செவ்வாய், 10 டிசம்பர், 2019

மத்திய மாநில அரசுகள் பதக்கம் பெற்றிருக்கின்ற வீரர் வீராங்கனைகளை கவுரவப்படுத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.- ஜி.கே.வாசன்

நேபாளில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 138 தங்கம், 80 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என்று மொத்தம் 260 பதக்கங்களை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.
- ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா)

நேபாள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதகங்களை குவித்து வருவது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது.


பதக்கங்களை பெற்றிருக்கின்ற தமிழக வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அனைவரையும் த.மா.கா சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

குறிப்பாக பெண்களுக்கான பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா பவுன்ராஜ் தங்கம் வென்று தமிழகத்துக்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.

மேலும் இந்த தெற்காசிய விளையாட்டு வாலிபால் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியபோது பாகிஸ்தானை வென்று தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறது.

இந்திய வாலிபால் அணிக்கு தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெரோம் வினித் அவர்கள் தலைவராக இருந்து அணியை வழி நடத்திச் சென்று திறமையாக விளையாண்டு வெற்றி கண்டிருக்கிறார்கள்.

இதனால் தமிழகத்தின் விளையாட்டுத்திறமை தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் மூலம் உலக அளவில் மேலும் பரவுகிறது. அதே போல பெண்கள் கபடி மற்றும் கால்பந்து பிரிவுகளில் இந்திய அணிகள் தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றிருக்கிறது.

இப்படி இந்தியாவின் விளையாட்டு வீரர் விராங்கனைகள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று தாய் நாட்டின் விளையாட்டுத் திறமைக்கு மென்மேலும் பெருமை சேர்த்து வருகிறார்கள். நேபாளில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 138 தங்கம், 80 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என்று மொத்தம் 260 பதக்கங்களை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. மத்திய மாநில அரசுகள் பதக்கம் பெற்றிருக்கின்ற வீரர் வீராங்கனைகளை கவுரவப்படுத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியா சார்பில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ள வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்ளை பெற்று இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்க வேண்டும், தாங்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக