செவ்வாய், 10 டிசம்பர், 2019

முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி

"எங்கள் தலைவர் மீது முதலமைச்சர் வீண்பழி சுமத்துவது 'கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவோரின்' கூச்சலாக மட்டுமே இருக்க முடியும்"
- ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
(அமைப்புச் செயலாளர், திமுக.)

“தி.மு.க. தேர்தலைக் கண்டு பயப்படுகிறது” என்றும், “மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் எங்கள் கழகத் தலைவர்” என்றும் நா கூசாமல் பேட்டி ஒன்றே அளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


“உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் செய்து” - “உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு எல்லாவற்றிலும் குழப்பம் செய்து” - “ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி தேர்தல் நிதிக்கு கொள்ளையடிக்க முடியுமா” என்று 'அரசியல் ஆதாயத்தை' மட்டுமே அடிப்படைச் சொத்தாக வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு எங்கள் கழகத் தலைவர் பற்றி கேள்வி எழுப்ப எவ்வித தார்மீக உரிமையோ தகுதியோ இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ன கேட்கிறது? “உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி, சட்ட நெறிமுறைகளின் படி நடத்துங்கள்” என்று மட்டுமே கோரிக்கை வைத்துள்ளது.

தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.,வின் நோக்கம் என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவசர கோலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எவ்வித சட்ட நெறிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றாமல் 'குழப்பங்களின் கோபுரத்தில்' நின்று கொண்டு “நாங்கள் தேர்தலை நடத்தத் தயார்” என்று முதலமைச்சர் கூறுவது பொய் என்பது நேற்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானத்தில் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதில் சொல்ல வழியில்லாத முதலமைச்சர், எங்கள் தலைவர் மீது வீண் பழி சுமத்துவது 'கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவோரின்' கூச்சலாக மட்டுமே இருக்க முடியும், கொள்கை ரீதியிலான அல்லது சட்ட ரீதியிலான வாதமாக நிச்சயம் இருக்க முடியாது.

வார்டு மறுவரையறை என்று ஒரு ஆணையத்தை நியமித்து - அதில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மாவட்ட ரீதியாக கொடுத்த ஆட்சேபனை மனுக்களை எல்லாம் கிடப்பில் போட்டு 'வார்டு மறு வரையறை' ஆணை வெளியிட்டது யார்?

  • குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே புதிய மாவட்டங்களை பிரித்தது யார்?


  • அரசியல் சட்டப்படியான இட ஒதுக்கீடு பற்றி ஆணை வெளியிடாமல் குழப்பம் செய்வது யார்?


“மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் அரசியல் சட்டம் அளித்துள்ள கட்டளைகளை நிறைவேற்ற அரசால் முடியாது” என்று உச்சநீதிமன்றமே தெரிவித்தப் பிறகும், அவசர அவசரமாக - அரசியல் கட்சிகளைக் கூட கலந்து பேசாமல் - இடஒதுக்கீடு வெளியிடாமல் மீண்டும் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது யார்?

எல்லாவற்றுக்குமே இதுவரை மாநில தேர்தல் ஆணையர் திரு. பழனிசாமி காரணம் என்று நினைத்திருந்தோம். இப்போது மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி பதில் சொல்கிறார் என்றால் - அந்த திரு. பழனிசாமிக்காக இந்த திரு. பழனிசாமிதான் மாநில தேர்தல் ஆணையத்தை சட்டவிரோதமாக செயல்பட வைத்துள்ளார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

'யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தடை பெற வேண்டும்' என்பது மட்டுமே துவக்கத்திலிருந்து முதலமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. அதிலும் ஊரக உள்ளாட்சிக்கு மட்டுமே தேர்தல் என்ற அறிவித்ததிலும் 'ஊழல்' மூலம் தேர்தலுக்கு நிதி திரட்டும் ஒரு யுக்தியும் ஒளிந்து கிடக்கிறது. அதனால்தான் தேர்தல் நிதி திரட்ட ஊழல் செய்வதற்கு தி.மு.க. அனுமதி மறுக்கிறதே என்ற கோபத்தில் எங்கள் கழகத் தலைவர் மீது ஏதேதோ 'புலம்பல்களை'யும், 'பொய்களை'யும் கற்பனை உலகில் இருந்து கொண்டு அவிழ்த்து விடுகிறார் முதலமைச்சர்.

ஆனால், முதலமைச்சர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு என்று பஞ்சாயத்து ராஜ் சட்டம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட உள்ளாட்சி சட்டங்கள், சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி நடத்த முன்வராத அ.தி.மு.க. அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் கண்டித்துத்தான் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்குத் தொடுக்கிறது தி.மு.க.

முதலமைச்சர் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு உள்ளாட்சித் தேர்தல் ஒன்றும் அ.தி.மு.க.,வின் உள்கட்சித் தேர்தலும் இல்லை; எடப்பாடி திரு. பழனிசாமி முதலமைச்சராவதற்கு காரணமான 'கூவத்தூர்' தேர்தலும் அல்ல!

ஆகவே, “உள்ளாட்சித் தேர்தலை அரசியல் சட்ட கட்டளைப்படி இந்த அரசு நடத்த முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதே மாநில தேர்தல் ஆணையரும், குறைந்தபட்சம் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் முதலமைச்சர் மக்கள் மன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

அதை விடுத்து திட்டமிட்டு, சதிசெய்து உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டிட மூன்று வருடங்களாக ஒவ்வொரு குழப்பத்தையும் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த சட்டப் போராட்டம் நடத்தி வரும் எங்கள் கழகத் தலைவர் பற்றி குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் கழகத் தலைவர் சொல்லி திருந்தவில்லை என்றாலும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மனதில் வைத்தாவது உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்துவதற்கு முதலமைச்சர் 'மனம் திருந்த வேண்டும்' என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக