செவ்வாய், 22 செப்டம்பர், 2020

கொரோனா பாதிப்பிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்


 கொரோனா பாதிப்பிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

பொருளாதார நடவடிக்கைகளை மேலும் முடக்கினால் மக்களின் வாழ்வாதாரம் மீளமுடியாத பள்ளத்தில் தள்ளப்படும் என்கின்ற காரணத்தினால் கொரோனாவுக்காக போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் கொஞ்சம் கூட குறையாமல் அதே வீரியத்தோடு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தினுடைய அனைத்து பகுதிகளிலுமே கொரோனாவின் தாக்கம் இருந்து கொண்டிருக்கிறது. கொரோனாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

 ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்ற நினைப்பு பொதுமக்களுக்கும்,  அரசாங்கத்திற்கும் வந்து விடக்கூடாது. கொரோனா பரவல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து எளிதாக பரவக்கூடிய நிலை வந்திருக்கிறது. 10 பேர் பாதிக்கப்பட்ட போது இருந்த பயம் 10000 பேர் பாதிக்கப்படும் போது இல்லாமல் இருப்பது அச்சத்தை உருவாக்குகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தனிமனித இடைவெளியும், முக கவசம் அணிகின்ற பழக்கமும் தீவிரமாக கடைபிடிக்கப்பட வேண்டும். 

இந்த விஷயங்களில் அரசு மெத்தனமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அரசு பேருந்துகளில் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை காண முடிகிறது. அரசின் கவனக்குறைவு மக்களை அச்சமில்லாமல் அனைத்து இடங்களிலும் கூட வைக்கிறது. அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்படுகின்ற எச்சரிக்கைகளும் குறைந்த வண்ணம் இருக்கிறது. மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இழப்புகளை சந்திப்பதை தவிர்க்க வேண்டுமென்றால் தயவுசெய்து தனிமனித இடைவெளியும், முக கவசம் அணிகின்ற பழக்கத்தையும் கொஞ்சம் கூட தளர்வு இல்லாமல் கடைபிடிக்க வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக