சனி, 29 ஜனவரி, 2022

முல்லைப்பெரியாறு:பாதுகாப்பு ஆய்வுக்கு முன் பேபி அணையை வலுப்படுத்துவதற்கு மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

 முல்லைப்பெரியாறு:பாதுகாப்பு ஆய்வுக்கு முன் பேபி அணையை வலுப்படுத்துவதற்கு மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும்!

 -  DR.S.ராமதாஸ்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மனநிறைவு அளிக்கும் வகையில் இருப்பதாகவும், அதே நேரத்தில் அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது  என்றும் மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின்  பாதுகாப்பு குறித்த ஆய்வு அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், அந்த ஆய்வு  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான அடித்தளமாக  அமைய  வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்து புதிதாக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில்  வரும் பிப்ரவரி 2-ஆம் நாள் இறுதி விசாரணைக்கு வருகின்றன. அதற்கு முன் மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் அதன் துணை இயக்குனர் ராகேஷ்குமார் கவுதம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,‘‘முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகளை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, அடிக்கடி அணையை ஆய்வு செய்து அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை அளித்துள்ளது. ஆனாலும், 2010-12 காலத்திற்குப் பிறகு அணை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அதனால் முல்லைப் பெரியாறு அணையில் அறிவியல்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி கேரள அரசு அடிக்கடி பரப்பும் வதந்திகளைத் தடுக்க அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாகும்.

ஆனால், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சில முக்கியப் பணிகள் உள்ளன. அதுகுறித்தும் ராகேஷ்குமார் கவுதம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பேபி அணையை வலுப்படுத்த அந்த அணைக்கு கீழ் உள்ள 15 மரங்கள் தடையாக இருப்பதால் அவற்றை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசால் பல ஆண்டுகளுக்கு முன் விடுக்கப்பட்ட கோரிக்கையை கேரள அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் மத்திய நீர்வள ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு சிக்கல் இன்னும் தீராமல் நீடித்துக் கொண்டே செல்வதற்கும் இது தான் காரணமாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் ஓர் அங்கமான பேபி அணையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை செய்து முடிப்பதற்கு முன்பாக அணையை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்துவது வீண் வேலையாகவும், முல்லைப் பெரியாறு அணை சிக்கலுக்கு சுமூகத் தீர்வு காணப்படுவதை தாமதப்படுத்தும் செயலாகவும் தான் இருக்கும். அதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்மட்ட அளவு 152 அடியாகவே இருந்து வந்தது. 1979-ஆம் ஆண்டில் அணையின் வலிமை குறித்து கேரள அரசு ஐயங்களை எழுப்பியதால் அணையின் நீர்மட்டத்தை அப்போதைய தமிழக அரசு, முதலில் 142 அடியாகவும், பின்னர் 136 அடியாகவும் குறைத்தது. அதன் பின்னர் அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், பேபி அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு 152 அடியாகவும் உயர்த்தலாம் என்று 2006-ஆம் ஆண்டிலும், 2014-ஆம் ஆண்டிலும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அணையை வலுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு குழுவையும் நீதிமன்றம் அமைத்தது.

கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், பேபி அணையையும், மண் அணையையும் வலுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாதது தான் அதற்குக் காரணம். பேபி அணைக்கு அருகில் உள்ள 15 மரங்களை வெட்டினால் தான் அந்தப் பகுதியில் பேபி அணையை வலுப்படுத்த முடியும். அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கும்படி கேரள அளவுக்கு கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியும் அதை கேரள அரசு செய்யவில்லை. காரணம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதை கேரள அரசு விரும்பவில்லை.

இத்தகைய சூழலில் அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தப்பட்டால், அது முடிவடைய இரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது. அறிவியல்பூர்வ ஆய்வு முடிந்த பிறகு அணையை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் கூட, அதன்பிறகு அணை 152 அடி நீர்மட்டத்தை தாங்குமா? என்பதை உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு தான் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகிவிடும். முல்லைப் பெரியாறு சிக்கல் அவ்வளவு காலம் நீடிக்கக்கூடாது.

மாறாக, பேபி அணையை வலுப்படுத்த தடையாக இருக்கும் 15 மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டால், ஓராண்டிற்குள் அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு முடித்து விடும். அதன்பிறகு  அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அணை வலிமையாக உள்ளதா? அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாமா? என்ற இரு வினாக்களுக்கும் விடை கிடைத்து விடும். அதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டு விடும்; முல்லைப் பெரியாறு சிக்கலும் நிரந்தரமாக தீர்ந்து விடும்.

எனவே, பேபி அணைப் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட முதலில் அனுமதிக்க வேண்டும்; பேபி அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு தான், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும். அதன்மூலம் முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 152 அடியாக முன்கூட்டியே உயர்த்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக