வியாழன், 19 டிசம்பர், 2019

எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்

எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களுக்கு பணப்பயன்கள் தொடர்ந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி.கே.வாசன் 

எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை அனல்மின் நிலைய அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். எண்ணூர் அனல்மின் நிலையம் 1970ம் ஆண்டு மின் உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது. 


இந்த நிலையத்தின் மின் உற்பத்தி மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின் விநியோகிக்கப்பட்டது. இந்த மின்நிலையம் அமைக்கப்பட்டு 47 ஆண்டுகளை கடந்த நிலையில் மின் உற்பத்தி செய்யும் உலையில் ஏற்பட்ட பழுதால் அங்கிருந்த அலகுகள் மூடப்பட்டன. இதனால் இங்கு பணிபுரிந்த 470 ஊழியர்களை வடசென்னையில் உள்ள அனல்மின் நிலைய அலகு 1 மற்றும் அலகு 2 விற்கு பணியிடமாற்றம் செய்தனர்.

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் பணப்பயன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் ஊழியர்களை இடம் மாற்றிய பிறகு அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கடன், ஈடுகட்டும் விடுப்பு சரண்டர் உள்ளிட்ட பணப்பயன்கள் கடந்த பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஊழியர்களுக்கான பணப்பயன்கள் கிடைக்காத காரணத்தால் பொருளாதர சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே அனல்மின் நிலைய அதிகாரிகள் உடனடியாக ஊழியர்களுக்கு உரிய பணப்பயன்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணப்பயன்கள் காலத்தே கிடைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்து ஊழியர்கள் நலன் காக்க வேண்டும். மாநிலத்தின் மிக முக்கியமான மின் உற்பத்தி நிலையமான எண்ணூர் அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி திறன் மேம்படவும், ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக