சனி, 29 ஜனவரி, 2022

‘‘எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் பதவி உயர்வுபற்றி முடிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு'' - அதன்படி செயல்படுக! - கி.வீரமணி

 ‘‘எஸ்.சி., எஸ்.டி.,  சமூகத்தவர் பதவி உயர்வுபற்றி முடிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு'' - அதன்படி செயல்படுக! - கி.வீரமணி

வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத்தின் இன்றைய சமூகநீதித் தீர்ப்பு!

ஒடுக்கப்பட்ட சமூக மக்களான எஸ்.சி., எஸ்.டி., போன்ற ஆதிதிராவிடர், பழங்குடி சமூக மக்கள் உத்தியோக மண்டலத்தில் பெரிய பதவிகளில் பெரிதும் இல்லாத நிலையில், பதவி உயர்வு அவர்களுக்குத் தருவதுபற்றி எழுந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அன்று (28.1.2022) அளித்துள்ள தீர்ப்பின்படி, மாநில அரசுகளே இதுபற்றி முடிவு எடுக்க முழு உரிமை பெற்றவை; அந்தந்த மாநில அரசுகள், அச்சமூக மக்கள், அப்பதவிக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கிறார்களா என்ற தகவல்களைத் திரட்டி, அதனடிப்படையில் முடிவு எடுக்க அம்மாநில அரசுகள் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்படுத்தலாம் என்று வழங்கியுள்ள தீர்ப்பு, வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்.

காலங்காலமாக உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட அடித்தட்டு சமூக மக்களுக்குப் பதவி உயர்வு தந்து, பெரிய பதவிகளிலும்கூட போதிய பிரதிநிதித்துவம் (Adequate representation) இருக்கச் செய்வதே உண்மையான சமூகநீதியாகும்.

ஏற்கெனவே நீண்ட காலத்திற்குமுன் உச்சநீதிமன்றம், ரங்காச்சாரி Vs மாநில அரசு என்ற வழக்கில், ‘நியமனம்' (Appointment) என்பது ‘ பதவி உயர்வையும்' (Promotion) சேர்ந்ததே என்று தீர்ப்பளித்துள்ளது என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதன்மூலம் இட ஒதுக்கீடு - சமூகநீதி மாநில அதிகாரத்திற்கே உள்பட்டது என்பது மேலும் விரிவாகவும், தெளிவாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக