாது. எனவே, தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் பட்டாசு உற்பத்தி, விற்பனை நடந்தாலும் அது முழு பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டும். பாதுகாப்பான விதிமுறைகளையும் மீறி உயிரிழப்புகள் நடைபெற்றால் குறைந்தது ரூ 25 இலட்சம் நட்ட ஈடு வழங்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களின் உடலும், உயிரும் கணிசமான தொகைக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். பட்டாசுத் தொழில் பாதிப்பை உண்டாக்காது, பாதுகாப்பானது என்ற நிலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக